கும்பகோணம் ஓவியருக்கு மத்திய அரசின் ‘சில்ப் குரு’ விருது! – தஞ்சாவூர் ஓவியத்துக்குக் கிடைத்த மரியாதை !

0

கும்பகோணம் ஓவியருக்கு மத்திய அரசின் ‘சில்ப் குரு’ விருது! – தஞ்சாவூர் ஓவியத்துக்குக் கிடைத்த மரியாதை

இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் ஜவுளித் துறையில் சிறந்த பங்களிப்பை செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘சில்ப் குரு’ விருது வழங்கப்படுகிறது. கொரோனா பேரிடர் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளுக்கான ‘சில்ப் குரு’ விருது மற்றும் தேசிய விருதுகள் வழங்கும் விழா, நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 30 பேருக்கு சில்ப் குரு விருதுகளும், 78 பேருக்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டன. சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சில்ப் குரு விருது வழங்கப்பட்டு வருகிறது.

சில்ப் குரு விருதில் தங்க நாணயத்துடன் 2 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு, தாமிரப் பத்திரம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன. தஞ்சாவூர் ஓவியம், கைப்பின்னல், மண்பாண்டம் செய்தல், களம்காரி, டெரகோட்டா வேலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு கைவினைத் திறன்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் 'சில்ப் குரு' விருது! - தஞ்சாவூர் ஓவியத்துக்குக் கிடைத்த மரியாதை
மத்திய அரசின் ‘சில்ப் குரு’ விருது! – தஞ்சாவூர் ஓவியத்துக்குக் கிடைத்த மரியாதை

அந்தவகையில், 2019-ம் ஆண்டுக்கான ‘சில்ப் குரு’ விருதை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் நகரைச் சேர்ந்த ‘தஞ்சாவூர் ஓவியக் கலைஞரும் சக்ரபாணி ஆர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருபவருமான வி.பன்னீர்செல்வம்(59) என்பவருக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வழங்கினார். இதன்பின்னர், பன்னீர்செல்வம் வரைந்த தஞ்சாவூர் ஓவியத்தை குடியரசு துணைத் தலைவர் வெகுவாக ரசித்துப் பாராட்டினார்.

சில்ப் குரு விருது குறித்து ஓவியர் வி.பன்னீர்செல்வம் கூறுகையில், ”கும்பகோணத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தஞ்சாவூர் பாணியிலான ஓவியங்களை வரைந்து வருகிறேன். தஞ்சாவூர் ஓவியம் குறித்து ஏராளமான மாணவர்களுக்கு பயிற்சியையும் அளித்து வருகிறேன். தஞ்சாவூர் ஓவியத்துக்காக தேசிய விருது, மாநில அரசின் பூம்புகார் விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளேன்.

சில்ப் குரு விருதுக்கான போட்டியில் 3,000 பேர் பங்கேற்றதில் தமிழகத்திலிருந்து நான் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளேன். என்னை வாழவைக்கும் தஞ்சாவூர் ஓவியத்துக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். வரும் நாள்களில் தஞ்சாவூர் ஓவியத்தைப் பரவலாகக் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட உள்ளேன்” என்கிறார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.