காபி டே நிறுவனத்தின் அதிபர் விஜி சித்தார்த் மாயம்: தற்கொலையா?
கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல தொழிலதிபருமான வி.ஜி.சித்தார்த் நேற்று இரவு மாயமான நிலையில், நேத்ராவதி ஆற்றில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல தொழிலதிபருமான வி.ஜி.சித்தார்த் நேற்று இரவு திடீரென மாயமானார். தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயல்பட்டு வரும் கஃபே காபி டே நிறுவனம் இவருக்குச் சொந்தமானது தான்.
கர்நாடகா மாநிலம் உல்லாவில் உள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே மாயமானார். இந்நிலையில், தொழில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் ஆற்றில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக காவல் ஆணையர் கூறுகையில், நேற்று இரவு நேத்ராவதி ஆற்றுப் பாலத்திற்கு செல்லுமாறு கார் ஓட்டுநரிடம் சித்தார்த் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கார் ஓட்டுநரும் சென்றுள்ளார். கார் பாலத்தில் சென்றபோது நிறுத்தச் சொல்லியுள்ளார். நான் சற்று நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துவிட்டு காரில் இருந்து இரங்கிய சித்தார்த் சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். பின்னர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார்.
தொடர்ந்து சித்தார்த்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதிக்கப்பட்ட போது அவை ஆற்றுப் பாலத்தின் மையப்பகுதியில் சென்று நிற்பதாக தெரிவித்துள்ளார்.
தொழிலில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் காரணமாக சித்தார்த் தனது கஃபே காபி டே நிறுவனத்தை பிரபல பன்னாட்டு நிறுவனத்திடம் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நேற்றைய தினம் (திங்கள் கிழமை) பங்குச் சந்தை வழக்கத்திற்கு மாறாக பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா எஸ்.எம்.கிருஷ்ணாவின் வீட்டிற்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரித்தார். மேலும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு குவியத் தொடங்கி உள்ளனர்.