தமிழகத்தில் 9 ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களின் பட்டியலை அமித்ஷா வெளியிடுவாரா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தில் 9 ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களின் பட்டியலை அமித்ஷா வெளியிடுவாரா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகள் செயல்படுத்திய திட்டங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுவாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் சுற்றுப்பயணமாக தனி விமானத்தில் இன்று மாலை சேலம் வந்தடைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சேலம் ஐந்து சாலையில் உள்ள ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:
நான் தெம்போடு, இறுமாப்போடு நின்று கொண்டிருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடிய சூழலில் நான் கலந்து கொள்ளும் முதல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டமாக சேலம் மாவட்ட கூட்டம் அமைந்திருக்கிறது. சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவான ஊர் இந்த சேலம். அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்ட அண்ணாத்துரை தீர்மானம் தான் சேலத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கியது. சமூக சீர்திருத்த எண்ணங்களை சட்டமாகச் செயல்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.
1996 இல் திமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு 1997-ம் ஆண்டு சேலத்தில் திமுக மாநாடு மூன்ற நாட்கள் நடந்தது. மாநாட்டு ஊர்வலத்திற்கு தலைமை தாங்கும் மிகப்பெரிய பெருமையை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எனக்கு கொடுத்தார். மாலை 5 மணிக்கு தொடங்கிய பேரணி விடிய விடிய நடந்தது. அப்படிப்பட்ட மாபெரும் பேரணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். மூன்று நாள் மாநாட்டில் ஒரு நாள் முழுக்க இளைஞர் அணி நடத்தியது.
கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவின் போதுதான் நாம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அந்தவகையில், 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு அச்சாரமாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளது.
அதிலும் நிச்சயம் சேலத்தில் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அதற்காகத்தான் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை இங்கு அனுப்பியுள்ளேன். அவர் தேர்தலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர். உங்களை பார்த்தவுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கிடைத்து விட்டது.
கடந்த 10 ஆண்டு காலம் தமிழகத்தை பாழ்படுத்திய அதிமுகவை அகற்றி விட்டு மக்கள் நம்மிடம் ஆட்சியை கொடுத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் திமுக கட்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சிப் பணிகள் மந்தமாகும் சூழ்நிலை திமுகவில் இல்லை. கட்சி நிர்வாகிகள் அனைவரும் உறக்கமின்றி பாடுபட்டு வருகின்றனர். சுமார் 2கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பேச உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கட்டமைப்பு கொண்ட கட்சி உலகத்திலேயே எங்கும் இல்லை.
திமுகவை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்ற சூழ்நிலையை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவாக்கி கொண்டிருக்கிறேன். உங்கள் உழைப்பின் பலன் உங்களை வந்து சேரும். நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. கட்சி வளர்ச்சி, ஆட்சி பொறுப்பில் இருப்பதால் தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தானே வரப்போகிறது என அலட்சியமாக இருக்கக் கூடாது. பாஜகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு சரிந்து வருகிறது. அதற்காக அவர்களை எதை வேண்டுமானால் செய்வார்கள். கர்நாடக நிலை தொடர்ந்தால் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது. எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
9 ஆண்டுகள் திட்டங்களை பட்டியலிட தயாரா?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். பாஜக நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தெரிகிறது. தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் கொண்டு வந்த சிறப்புத் திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாராக இருக்கிறாரா?
மத்தியில் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில், திமுக அங்கம் வகித்த போது ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவடைய திமுகதான் காரணம். மத்திய அரசின் நிதியில் 11 சதவீத நிதியை தமிழகத்திற்கு கொண்டு வந்த பெருமை திமுகவுக்குத்தான் உள்ளது. அதேபோல 69 முக்கிய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினோம். நூறாண்டு கனவான செம்மொழி தகுதியை தமிழுக்கு பெற்று தந்தோம். சுமார் ரூ.56 கோடியில் சாலை திட்ட பணிகளை செய்தோம். ஒரகடத்தில் மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. ரூ.1553 கோடியில் சேலம் உருட்டாலை குளிர்விப்பு உருட்டாலையாக மேம்படுத்தப்பட்டது.
தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், ரூ.120 கோடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, ரூ.1,550 கோடியில் தாம்பரம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், ரூ.2427 கோடி சேது சமுத்திர திட்ட பணிகள் தொடக்கம், நெசவு தொழிலுக்கு சென்வாட் வரி நீக்கம், நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ரூ.1728 கோடியில் 90 ரயில்வே மேம்பால திட்ட பணிகளை செய்தோம். பொடா சட்டம் ரத்து செய்தோம். சென்னையில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்கு போக்குவரத்து முனையம் நீர் வழி போக்குவரத்து திட்ட பணிகள், சேலம், கரூரில் ரூ.400 கோடியில் உயர் தொழில்நுட்ப பூங்கா என பல்வேறு பணிகளை செய்தோம். இதுபோன்றதொரு பட்டியலை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட தயாரா? அந்த தைரியம், ஆற்றல் அவருக்கு வருமா?
2015 மத்திய நிதிநிலை அறிக்கையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவரைக்கும் மருத்துவமனை கட்டப்படவில்லை. அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்மஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஆனால் மதுரையில் மட்டும் எய்ம்ஸ் கட்டப்படவில்லை. மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு ரூ.1000 கோடி ஒதுக்க மனமில்லாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு அமித்ஷா பதில் சொல்ல வேண்டும். பாஜக தமிழகத்திற்கு கொடுத்தது ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வு, தமிழ் புறக்கணிப்பு, குடியுரிமை சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் உரிமை பறிப்பு, சமஸ்கிருத திணிப்பு தான் பாஜக அரசு கொடுத்தது.
கொத்தடிமைக் கூட்டமான அதிமுகவை நம்பி பாஜக உள்ளது. ஜெயலலிதாவிற்கு பிறகு தோல்வியை மட்டுமே பெற்ற கட்சி அதிமுக. ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி என தோல்வி மேல் தோல்வி அதிமுகவிற்கு கிடைத்துள்ளது. சசிகலாவின் காலை வாரிவிட்டு பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி.
மக்கள் வெள்ளத்தில் அதிமுக, பாஜக இருவரும் அடித்து செல்லப்படுவது உறுதி. திமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொருவரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயனடைந்து வருகின்றனர். மகளிர் இலவச பேருந்து திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, காலை சிற்றுண்டி, புதுமைப் பெண் திட்டம், நம்மைக் காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் வழங்கப்படும். திமுக ஆட்சியின் சாதனைகளை நிர்வாகிகள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
சமூக வலைத்தளங்கள் மூலமே மக்கள் செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். எனவே திமுக நிர்வாகிகள் சமூக வலைத் தளங்களில் கணக்கை தொடங்க வேண்டும். திமுகவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்முகாமில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்திகளை முடக்க வேண்டும். திமுகவில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு துணை அமைப்புகளில் வாய்ப்பு வழங்கிட வேண்டும். மாவட்ட அளவில் மட்டுமே பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு கணிசமாகப் பொறுப்புகளை வழங்க வேண்டும். திமுகவினரை அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் மகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டும். திமுக தொண்டர்களை கவனித்து குறையை தீர்த்து வைக்க வேண்டும். குறையை தீர்க்க முடியாவிட்டாலும் காது கொடுத்து கேட்க வேண்டும். நம்முடைய குடும்பம் போல கட்சி இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்க தேவையானதை செய்யவேண்டும்.
தேசிய அளவில் திராவிட மாடல் ஒங்கி ஒலித்து கொண்டிருக்கிறது. தெற்கில் இருந்து எழும் குரலை வடக்கே இருப்பவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஸ்டாலினும் அஞ்ச போவதில்லை. திமுகவும் அஞ்ச போவதில்லை. யார் வந்தாலும் நாங்கள் பயப்பட போவதில்லை.
இந்திய ஜனநாயகத்தை காப்பாறும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று காட்ட வேண்டும் ” என்று பேசினார்.
-சோழன்தேவ்