ஆட்சியைக் கலைக்கத் திட்டமிட்ட சதி – சதியை முறியடித்த மு.க.ஸ்டாலின் !

0

ஆட்சியைக் கலைக்கத் திட்டமிட்ட சதி – சதியை முறியடித்த மு.க.ஸ்டாலின் !

அரசியல் சாசன அதிகாரம் படைத்தது ஆளுநர் பதவி. ஒரு மாநிலத்தின் ஆளுநரைக் குடியரசுத்தலைவர்தான் நியமனம் செய்கிறார். ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் நடைபெறும் ஆட்சிக்குத் தலைவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சித் தலைவரை முதலமைச்சராக நியமனம் செய்வார். அமைச்சர்களை முதலமைச்சர் பரிந்துரையின் பெயரில் நியமனம் செய்வார்.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஆளுநர் உரையோடுதான் இந்தியாவில் உள்ள சட்டமன்றங்கள் தொடங்கும் என்பது மரபு. சட்டமன்றங்களில் நிகழ்த்தப்படும் உரை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரித்து தரும் உரையை வாசிப்பார்கள். அது கடந்த ஆண்டில் மாநில அரசுகள் நிறைவேற்றியத் திட்டங்களும் வரும் ஆண்டில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் குறித்த அறிமுகமாக ஆளுநர் உரை அமைந்திருக்கும். ஆளுநர் உரை நிகழ்த்தியததற்குப் பிறகு ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தில் விவாதம் நடைபெறும். விவாதங்களில் பல்வேறு கட்சியினர் தங்களின் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். நிறைவாக எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றுவார். அதற்குப் பதில் அளித்து முதலமைச்சர் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றுவார். பின்னர் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறும் என்பதும் காலம் காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவருவது நீண்டகால மரபாகும்.

ஆளுநர் உரையில்லா கூட்டங்கள்

- Advertisement -

- Advertisement -

இதற்கு விதிவிலக்காக ஆளுநர் Vs முதல்வர் இடையே மோதல் போக்கு இருந்தால் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெற்றுள்ளன என்பது பல முன்னுதாரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆளுநராய் இருந்த சென்னரெட்டியோடு மோதல் இருந்த சூழ்நிலையில் ஆளுநர் உரையில்லாமல் கூட்டத் தொடர் நடைபெற்றது. தெலுங்கனா மாநிலத்தில் ஆளுநர் தமிழிசையின் உரையில்லாமல் சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெற்றுள்ளன. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான ஆட்சியில் ஆளுநர்கள் உரையோடு தொடங்கும் கூட்டத்தொடர் என்ற மரபு உடைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையோடு சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெறுவது என்ற மரபு பெரும்பான்மையான மாநிலங்களில் இன்னமும் பின்பற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆளுநருக்கு அழைப்பும் – ஏற்பும்

அப்படித்தான் தமிழ்நாட்டில், ஆளுநராய் உள்ள ஆர்.என்.இரவி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 20க்கும் மேற்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு இன்னும் ஒப்புதல் தராமலும், நிராகரிக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறார். மாணவர்களை வெகுவாகப் பாதிக்கும் நீட் சட்ட முன்வடிவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை. ஆன்-லைன் ரம்மி என்னும் சூதாட்டத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஏற்ற ஆளுநர், சட்டமுன்வடிவை ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

ஆளுநர் தன் பொறுப்பை மறந்து இந்துத்துவம், தேசியக் கல்விக் கொள்கை போன்ற ஆளும் ஒன்றிய பாஜக அரசின் கருத்துகளையும் திட்டங்களையும் ஆதரித்து பேசி வருகிறார். அண்மையில் தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழகம் என்று அழைப்பதுதான் சரி என்று பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

மு.க.ஸ்டாலின் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இல்லை. மோதல் போக்கு உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் உரையாற்ற ஆளுநரை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து மரபுவழக்கப்படி அழைத்தார். ஆளுநரும் அழைப்பை ஏற்றுக்கொண்டு 09.01.2023ஆம் உரையாற்ற நாளையும் உறுதி செய்தார்.

ஆளுநருக்கு மரபார்ந்த மரியாதை
ஆளுநருக்கு மரபார்ந்த மரியாதை

ஆளுநருக்கு மரபார்ந்த மரியாதை

இதனைத் தொடர்ந்து, அரசின் சார்பில் ஆளுநர் சட்டமன்றத்தில் ஆற்றவேண்டிய உரை தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட உரை தலைமைச் செயலாளர், நிதி அமைச்சர் முதல்வர் கையொப்பத்தோடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரின் செயலர், கூடுதல் செயலர் கையொப்பமிட்டு பின்னர் இறுதியாக ஆளுநரும் கையொப்பமிட்டுள்ளார். ஆளுநர் கையொப்பமிட்ட உரையாற்றும் கோப்பு அரசுக்கு வந்தவுடன், அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆங்கில வடிவமும் தமிழ் வடிவமும் அச்சுக்குக் கொடுக்கப்பட்டது. அச்சுக்குக் கொடுக்கப்பட்ட ஆளுநர் உரை மின்வடிவமாக மாற்றப்பட்டு இணையம் வழி கணினியில் பகிர்வதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்தது. ஆளுநரின் உரை குறைந்த எண்ணிக்கையில் அச்சடித்தும் வைக்கப்பட்டன. செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவைத் தலைவர்,“சட்டமன்றத்திற்கு உரையாற்ற வரும் ஆளுநருக்குக் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்படும். 09.01.2023ஆம் நாள் காலை 10.00 மணிக்கு ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்துவார் என்று கூறினார். மேலும், சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றும் உரை எல்லா தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆளுநரின் மரபு மீறிய உரை
ஆளுநரின் மரபு மீறிய உரை
4 bismi svs

ஆளுநரின் மரபு மீறிய உரை

சட்டப்பேரவை 09ஆம் நாள் காலை கூடியது. சரியாக 10.00 மணிக்கு ஆளுநர் சட்டமன்றத்திற்கு வருகை தந்தார். பேரவைத் தலைவர் அமரும் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆளுநர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். பின்னர் ஆளுநர் தன் உரையை வாசிக்கத் தொடங்கினார். தமிழ்நாடு என்பதைத் தமிழகம் என்று மாற்றி வாசித்தார். திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் இப்படி மாற்றி வாசிப்பதை எதிர்த்து குரல் எழுப்பி முழக்கமிட்டனர். முழக்கங்களை ஆளுநர் அலட்சியம் செய்து தொடர்ந்து தன் உரையை வாசித்துக் கொண்டிருந்தார். அந்த உரையின் சில பகுதிகளை நீக்கியும், தன் விரும்பிய செய்திகளை சேர்த்தும் வாசித்து முடித்தார். தமிழ்நாடு, சமூகநீதி, சமத்துவம், பெரியார், அண்ணா, கலைஞர், காமராசர், அண்ணல் அம்பேத்கர் போன்ற பெயர்கள் நிறைந்திருந்த ஒரு பத்தியை ஆளுநர் படிக்காமல் விட்டுவிட்டார். அரசின் உரையில் இல்லாத ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்தநாள் பற்றிய செய்தியைச் சேர்த்துக் கொண்டார். ஆளுநரின் உரை முடிந்த பின்னர் அதன் தமிழாக்கத்தைப் பேரவைத் தலைவர் 45 நிமிடங்களில் வாசித்து முடித்தார். அதுவரை சட்டமன்றத்தில் ஆளுநர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

முதலமைச்சரின் தீர்மானம்

ஆளுநரின் உரையின் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் படித்து முடித்தவுடன், முதலமைச்சர் எழுந்து, ஒரு தீர்மானத்தைப் படித்தார். “மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அரசின் சார்பில் தயாரித்து, அவரின் ஒப்புதல் பெறப்பட்டு, அவர் ஆற்றிய உரையில் சில பகுதிகளை நீக்கியும், சில பகுதிகளைச் சேர்த்தும் குறிப்பிட்டுள்ளார். இது சட்டமன்ற மரபாகாது என்பதால், அச்சடிக்கப்பட்ட ஆளுநரின் உரையின் ஆங்கிலம் மற்றும் தமிழாக்கத்தை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற்றவேண்டும். ஆளுநர் உரையில் நீக்கியும் சேர்த்தும் பேசியவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்“ என்ற தீர்மானத்தைச் சட்டமன்றம் நிறைவேற்றவேண்டும்” என்று பேரவைத் தலைவருக்கு வேண்டுகோள் வைத்தார். முதல்வரின் வேண்டுகோளைப் புரிந்துகொள்ள முடியாத ஆளுநர் தன் பக்கத்திலிருந்து தன் செயலரிடமும், தன்னுடைய பாதுகாவலுக்காக வந்த காவல்துறை உயர் அதிகாரியிடமும் கேட்டுக் தெரிந்துகொண்டவுடன், உடனடியாக ஆளுநர் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் பின்னர் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பத்திரிகையாளர் ஷியாம்
பத்திரிகையாளர் ஷியாம்

ஆளுநரின் சதி அம்பலம்

“ஆளுநர் சட்டமன்றத்தின் மரபை மீறி சில பகுதிகளை நீக்கியும், சில பகுதிகளையும் சேர்த்து உரையாற்றியது என்பது முழுக்கமுழுக்க உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல; ஆட்சியைக் கலைப்பதற்கான ஒரு மாபெரும் சதித் திட்டம்” என்று பத்திரிக்கையாளர் ஷியாம் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றிய பிறகு ஆளுநருக்குச் சட்டமன்றம் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் என்பது மரபு. இப்போது ஆட்சியின் தலைவராக உள்ள ஆளுநர் தன் தலைமையிலான ஆட்சி குறித்த உரையில் சில பகுதிகளை நீக்கியும் சேர்த்தும் படித்துள்ளார். இந்நிலையில் சட்டமன்றம் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றமுடியாது. நிறைவேற்றினால் ஆளுநர் நீக்கியும், சேர்த்தும் பேசிய உரையை ஆளும் அரசு ஏற்றுக்கொண்டதாக பொருளாகிவிடும். இதனால் அரசுக்குத் தர்மசங்கடம் ஏற்படும். இதனைத் தொடர்ந்து அரசு ஆளுநர் உரை மீது நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என்றால் ஆட்சி கலைப்பு தானாகவே நிகழ்ந்து விடும். காரணம் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்காமல் இருப்பது அரசியல் சாசன விதிகளின்படி முற்றிலும் தவறாது என்ற அடிப்படையில் ஆட்சிக் கலைப்பை ஒன்றிய அரசு உடனே மேற்கொள்ளும். இதை எதிர்த்து மாநில அரசு நீதிமன்றங்களை அணுகமுடியாது. உரையை ஏற்றுக்கொண்டால் பின்னர் ஆளுநர் சொல்வதே மாநிலத்தின் சட்டமாகவும் திட்டமாகவும் அமையும். இப்படியோர் இக்கட்டை திமுக அரசுக்கு ஏற்படுத்துவதே ஆளுநர் ஆற்றிய மரபு மீறிய உரையின் உள்நோக்கம்” என்றும் குறிப்பிடுகின்றார்.

சதியை முறியடித்த மு.க.ஸ்டாலின்

இதனை நன்கு உணர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவைத் தலைவர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தைப் படித்துக்கொண்டிருந்த 45 நிமிடங்களில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, சட்டமன்ற உரையைப் பதிவு செய்யும் அலுவலர்களை அழைத்து, ஆளுநர் எந்தப் பகுதியை நீக்கிப் படித்தார், எந்தப் பகுதியைச் சேர்த்துப் படித்தார் என்ற விவரங்களைப் பெற்று கையில் வைத்துக்கொண்டார். பேரவைத் தலைவர் தமிழாக்கத்தைப் படித்து முடித்தவுடன் “அரசின் சார்பில் அச்சிடப்பட்ட ஆளுநர் உரை மட்டுமே சட்டமன்ற குறிப்பில் ஏற்றப்படவேண்டும். நீக்கிப் படித்தவை, சேர்த்துப் படித்தவை சட்டமன்றக் குறிப்பில் ஏற்றப்படக்கூடாது” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் விளைவாக, அரசின் சார்பில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் என்பது நடைமுறைச் சிக்கல் எழப்போவதில்லை. இதனால் திமுக அரசைக் கலைக்கும் உள்நோக்கத்தோடு சட்டப்பேரவையில் நடந்துகொண்ட ஆளுநர் என்.ஆர்.இரவியின் சதித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடித்துவிட்டார் என்பதே உண்மை. இதன் மூலம் ஆளுநர் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்ற பேருண்மையைத் தமிழக மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்.

மக்களின் எதிர்பார்ப்பு

விசிக தலைவர் திருமாவளவன் சொல்வதுபோல், “சட்டப்பேரவையில் நாட்டுப்பண் இசைக்கப்படுவதற்கு முன்பே மரபுகளை மீறி வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.இரவி, எப்போது தமிழகத்தை விட்டு வெளியேறப் போகிறார்” என்று அறிக்கையொன்றில் கேட்டுள்ளார். அது திருமாவளவன் கேள்வி மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களும் பொதுவெளிகளில் அந்தக் கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு அடையாளமாக இருக்கும் ஜனநாயகத்தை ஆளுநரே காலில்போட்டு மிதிக்கிறார் என்பதைத்தான் மிகுந்த மனவேதனையோடு பதிவு செய்யவேண்டியுள்ளது. ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்க ஆளுநர் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்…… செயல்படுவாரா? என்ற கேள்விதான் எல்லார் மனங்களிலும் நிறைந்துள்ளது.

-ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.