அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்கள் பாதிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்
அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால்
ஏழை மக்கள் பாதிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்
அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர் அருகேயுள்ள துலுக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் (பொன்னார்), தமிழ்நாட்டில் கல்வி அறிவு 7 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில் அதை 37 சதவீதமாக உயர்த்திக் காட்டியவர் காமராஜர் என்றார்.
மேலும் 3 கி.மீ.க்கு ஒரு தொடக்கப்பள்ளியும் 5 கி.மீ.க்கு ஒரு உயர்நிலைப் பள்ளியும் கொண்டு வந்தவர் காமராஜர். ஆனால் இப்போது ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன எனக் கூறிய பொன்னார், ‘அரசுப் பள்ளி மூடப்படுகிறது என்றால் காமராஜரின் இலவச கல்வித் திட்டமும் மூடப்படுகிறது. ஏழைகளின் எதிர்காலம் மூடப்படுகிறது’ என்றார்.
பெற்றோர்களின் வருமானத்தில்தான் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும் என்ற நிலைமைக்கு மீண்டும் திமுக தள்ளியுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக, காமராஜருக்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியே இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே தங்களுடைய தலைவர்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்றார் பொன்னார் .