எங்கள் வீட்டில் மின் கட்டணம் ரூ.42135 ! பிரபல எழுத்தாளரின் நேரடி அனுபவம்!
மின் கட்டணம் ரூ.42135
கடந்த ஜூலை 11 அன்று tnebக்கான இணையதளத்தில் எனது வீட்டுக்கான மின் கட்டணத்தைப் பார்த்தபோது தலைப்பிலிருக்கும் எண்ணைத்தான் காட்டியது. மீண்டும் ஒரு முறை சரிபார்த்தேன்.
நான்கு இலக்க எண்ணாக இருக்குமோ, 4213.5 ஆக இருக்குமோ
என்றெல்லாம் கண்களைக் கசக்கிப் பார்த்தேன். லாக் அவுட் செய்து விட்டு மீண்டும் உள்நுழைந்து பார்த்தேன்.
நாற்பத்து இரண்டாயிரத்து நூற்று முப்பத்தைந்து ஐந்துதான் என்று கொடூரக்குரல் ஒலித்தது.
பொதுவாகவே ஜூன், ஜூலைக்கான மின் கட்டணம்தான் எப்போதும் அதிகம் வரும்.
கடும் வெப்பம், ஏசி, மின்விசிறிகள் பயன்பாடு அதிகம் என்பதால். ஆனாலும் 42000+ வருவதற்கு என்ன காரணம் என்று யோசித்தபோதே மண்டை சூடானது.
Bill Details எடுத்துப் பார்த்தேன். 4235 யூனிட் பயன்படுத்தியதாக முகத்தில் குத்தியது. மூக்கில் வழிந்த குருதியைத் துடைத்துக் கொண்டே மேலும் ஆராய்ந்தேன்.
34010 தொடங்கி 38245 வரை காட்டியது. பெரியதிலிருந்து சிறியதைக் கழித்து மேற்சொன்ன
யூனிட்டுக்கு மின் வட்டி, கரண்ட் வட்டி, ஷாக் வட்டி, சகல வட்டிகளும் போட்டு கணக்கிட்ட தொகை… ரூ.42135.
தரைத்தளத்தில் இருக்கும் அதி நவீன டிஜிட்டல் டால்பி ஐமேக்ஸ் மின் மீட்டரின் முன் சாஷ்டமாகச் சரணடைந்தேன்.
ஏகப்பட்ட எண்களை வரிசையாகப் படம் காட்டியது. எட்டாம் வகுப்பில் படித்த மின் அலகுகள் எல்லாம் நினைவின் கரையில் மிதந்து ஒதுங்கின.
இறுதியாக 38260 என்று ஓர் எண்ணும் காட்டியது. எனில், மின் கணக்கீடு தவறில்லை என்று உணர்ந்தபோது, சற்றே வியர்த்தது.
குடியிருப்பு வளாகத்தின் மேலாளரைச் சந்தித்து கேட்டேன். ‘நம்ம அப்பார்ட்மெண்ட்ஸ்
மேனேஜ்மெண்ட் பில்லே மேக்ஸிமம் 35000தான் வரும்’ என்று அவர் சொன்ன பதில் ஆறுதல் அளிக்கவில்லை. ஐபிஎல் ஃபைனல் மேட்ச் எனது வீட்டில் நடைபெறவில்லை.
கடந்த மே மாதம் 10 நாள்களுக்கும் மேல் வீட்டில் யாரும் இல்லை. எனது மின் பயன்பாட்டு வரலாற்றில் நான் கட்டிய அதிகபட்ச தொகை நாலாயிரத்துச் சொச்சம்தான். மேலும் குழம்பிப் போனேன். எதிர்ப்படும் நபர்களை எல்லாம் பார்த்து அனிச்சையாகப் புலம்ப ஆரம்பித்தேன்.
ஒருவேளை வீட்டில் மின்கசிவாக இருக்குமோ? என்று நண்பன் சந்தேகம் கிளப்பினான்.
அதைப்பரிசோதிக்க வீட்டிலிருக்கும் அனைத்து ஸ்விட்களையும் அணைத்து, சகல வயர்களையும் இணைப்பிலிருந்து பிடுங்கி, மெயின் சுவிட்சையும் தூங்க வைத்து, குடும்பத்தில் அனைவரும் ஒரு மணி நேரத்துக்கு தியான நிலைக்குச் சென்றோம்.
அந்தச் சமயத்தில் மின் மீட்டரில் ரீடிங்கானது உயரவே இல்லை. அதில் இருக்கும் சீரியல் பல்பும்
ஒளிரவில்லை. 0.00 என்று சமர்த்தாக எண்ணைக் காட்டியது. ஆக, மின் கசிவு இல்லை
என்று உறுதி செய்தபின் எனது பகுதிக்கான மின்வாரிய அலுவலகம் நோக்கிப் பவ்யத்துடன் படையெடுத்தேன்.
உதவி மின் பொறியாளரை அணுகினேன். விஷயத்தைக் கொட்டினேன். சிவாஜி ரசிகர் போல. ‘உங்க வீடு என்ன பாரத விலாஸா?’ என்று ஒரு ஜோக் அடித்தார். எதற்கும் இருக்கட்டும் என்று சிரித்து வைத்தேன்.
‘ஒரு லெட்டர் எழுதிக் கொடுங்க. இப்ப வந்த பில் பிரிண்ட் அவுட் இருக்கா?’
‘இப்ப வந்த பில், இதுக்கு முன்னாடி கட்டின பில்லுக்கான ரசீது, கடந்து ரெண்டு வருசமா நான் கட்டுன தொகையை காண்பிக்கிற லிஸ்ட் எல்லாமே இருக்கு.’
மேலும் கீழும் பார்த்தார். ‘தம்பிக்கு ஒரு பேப்பர் கொடுங்க’
‘பேப்பர், பேனா எல்லாம் இருக்கு. கீழ தேதி போட்டு கையெழுத்துகூட போட்டு வைச்சுட்டேன். என்ன எழுதணும்னு மட்டும் சொல்லுங்க சார். ஒற்றுப்பிழை இல்லாம
செதுக்கித் தர்றேன்.’
‘எல்லாத்துக்கும் தயாராதான் வந்திருக்கீங்கபோல.’‘ நைட்டு தூக்கமே வரல சார்.’
எழுத வேண்டியதைச் சொன்னார். எழுதி முடிக்கும்வேளையில், வெளியே டிரான்ஸ்பார்மரோ, அது போன்ற ஒன்றோ பெருஞ்சத்தத்துடன், மகா தீப்பிழம்புடன் வெடித்தது. ‘ பயப்படாதீங்க’ என்றார்.
‘எனக்குள்ள இதைவிடப் பெருசா வெடிச்சிக்கிட்டு இருக்குது சார்’ என்றேன். ‘எங்க ஆள் வந்து செக் பண்ணுவாங்க. என்ன பிரச்னைன்னு பார்ப்போம்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அன்று மாலையே மின்வாரியத்திலிருந்து ஒருவர் வந்து ஆராய்ந்தார். ‘மீட்டர் பிரச்னையில்ல. ரீடிங்ல பிரச்னை. மூவாயிரம் யூனிட் வரை குறையும்.
இது ஹெட் ஆபிஸ்க்கு போட்டுதான் வரும். புது பில் அமௌண்ட் வர்ற வரை கட்டாதீங்க. கொஞ்ச
நாளாகும். ப்யூஸ் புடுங்க வந்தா சொல்லிருங்க. என் நம்பர் இதுதான். ஃபாலோ பண்ணிக்கோங்க’ என்று படபடவெனச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
மூவாயிரம் யூனிட் வரை குறையும் என்றால் 1200 யூனிட்டே அதிகம். அதற்கே 10000 ரூபாய் வருமே என்று மன உளைச்சல் அதிகமானது. ரீடிங் பிரச்னை என்று அவர் சொன்னது எப்படி என்றும் கணக்கே வராத கலைஞனுக்குப் புரியவில்லை. மேற்படி நபருக்கு அடிக்கடி போன் செய்து குசலம் விசாரித்துக் கொண்டே இருந்தேன்.
இரு தினங்களுக்கு முன்பு திருத்தப்பட்ட பில் தொகை வந்தது. ரூ.4280. அதாவது 770 யூனிட்டுகளுக்கான கணக்கீட்டுத் தொகை. பில்லின் விவரத்தை எடுத்துப் பார்த்தேன். 34010 முதல் 34780 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனில் பழையதில் என்ன தவறு என்று யோசித்த போது மின்சாரம் இல்லாமலே பல்பு ஒன்று எனக்குள் ஒளிர்ந்தது. மின் மீட்டரை
நோக்கி ஓடினேன். ஆராய்ந்தேன்.
ரீடிங் எடுப்பவர் செய்த அந்த மகா தவறு அப்போதுதான் எனக்குப் புலப்பட்டது.
மின்சார யூனிட் கணக்கீடுக்கான எண் XXXXX.X cum kW என்பதுதான். அதற்கடுத்ததாக XXXXX.X cum kVA என்றோர் எண்ணும் வருகிறது.
ரீடிங் எடுக்க வந்தவர் 38245 cum kVA
என்ற எண்ணை எனக்கான யூனிட்டாகக் குறித்து விட்டார். அவர் குறித்திருக்க வேண்டியது 34780 cum kW என்பதைத்தான். ஆக மொத்தம் 4235 யூனிட் கணக்கீடு செய்யப்பட்டு பில் தொகையில் எரிமலை வெடித்திருக்கிறது.
இப்போதெல்லாம் EB கார்டில் யாரும் எழுதித்தருவதில்லை. அவர்கள் கொண்டு வரும் okகையடக்கக் கருவியில் கவிதை எழுதிவிட்டுப் போய்விடுகிறார்கள். நேரடியாக
ஆன்லைனில் நாம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
அத்தனை வீடுகளின் EB
கார்டுகளைச் சேகரித்து பில் தொகை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் இதுபோன்ற
பிரச்னைகள் வந்ததில்லை.
அப்படி ரீடிங் எடுக்க வந்தவர் கார்டில் எழுதியிருந்தால் 4200
யூனிட் வர வாய்ப்பில்லையே என்று அப்போதே சுதாரித்து தனது பிழையைச் சரி செய்திருக்கலாம்.
இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். பிரபாஸ் பட பட்ஜெட் பில் தொகை வந்ததால்தான் எனக்குள்ளும் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஒருவேளை cum kVAக்கான அளவு 35010 என்று இருந்து ஆயிரம் யூனிட்டுக்கான பில் தொகையை
தவறாகக் கணக்கிட்டிருந்தால், எட்டாயிரத்து சொச்ச பில் வந்திருந்தால் நானும்
‘ஒருவேளை அதிகம் l பயன்படுத்திவிட்டோமோ’ என்று யோசிக்கமால் மிகுந்த மன
வருத்தத்துடன் பில்லைக் கட்டியிருப்பேன்.
ஆகவே, இதன் மூலம் கற்றுக் கொண்ட பாடம் இனிமேல் ஆன்லைனில் மின்சாரக் கட்டணத்துக்கான கணக்கீட்டு தொகை என்ன வந்தாலும், அது சரிதானா என்று மின் மீட்டரில் சரி பார்க்க வேண்டும் என்பதுதான்.
மின் சிக்கனம் ! தேவை இக்கணம்!
– எழுத்தாளர் முகில்