கலெக்டரின் அதிரடியால் ஆர்.ஐ. மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் கைது ! வீடியோ
கலெக்டரின் அதிரடியால் ஆர்.ஐ. மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் கைது !
திருச்சி மாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனையில் மணல் கடத்தலை தடுக்க முயன்று தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், இ.ஆ.ப., இன்று (28.05.2023) நேரில் சந்தித்து ஆறுதல்கூறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் என தெரிவித்தார்.
வீடியோ
நேற்று (27.05.2023) இரவு திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், நரசிங்கபுரம் மலையடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மணல் கடத்தலை தடுக்க அப்பகுதிக்குச் சென்று பணியில் ஈடுபட்டபோது நரசிங்கபுர ஊராட்சி மன்றத் தலைவரான மகேஸ்,தனபால், மணி மற்றும் கந்தசாமி ஆகியோர் கொடூர தாக்குதலை மேற்கொண்டு அவ்விடத்தை விட்டு தலைமறைவாகினர்.
உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் தகவலை பெற்று தாக்குதலுக்குள்ளான வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம் அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை கிடைக்கச் செய்தார்.

அதன் பின்னர், துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் தகவல் கேள்பட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் செயலை செய்பவர் எவராக இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் அதனை அனுமதிக்காது. இக்குற்றச் செயலில் ஈடுபட்டோர் மீது உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 294(டி),341,323,353,332,307,506(1),379 மற்றும் 21(4)ன் கீழ் வழக்கு பதியப்பட்டு மகேஸ், தனபால்,மணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கந்தசாமி என்பவர் விரைவில் கைது செய்யப்படுவார். இவர்கள் மீது தொடர்ச்சியான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கைது செய்யப்பட்ட நரசிங்கபுர ஊராட்சி மன்றத் தலைவரான மகேஸ் மீது திமுக தலைமை கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன்.