செயின்ட் ஜோசப் கல்லூரியில் விழித்திறன் குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களுக்கான கணினி இயக்கப் பயிற்சி !

0

செயின்ட் ஜோசப் கல்லூரியில் விழித்திறன் குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களுக்கான கணினி இயக்கப் பயிற்சி

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயங்கும் மாற்றுத்திறனாளி மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்ட விழித்திறன் குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களுக்கான கணினி இயக்கப் பயிற்சி நடைபெற்றது. முனைவர் மணிகண்டன் வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் முன்னிலையில் நடைபெற்ற இப்பயிற்சியை துணைமுதல்வர் முனைவர் ரவீந்திரன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். தலைமையுரையில், ஹெல்ப் த பிளைண்ட பவுண்டேசன் அமைப்பு, விழித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து விழித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு அளிக்கும் இந்தக் கணினிப் பயிற்சி மிகவும் பயனுயள்ள ஒன்றாகும்.

மாற்றுத்திறனுடைய மாணவா்களுக்கு கணினி சார்ந்த இந்தப் பயிற்சி அவர்களை இன்னும் தன்னம்பிக்கை உடையவா்களாக உருவாக்கும் என்பது நிச்சயம். பிரெய்லி முறையில் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். மென்பொருள்களை இயக்குவது அவற்றை கணினியில் உள்ளீடு செய்வது தொடா்பான திறன்களை மாணவா்கள் கற்றுக்கொள்வதற்கு இந்தப் பயிற்சி பயன்படும் என்று தெரிவித்தார்.

அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர்
அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர்

தொடர்ந்து வாழ்த்துரையாற்றிய கல்லூரி முதல்வர், உள்ளங்கையில் உலகம் என்று சொல்வார்கள். இன்று உலகமே கணினியின் காலடிச் சுவட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. விழித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு கணினி இயக்கப் பயிற்சி வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி. மாணவர் திறன் வளர்க்கின்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நம் கல்லூரியில் நடத்திக்கொண்டிருக்கின்றோம். அதன் தொடர்ச்சியாக விழித்திறன் குறைபாடுடைய மாணவா்களுக்கான கணினி இயக்கப் பயிற்சி நடத்துவதில் நான் பெருமைப்படுகின்றேன். மாணவர்கள் திறன் வளர்க்கின்ற எந்தச் செயலையும் நிகழ்வையும் தொடர்ந்து கல்லூரி நடத்தும். அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நிர்வாகம் ஏற்படுத்தித் தரும் என்று குறிப்பிட்டார்.

ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேசன் அமைப்பைச் சேர்ந்த செல்வி சுவாதி மற்றும் திரு.மருதுபாண்டியன் ஆகியோர் பயிற்சியாளர்களாகப் பொறுப்பேற்று இப்பயிற்சியை வழிநடத்தினர். பயிற்சியில் பிரைய்லி முறையில் கணினியை இயக்குவது, மென்பொருள்களை பதிவு செய்வது, எம்.எஸ் வேர்டு, பவர் பாயிண்ட் ஆகியவற்றை இயக்குவது ஆகியவை குறித்த பயிற்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

விழித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான கணினி இயக்கப் பயிற்சி !
விழித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான கணினி இயக்கப் பயிற்சி !

இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் இந்தப் பயிற்சி தங்களுக்கு கணினி குறித்த பயத்தைப் போக்கி, அத்துறை குறித்த ஆர்வத்தை அதிகப்படுத்தியதாகக் கூறினர். மாணவர் பரணிதரன் நன்றியுரை வழங்கினார். மாணவர் பரத்வாஜ் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

செயின்ட் ஜோசப் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், ஜமால் முஹம்மது கல்லூரி, ஈ.வே.ரா. கல்லூரியைச் சார்ந்த 68 மாணவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயன் பெற்றனர்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செயின்ட் ஜோசப் கல்லூரி மாற்றுத்திறனாளி மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.முரளிக்கிருஷ்ணன், உறுப்பினர்கள் முனைவர் மணிகண்டன், முனைவர் ஷகிலா பானு, முனைவர் அமலவீனஸ் மற்றும் முனைவர் யாஸ்மின் பானு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

– ஆதன்

Leave A Reply

Your email address will not be published.