கரியாம்பட்டியில் சாதிய வன்கொடுமை ! அருந்ததியர் தொழிலாளி கழுத்தறுத்துப் படுகொலை !
திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில் சாதிய வன்கொடுமை ! அருந்ததியர் தொழிலாளி கழுத்தறுத்துப் படுகொலை ! திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில், அருந்ததியர் தொழிலாளி வன்னியர் சாதிவெறியர்களால் கழுத்தறுத்துப் படுகொலை! வன்மையாகக் கண்டிக்கிறோம்! தமிழக அரசே விரைந்து நடவடிக்கை எடு! நீதி வழங்கு!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், கரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாதிவெறி பிடித்த வன்னியர் இளைஞர்களின் அரம்பத்தனத்தால், கடந்த 6 ஆம் தேதி அருந்ததியர் இளைஞர்கள் தாக்கப்பட்டு தலையில் வெட்டுக்காயங்களுடன் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இத்தாக்குதல் தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட வன்னியர் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சினமுற்ற வன்னியர் #சாதிவெறியர்கள், சாதிவெறி தலைக்கேறி, இரவு நேரத்தில் கரியாம்பட்டியில் உள்ள அருந்ததியர் குடியிருப்புப் பகுதியான நடுப்பட்டிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இரவு நேரத்தில், வீட்டுக்கு வெளியில் உறங்கிக்கொண்டிருந்த ஆண்டவர் என்ற அருந்ததியர் சாதியைச் சேர்ந்த தொழிலாளியை, சாதிவெறியர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆண்டவர் குடும்பத்தினரும், உறவினர்களும், மருத்துவமனையில் கிடத்தப்பட்டுள்ள ஆண்டவர் உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். இரண்டு நாட்களாகியும் உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்ய வக்கற்று, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை திண்டாடி வருகிறது. அல்லது சாதிவெறியர்களை கைதுசெய்ய மனமில்லாமல் மெத்தனம் காட்டி வருகிறது. காவல்துறையின் இப்போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கரியாம்பட்டி பகுதியில் சாதிய மோதல்களும், வன்கொடுமைகளும், குறிப்பாக அருந்ததியர் சமூகத்தின் மீதான சாதி இந்துக்களின் சாதிவெறித் தாக்குதல்கள் என்பது வழமையாக உள்ளன என்பது தெரியவருகிறது. அனாலும், கரியாம்பட்டி பகுதி என்றில்லை, தமிழ்நாடு முழுவதுமே சாதிய வன்கொடுமைகளும் கொலைகளும் நித்தம் நடந்தேறிய வண்ணம் தான் உள்ளன என்பது தெளிவு. தமிழகத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகளையும், நடுப்பட்டி ஆண்டவர் படுகொலையையும், வன்கொடுமைக் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையையும் தமிழ்த் தேச மார்க்சியக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நடுப்பட்டி ஆண்டவர் கொலைக்குக் காரணமான சாதிவெறியர்கள் விரைந்து கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதை, காவல்துறை உறுதிசெய்ய வேண்டும். கரியாம்பட்டி பகுதியில் வழமையாகத் தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்காணித்து கட்டுப்படுத்த காவல்துறை தனிக் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகவல்:
தமிழ்த் தேச மார்க்சியக் கழகம், தேனி மாவட்டம்.