பாலியல் புரோக்கர்களுடன் தொடர்பு – கூண்டோடு தூக்கியடிக்கப்பட்ட போலீசார் !
பாலியல் புரோக்கர்களுடன் தொடர்பு கூண்டோடு தூக்கியடிக்கப்பட்ட போலீசார் ! திருச்சியில் விபச்சாரத் தடுப்புப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் தொழில் செய்யும் பெண் புரோக்கர்களுடன் போலீசாருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமான நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார், திருச்சி மாநகர கமிஷனர் காமினி.
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, தனிப்படை போலீசாரின் கண்காணிப்பில் அப்பகுதியில் விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் கீழ் புரோக்கர்கள் பிரவீன்குமார், மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் தொழிலை தொடர்வதற்கு யார் யாருக்கெல்லாம் எவ்வளவு மாமூல் கொடுத்தார்கள் என்ற விவரங்களை எழுதி வைத்திருந்த டைரி ஒன்றும் போலீசில் சிக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணையின் நிறைவில் கருப்பு ஆடுகளின் பட்டியலை கமிஷனரிடம் கொடுத்திருக்கிறார்கள் தனிப்படை போலீசார்.
இதனையடுத்து, குற்றச்சாட்டில் சிக்கிய விபச்சாரத் தடுப்புப்பிரிவு எஸ்.ஐ.கீதா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சகாதேவன், தனிப்படை ஏட்டுகள் பிரதீப், இளுஸ்டீன் ஆகிய நான்கு பேரையும் ஆயுதப்படைக்குத் தூக்கியடித்திருக்கிறார், கமிஷனர் காமினி.
கடந்த ஆண்டில், கேரளாவைச் சேர்ந்த ஸ்பா உரிமையாளரிடம் விபச்சார கேசை சாதகமாக முடித்துத்தருவதற்காக இலஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பெண் எஸ்.ஐ. ரமா பிடிபட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. பலரிடம் கூகுள்-யில் பணம் வசூலித்ததும் அம்பலமானது. அவரும் துறை ரீதியான நடவடிக்கைக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாநகரில் கள்ள லாட்டரி, இரவு நேரங்களில் மதுபான விற்பணை, கஞ்சா, குட்கா விற்பணை என சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பல்வேறு அதிரடி ஆய்வுகளை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகிறார் கமிஷனர் காமினி.
இந்த பின்னணியில் விபச்சாரத்தை தடுக்க வேண்டிய போலீசாரே, இலஞ்சம் பெற்றுக்கொண்டு ”தொழிலை” நடத்த உதவியாக இருந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
– அங்குசம் செய்திப்பிரிவு.