அங்குசம் பார்வையில் ‘ பைரி’–பாகம்-1 படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘ பைரி’–பாகம்-1 தயாரிப்பு: ‘டி.கே.புரொக்டசன்ஸ்’ வி.துரைராஜ். தமிழ்நாடு ரிலீஸ்: ‘சக்தி பிலிம் ஃபேக்ட்ரி’ சக்திவேலன். டைரக்டர்: ஜான் கிளாடி. நடிகர் -நடிகைகள்: சையத் மஜீத், விஜி சேகர், மேகனா எலன், ஜான் கிளாடி, ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், சரண்யா ரவிச்சந்திரன், ராஜன், பிரான்சிஸ் கிருபா, ஆனந்த் குமார், கார்த்திக் பிரசன்னா. தொழில்நுட்பக் கலைஞர்கள்: ஒளிப்பதிவு: ஏ.வி.வசந்தகுமார், இசை: அருண் ராஜ், எடிட்டிங்: ஆர்.எஸ்.சதிஷ்குமார், ஸ்டண்ட் மாஸ்டர்: விக்கி, வி.எஃப்.எக்ஸ்: சேகர் முருகன்: ஆர்ட் டைரக்டர்: அனிஷ், எஸ்.எஃப்.எக்ஸ்: சதீஷ்: எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்கள்: பொன்.மனோபன், தினேஷ் குமார். பிஆர்ஓ: நிகில் முருகன்
100 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த புறா பந்தயம், அதனால் உருவான வன்மம், ரத்தக்களறி, உயிர்ப்பலிகள்இதான் இந்த ‘ பைரி’ யின் ஒன் லைன் மட்டுமல்ல, மெயின் லைனும் கூட. வெள்ளையர்களின் ஆட்சியில் இந்த புறா பந்தயம் தடைசெய்யப்பட்டதாக ஒரு சேதி இருக்கு. ஆனால் கன்னியாகுமரி மாவட்டம், குறிப்பாக நாகர்கோவில் அருகே உள்ள அறுகுவிளை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் இப்போதைய இளம் தலைமுறையினர் புறா பந்தயத்தில் அதிதீவிரமாக இருப்பதாக கதைக் கருவை உருவாக்கி, தமிழ் சினிமாவில் முதல்முறையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் ஜான் கிளாடி.
இவரின் அசாத்தியமான சிந்தனை, உழைப்புக்கு உரமிட்டு, புதுவித சினிமா ரசனையாளர்களுக்கு நல்விருந்து படைக்க உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் துரைராஜுக்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். சரண்யா ரவிச்சந்திரன் தவிர, படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் இதுதான் முதல் படம். ஆனால் பத்து இருபது படங்களுக்கு மேல் நடித்தவர்களே மிரளும் அளவுக்கு நடிப்பு, உடல் மொழி, வசன உச்சரிப்பு, கேமரா ஆங்கிள் லுக் என சகல ஏரியாவிலும் கூடு கட்டி அடித்து நம்மை அசரடிக்கிறார்கள். தென்மாவட்டங்களில் சாவக்கட்டு ( சேவல் சண்டை), கிடா முட்டு, ரேக்ளா ரேஸ் நடக்கும் போதும் நடந்த பின்பும் இரு கோஷ்டிகள் மோதும். மண்டை உடையும், ரத்தம் தெறிக்கும்.
அதேபோல் தான் இந்த புறா பந்தயத்திலும் நடக்கிறது. பந்தயத்தில் பறக்கும் புறாவைக் காலால் கவ்வி, கொத்திப் போடும் கழுகு தான் பைரி. அதேபோல் பந்தயம் நடத்தும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பைரிகளாகின்றனர். புறாவின் பிறப்பு, வளர்ப்பு, பெயர் வைப்பு, அவற்றிற்கு இடையே உள்ள உறவுமுறை, பறக்கும் நேரம், வானில் பறக்கும் புறாவை கீழே வர வைக்கும் முறை என புறாவைப் பற்றி புராணம் எழுதும் அளவுக்கு உள்ள விவரங்களை இரண்டரை மணி நேர சினிமாவாக காட்சிப்படுத்தியமைக்காக டைரக்டர் ஜான் கிளாடிக்கு தாராளமாக சபாஷ் போடலாம். ராஜலிங்கமாக வருகிறார் ஹீரோ சையத் மஜீத். நீ நல்லா வரணும் தம்பி.இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் படத்தில் அவர்களுக்கு பெரிதாக பங்களிப்பு இல்லை.
படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், ராஜலிங்கத்தின் அம்மா சரஸ்வதியாக வரும் விஜி சேகர் தான். அடேங்கப்பா மனுசி.. நடிப்பு ராட்சசி தான். எலே மக்களே… அந்த அம்மைக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்லே…தப்பே இல்லடே. இதற்கு அடுத்த இடத்தில் நின்று அதகளம் பண்ணிருக்கார் ராஜலிங்கத்தின் நண்பன் அமல் ( ஜான் கிளாடி தான்). உயிர்பயத்தில் அவர் கதறி அழும் ஒரு சீன் போதும். சுயம்புவாக வந்து கொலை ( அட ஹீரோயின் கூட்டாளிகளுக்குத் தாங்க) நடுங்க வைக்கும் வினு லாரன்ஸ், சமாதானப் புறா ரமேஷ் பண்ணையாராக வரும் ரமேஷ் ஆறுமுகத்தின் வசன உச்சரிப்பு, விரோதத்தை விரட்டியடிக்கும் லாவகம் என டபுள் செஞ்சுரி அடிக்கிறார்கள்.
அமல் அப்பாவாக வரும் ராஜன் என்ற அந்த மாற்றுத்திறனாளி மனிதர் , மனிதத்தை முளைக்க வைக்க க்ளைமாக்ஸில் பேசும் டயலாக்கில் செம..செம.. செமத்தியாக அசத்தியிருக்கிறார் . க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் வரும் குலசேகரன்பட்டினம் தசரா சாங் தான் இசையமைப்பாளர் அருண் ராஜ் திறமைக்குச் சான்று. வி..எப்.எக்ஸ் சேகர் முருகன், எஸ்.எஃப்.எக்ஸ் சதீஷ் இவர்களுக்கு பந்தயத்தின் பரிசுத் தொகையில் பாதியைக் கொடுத்தாலும் தகும். இந்த ‘ பைரி’யை திரையில் பார்க்கும் அனுபவமே அலாதியானது.
— மதுரை மாறன்.