ரூ.4 கோடி தந்தால் அமைச்சர் பதவி! செல்போனில் மோசடி!
சைபர் குற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் போலீ சார் எத்தனையோ நடவடிக்கைகளை, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும், மோசடிப் பேர்வழிகள் புதுப்புது வழிகளை கண்டுபிடிக்கின்றனர்.
அந்த வகையில், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா என தங்களை செல்போனில் அறிமுகம் செய்து மோசடியில் ஈடுபட முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

மணிப்பூரில் முதல்வராக இருந்த பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு பாஜக புதிய அரசு அமைக்கவில்லை. ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இதைப் பயன்படுத்தி 3 மோசடிப் பேர்வழிகள், மணிப்பூர் சட்டசபை சபாநாயகர் தோக்சோம் சத்யபிரதா சிங் உள்ளிட்ட எம்எல்ஏக்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.
ரூ.4 கோடி கொடுத்தால் அமைச்சர் பதவியை பெற்றுத்தருகிறேன் என்று ஜெய்ஷா பெயரால் கூறி உள்ளனர்.
இதுகுறித்து மணிப்பூர் சபாநாயகர், எம்எல்ஏக்கள் முறைப்படி போலீசில் புகார் செய்ய, போலீசார் பிஎன் எஸ் பிரிவுகள் 318 (4), 319 (2)ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கினர்.
அதைத் தொடர்ந்து 3 மோசடிப் பேர்வழிகள் டில்லியில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் டில்லியில் இருந்து விமானம் மூலம் இம்பாலுக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது.