எதிர்கட்சிகளின் முதல் கூட்டத்திற்காக செந்தில் பாலாஜி, இரண்டாவது கூட்டத்திற்காக பொன்முடி, அலற விடும் அமலாக்கத்துறை !
அமைச்சர் பொன்முடி வீடுகளில்
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணிமுதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல சென்னையில் உள்ள அவரது அலுவலகத்திலும், விழுப்புரம் சண்முகபுர காலனியில் உள்ள அவரின் வீட்டிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதே நேரத்தில் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கௌதம் சிகாமணி, கள்ளக்குறிச்சி எம்.பி.யாக (திமுக) உள்ளார்.
சென்னையில் உள்ள வீட்டில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். காலை முதல் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் திமுக-வினர் குவிந்து வருகின்றனர். கௌதம் சிகாமனி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில், ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இன்று பெங்களுரில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்த ரெய்டு செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக எதிர்க்கட்சிகளின் முதலாவது கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் கைதும் செய்யப்பட்டிருந்தார்.
இதற்கிடையில் கலைஞர் டிவி சிஇஓ சண்முகசுந்தரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது..