துறையூரில் ஒரே இரவில் 4 நகைக்கடைகள் உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் திருட்டு ! நள்ளிரவில் ரவுண்டு கட்டி அடித்த கொள்ளையர்கள். வீடியோ லிங்
துறையூர் நகரில் ஒரே இரவில் 4 நகைக்கடைகள் உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் திருட்டு. நள்ளிரவில் ரவுண்டு கட்டி அடித்த கொள்ளையர்கள்.
பரபரப்பான பகுதியில் நடந்த சம்பவத்தால் மக்கள் பீதி.
திருச்சி மாவட்டம், துறையூர் நகரில் கடந்த ஒரிரு மாதங்களில் பட்டப்பகலிலேயே திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வெளியூர் செல்வதற்கே மிகவும் தயக்கம் காட்டி வரும் சூழ்நிலையில், மிகவும் பரபரப்புடன் காணப்படும் காய்கறி மார்க்கெட் அதன் அருகில் உள்ள தெற்கு மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள நகைக் கடைகள் உள்ளிட்ட 6 இடங்களில் மர்ம நபர்கள் நள்ளிரவில் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். துறையூர் ஆலமர சந்து ஜெகதீசன் என்பவரின் மகன் பாஸ்கர் (46) அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் பிரபு(39) என்பவரும் நகைக்கடை நடத்தி வருகின்றனர்.
22.11.2022 இரவு வழக்கம் போல் 8 மணியளவில் கடைகளை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் இருவரின் கடைகளும் திறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் தகவல் அளிக்க , அங்கு வந்த பாஸ்கர் மற்றும் பிரபு தங்கள் நகைக் கடைஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு, மர்ம நபர்கள் கடையில் இருந்த நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இருவரது நகைக் கடையிலும் சுமார் 11 பவுன் தங்க நகைகளும், 15 கிலோ வெள்ளி பொருட்களும் , ரொக்கம் 20 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து எதிரில் உள்ள மற்றொரு நகை கடை, பெரியகடைவீதி உள்ள நகைக் கடை ஒன்றிலும் திருட முயற்சித்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள எசன்ஸ் கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் ஆகிய இடங்களில் சுமார் 10 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அருகில் உள்ளமுத்துமாரியம்மன் கோவில் பூட்டுக்களை உடைத்து திருட முயற்சித்துள்ளனர்.
ஆள் நடமாட்டம் தெரிய வர அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான பகுதியில் தொடர்ந்து 6 இடங்களில் மர்ம நபர்கள் தங்களின் கைவரிசையை காட்டியுள்ள சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சஞ்சீவி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
வீடியோ லிங்
மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள கடையின் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் கடை ஷட்டரின்பூட்டை உடைத்து உள்ளே நுழையும் திருடன் தலையில் தொப்பி, முகத்தில் கண்ணாடி, டிரவுசர் டி ஷர்ட் அணிந்து கையில் டார்ச் லைட்டுடன் கடையின் உள்ளே நோட்டமிடுவதும், பின்னர் வெளியில் சென்று உதவிக்கு மற்றொரு நபரை அழைத்து வருவதும் அந்த நபர் வேஷ்டி சட்டை , முகக் கவசம் அணிந்தபடி , கையில் இரும்பு மற்றும் செல்போனுடன் நுழைந்து சாவகாசமாக பணத்தை அங்கிருந்த பிளாஸ்டிக் பையில் அள்ளிச் செல்வதும் தெள்ளத்தெளிவாகப் பதிவாகியுள்ளது.
துறையூர் நகரில் இரவு ரோந்துப் பணிகளில் ஈடுபடும் போலீஸார் தங்களது செல்போனில் கூகுள் மேப் உதவியுடன் தாங்கள் எந்தப் பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளோம் என்பதை அந்தப் பகுதியை படமெடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலையில், அவ்வாறு தங்கள் ரோந்துப் பகுதியை போட்டோ எடுத்து அனுப்பி விட்டு , முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா மற்றும் நகர எல்லைப் பகுதிகளுக்கு செல்லும் போலீஸார் அங்கு வருகின்ற மணல் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களை மறித்து அடாவடியாக பணம் வசூலித்து கல்லா கட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், மற்ற விஷயங்களிலும் இரவுப் பொழுதைக் கழிப்பதாகவும், பட்டப்பகலிலேயே கொள்ளை சம்பவம் நடைபெற்றும் போலீசார் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீடியோ லிங்
துறையூர் நகரப் பகுதிகளில் நடந்து வரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– ஜோஸ்