காசு கொடுத்து யாரும் போயிடாதீங்க… பரிதாபத்தில் திருச்சி கோளரங்கம்… நேரடி அனுபவம் ! ..
வேணாம்… காசு கொடுத்து யாரும் போயிடாதீங்க… திருச்சி கோளரங்கம் ரொம்ப மோசம் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்க… பிளீஸ்
திருச்சி- புதுக்கோட்டை பிரதான சாலையில் விமான நிலையத்துக்கு அருகில் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது அண்ணா அறிவியல் மைய கோளரங்கம்.
சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இம்மையத்தில், ஒரு காணொலி (பதிவுசெய்யப்பட்ட விடியோ) காட்சிக்கூடம், ஒரு அரங்கம், அறிவியல் பொருள்கள் காட்சிக்கூடம், அறிவியல் பூங்கா, மூலிகைப்பூங்கா உள்ளிட்டவை 3 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து கோள்களையும், அங்குள்ள சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் பார்த்து செல்வது வழக்கம் தற்போது கோளரங்கத்திற்கு நுழைவதற்கு பெரியவர்களுக்கு ரூ.45, 3 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.25 வசூல் செய்யப்படுகிறது.
இப்ப இந்த கோளரங்கம் எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்த்த பார்வையாளர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்… அதை அப்படியே தருகிறோம்… உள்ளே நுழைந்ததும் பெரியவர்களுக்கு 45 ரூபாய் டிக்கெட், சிறியவர்களுக்கு மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 25 ரூபாய் டிக்கெட் வாங்கிவிட்டு உள்ளே நுழைந்தோம்.
வலது புறம் உள்ள கட்டிடத்தில் மேலே ஏறி சுற்றிப் பார்த்தோம். பெரும்பாலும் அவர்கள் வைத்திருக்கும் அறிவியல் கண்காட்சி 80 சதவீதத்திற்கு மேல் பழுதடைந்து அல்லது அவர்கள் வைத்திருக்கும் போட்டோக்கள் மங்கிப்போய் இருந்தது.
என்னடா இப்படி ஆகிவிட்டதே என்று வெளியே வந்தோம். வாட்ச் மேன் இடம், யாரிடம் கம்ப்ளைன்ட் செய்வது என்று கேட்டோம். என்ன விஷயம் என்று கேட்டார். இதுபோல உள்ளே ஒன்றும் வேலை செய்யவில்லையே என்றோம்.
உடனே, மன்னிக்கவும் வாருங்கள் என்று அழைத்துச் சென்று, மின்சாரத்தை இயக்கி விட்டு இப்ப சென்று பாருங்கள் என்று சொன்னார் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கு மேல் அனைத்துமே பழுதுபட்டு அல்லது படங்கள் மங்கி போய் அல்லது பெரும்பாலான சுவிட்சுகள் இயங்கவில்லை.சரி என்று கீழே இறங்கி வந்தோம்.
விளையாடும் இடத்திற்கு அங்கே பார்த்தால் அதைவிட மோசம் அங்கே வைத்திருக்கும் பொருள்கள் பாதிக்கு மேல் சிதிலைமடைந்து உள்ளது. சரி என்னடா இப்படி இருக்கு என்று அப்படியே நுழையும் இடத்தில் இடது பக்கமாக சிறிய பூங்கா போல் முன்பு இருக்கும். இப்போது அது சிறிய குட்டை போல் நீர்கள் தேங்கி உள்ளன. அங்கே இருக்கும் விலங்குகளின் சிலையை தூரத்தில் இருந்து பார்த்தோம் அருகில் செல்ல முடியவில்லை. அவ்வளவு மோசமாக இடமாக இருந்தது, அந்த இடம். அதுமட்டுமல்ல வலது புறம் இருக்கும் பில்டிங் கீழே தண்ணீர் நிரம்பி உள்ளது. பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் சுற்றுலாவிற்கு வரும் சிறார்களை ஈசியாக பதம் பார்த்து சென்று விடும். சரி என்று 3 டி படம் காட்டும் இடத்திற்கு சென்றோம். அங்கே அவர்கள் கொடுத்த கண்ணாடி மிகவும் மோசம் கண்ணாடியில் முழுக்க முழுக்க அழுக்கு நிறைந்து இருப்பதால் எங்களால் அந்த 3டி படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை.எந்த காலத்தில் வாங்கிய கண்ணாடியோ தெரியவில்லை. வெளியே வரும்போது சொன்னேன் கண்ணாடி ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது. படம் தெளிவாக தெரியவில்லை என்றேன். காலையில் தான் துடைத்து வைத்தேன் என்று கூறினார். எந்த அளவுக்கு உண்மை என்று புரியவில்லை.
சரி என்று, கேண்டின் சென்றேன். பெயரளவில் மட்டுமே அது கேண்டின். கொள்ளை லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள் சாப்பிடும் சிப்ஸ் வெளியே ஐந்து ரூபாய் என்றால் அவர்கள் என்னிடம் பத்து ரூபாய் வாங்கி விட்டார்கள். இதை நான் வார்த்தையில் சொல்வதை விட நேரே சென்று ஆய்வு செய்து அவைகளை சரி செய்து முறையாக பராமரித்தால் இளைய தலைமுறை படிப்பவர்களுக்கு அது ஒரு பேரு உதவியாக இருக்கும்.
சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் இதை சரி செய்தால் திருச்சியில் குழந்தைகள் வெளியே செல்வதற்கு அதிக இடம் இல்லை. இது போன்ற இடங்களுக்கு அவர்கள் அடிக்கடி சென்று வந்தால், அவர்களுக்கும் பயனாக இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கொஞ்சம் கூட அச்சு பிசகாமல் கோளரங்கத்தின் அவலநிலையை அந்த நபர் சுட்டி காட்டி விட்டார். இனிமே அந்த கோளரங்கத்திற்கு யாரும் போகாதீங்க ரொம்ப மோசம் என்று தானே சொல்ல நினைக்கிறீர்கள்.
இதற்கு இடையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் தற்போதைய நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப கோளரங்கத்தை டிஜிட்டல் மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கன பணி ஆகஸ்ட் மாதம் முதல் . அதன்பின் இங்குள்ள கோளரங்கம் மட்டும் மூடப்படும். மற்ற செயல்பாடுகள் வழக்கம் போல் நடைபெறும். இப்பணிகள் ஓராண்டு க்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன ஒளிப்படக்கருவிகள் மூலம் வான் காட்சிகள் மற்றும் முழுக்கோள்களை காட்சிப்படுத்தும் போது இயங்கும் படங்களாக அதி உச்ச துல்லியப் படக்காட்சி களாக இருக்கும் என்கிற அறிவிப்பு எல்லாம் வெளியாகி வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என்கிறார்கள்…
இத்தனை கோடிகள் செலவு செய்து மக்கள் வந்து பார்க்க வேண்டுமே ! … அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கோளரங்கத்தை நேரில் சென்று பார்வையிட்டு உரிய ஆவணம் செய்தால் இன்றைய இளைய தலைமுறையினருக்கும், மாணவ, மாணவிகளுக்கு ஒரு பெரும் வரபிரசாதமாக இருக்கும் எங்களது நோக்கமாகும்.