அங்குசம் பார்வையில் ‘டை நோ சர்ஸ்’ ( Die No Sirs)
அங்குசம் பார்வையில் ‘டை நோ சர்ஸ்’ ( Die No Sirs)
தயாரிப்பு: கேலக்ஸி பிக்சர்ஸ் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம். தமிழக தியேட்டர் ரிலீஸ்: ’ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல். டைரக்ஷன்: எம்.ஆர்.மாதவன். நடிகர்—நடிகைகள்: உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மானெக்ஷா ( மெயின் வில்லன் சாலையார்) , ஜானகி, அருண். தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவு: ஜோன்ஸ் வி.ஆனந்த், இசை: பாபு சசி, எடிட்டிங்: ஆர்.கலைவாணன், ஸ்டண்ட் டைரக்டர்: ’ஸ்டண்னர்’ சிவா, ஆர்ட் டைரக்டர்: ஆர்.வலம்புரிநாதன். பி.ஆர்.ஓ.: சதீஷ் ( எய்ம்)
வடசென்னையின் ரஃப் & டஃப் மனிதர்களின் வாழ்க்கையை ரொம்பவே ‘ராவா’கச் சொல்ல முற்றிலும் புதுமுகங்களை நம்பி இந்த ‘டை நோ சர்ஸ்’சை திரையில் காண்பித்திருக்கிறார் டைரக்டர் எம்.ஆர்.மாதவன். முகங்கள் தான் புதுசே தவிர, கதைக்களம், கதையின் மாந்தர்கள், அந்த மாந்தர்களின் அடிப்படை குணாதிசயம் எல்லாமே கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் புழக்கத்தில் இருக்கும் “ஸ்டாண்டர்ட்’ பழக்க வழக்கங்கள் தான்.
சாலையார்( மானெக்ஷா) கிளியப்பன் என இரண்டு ரவுடிகள், அந்த ரவுடிகளின் அடியாட்களாக பத்து-இருபது பேர். கிளியப்பனின் தங்கச்சி கணவனைப் போட்டுத்தள்ளிவிடுகிறது சாலையார் கும்பல். ஒருகட்டத்தில் இருவருக்கிடையே சமரசரம் ஏற்பட, கிளியப்பனின் மச்சினன் கொலைக் கேசில் தனது தரப்பிலிருந்து சிலரை போலீசில் சரண்டர் பண்ண ஒத்துக் கொள்கிறார் சாலையார். கல்யாணமாகி ஒன்பது நாட்கள் தான் ஆகியிருப்பதால், மாறா மட்டும் சரண்டராக மறுக்கிறார்.
இதை ஏற்றுக் கொண்ட சாலையார், கிளியப்பன் சொன்னபடி அவரிடம் ‘கட்டிங்’ வாங்க, தனது வலது கையாக இருக்கும் ஒருவனுடன் மாறாவையும் அனுப்புகிறார். கிளியப்பன் வீட்டில் மாறாவைப் பார்த்ததும் அவரது டிரைவருக்கு அடையாளம் தெரிந்துவிடுகிறது. அதுக்குப் பிறகு என்ன நடக்கும்? கிளியப்பனின் ஆட்கள், மாறாவை விரட்டி விரட்டி வெட்டிக் கிழிக்கிறார்கள். இதைப் பார்க்கும் ஹீரோ உதய் கார்த்திக்கிற்கு,( ‘கருத்தம்மா’ ஹீரோயின் மகேஸ்வரியின் தம்பியாம்) இதெல்லாமே சாலையாரின் சூழ்ச்சி தான் என்பது கிளியப்பன் மூலமாக தெரிகிறது. அதுக்குப் பிறகு என்ன நடக்கும்? டைனோசர் ரேஞ்சுக்கு கொலைவெறியாகி சாலையாரை சகட்டுமேனிக்கு வெட்டி பொலி போடுவார் ஹீரோ. இதானே நடக்கும். அதான் க்ளைமாக்சில் நடந்துச்சு.

ஹீரோ உதய்கார்த்திக் பார்டர் மார்க்கில் தான் பாஸாகியுள்ளார். இதே தான் ஹீரோயின் சாய் ப்ரியா தேவாவுக்கும். கோயமுத்தூர்லிருந்து வந்து வடசென்னையில் வசிக்கும் ஹீரோயின், ஒரு ரவுடியை லவ் பண்ணலேன்னா சாமிக்குத்தமாகிரும்ல. அந்தக்குத்தம் நமக்கெதுக்குன்னு ஹீரோவை லவ் பண்ண, ஒரு சில சீன்கள் வருகிறார், அப்புறம் லைஃப் ஸ்பான்சர் ஒருத்தன் கிடைச்சவுடன், ஹீரோவுக்கு டாடா பை பை சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுகிறார். மேட்டர் ஓவர்.
இந்த ‘டை நோ சர்ஸ்’சில் வில்லன் சாலையாராக வரும் மானெக்ஷா தான் அதிகம் கவனிக்க வைக்கிறார். படம் முழுக்க கம்பீர முரட்டு உருவம், மிரட்டும் கண்கள் என வரும் அவரை க்ளைமாக்சில் தான் காமெடி வில்லனாக்கிவிட்டார் டைரக்டர். அதே போல் படத்தின் முதல் சீனில் மாநகர பஸ்ஸில் ரவுடி மாணவர்களை புரட்டி எடுக்கும் அந்த வயதான ஆள், “என்னைப் பத்தி அங்க வந்து கேட்டுப் பாரு” என கெத்து காட்டிவிட்டுப் போகிறார். அதுக்குப் பிறகு அவரை காணவேயில்லை. திடீர்னு க்ளைமாக்சில் எண்ட்ரி கொடுத்து ஹீரோவுக்கு விசிலடிக்கும் வெத்துவேட்டாகிவிட்டார்.
இந்தப் படத்தில் இருக்கும் ஆகப்பெரிய மைனஸ் என்னன்னா, எல்லா சீன்களுமே ரொம்பவே நீ………ளமா…. போய்க்கிட்டே இருக்கு. சீனை ஆரம்பித்த டைரக்டருக்கு எப்படி முடிக்கிறதுன்னு தெரியலையா? இல்ல டைரக்டர் எம்.ஆர்.மாதவனோட ‘ஸ்டைல்’ இப்படியான்னு தெரியல. இதான் ஸ்டைல்னா.. அது சரிப்படாது டைரக்டர் சார்.
–மதுரைமாறன்
