‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் ராம்சரண்!
குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ வெற்றிப் படங்களை தயாரித்த அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது.
அபிஷேக் அகர்வால் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது வி மெகா பிக்சர்ஸ் உடன் இணைந்து புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.
பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இதில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதர தகவல்களும் விரைவில் வெளியாக உள்ளன.
வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்டணியின் முதல் திரைப்பட அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சிறந்த உள்ளடக்கம் மற்றும் பரந்து விரிந்த வீச்சைக் கொண்ட பிரம்மாண்ட படைப்பாக இத்திரைப்படம் இருக்கும் என்று தயாரிப்புக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
-மதுரை மாறன்