திமுகவில் அமைப்பு ரீதியாக அறிவிக்கப்பட்ட 110 மாவட்டங்களுக்கான உட்கட்சி தேர்தல் நடத்த தலைமை கழகத்தால் தொகுதி பார்வையாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.
தலைமை கழகத்தால் அனுப்பப்படும் பார்வையாளர் முன்னிலையில், தற்போதைய மாவட்ட செயலாளர் மாவட்ட செயற்குழு கூட்டத்தைக் கூட்டி ஏற்கனவே அறிவித்தபடி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை, அமைப்புகளை பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும்; ஏற்கெனவே, தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்பு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
தொகுதி பார்வையாளர்களும், தற்போதைய மாவட்ட செயலாளர்களும் சேர்ந்து தலைமை அறிவித்த வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கிளை, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி கழகங்களை உருவாக்கி தலைமைக்கு அறிவிப்பார்கள் அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக முரசொலி நாளிதழில் வெளியாகும்.
அதன்பின் உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் சேர்க்கைக்குப் பின் கிளைக் கழகத் தேர்தல், கிளை கழக தேர்தலில் போட்டியிடுவோர் 45 – வயதுக்கு மேல் இருக்கக் கூடாது . அதன் பின், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழகத் தேர்தல். இந்த நிர்வாகிகள் தேர்வில் 60- வயதுக்கு மேற்பட்டோர், இரண்டு முறை பதவியில் இருந்தவர்கள் போட்டி போட முடியாது. இறுதியாக மாவட்ட கழக செயலாளர் தேர்தல்.
இந்த தேர்தலில் 70- வயதுக்கு மேற்பட்டோர் மற்றும், மூன்று முறைக்கு மேல் பதவியில் இருந்தவர்கள் போட்டி போட முடியாது. பட்டியல் சமூகமான ( பறையர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர்) மற்றும் பெண்கள் போட்டியிடும் மாவட்டங்களை தலைமை முடிவு செய்யும் என்று தகவல்.
மற்ற மாவட்ட செயலாளர்கள் தேர்தல் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியான மாவட்ட செயலாளர்கள் தேர்தல் முடியும் வரை தற்போதைய மாவட்ட செயலாளர்களே தொடர்ந்து நீடிப்பார் என தகவல்.
மாவட்ட பொறுப்பாளரை அறிவித்தால்தான் கிளை, வட்ட, பகுதி நிர்வாகிகளை எளிதில் தேர்ந்தெடுக்க முடியும். தற்போதைய கிளை, வட்ட, பகுதி நிர்வாகிகள் எல்லாம் நீங்கள் அறிவித்த வயதை தாண்டி விட்டனர். இவர்கள் அந்த பொறுப்புக்கு தகுதி இல்லாத போது, உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்வது யார்? பணம் கட்டுவது யார்? கிளை, வட்ட, பொறுப்பிற்கு யார் வர போகிறார்கள் என்றே தெரியாத போது யார் செலவு செய்து உறுப்பினர் படிவம் சேர்ப்பார்கள்? முன்பெல்லாம் ஒன்றிய, பகுதி, செயலாளர்கள் இருந்தார்கள் அவர்கள் ஆர்வமோடு பணம் கட்டி உறுப்பினர் படிவம் சேர்த்தார்கள்.
அவர்களுக்கு மாவட்ட செயலாளர் இவர்தான் என்ற ஒரு நிலை இருந்தது. ஆனால், மாவட்ட பொறுப்பாளர் யாரென்றே தெரியாது? ஒன்றிய, பகுதி, செயாளாலர் யார் என்றே தெரியாது? வட்ட கழக, கிளை கழக செயலாளர் யாரென்றே தெரியாத நிலையில், பழைய மாவட்ட செயலாளர் ஆனைப்படியும், தலைமையிலிருந்து அனுப்பும் இந்த புதிய மாவட்டத்தை பற்றியே தெரியாதவர் வழிகாட்டுதலில் எப்படி தேர்தல், நடத்துவது எப்படி நிர்வாகிகளை தேர்தெடுப்பது? இது தான் தொண்டர்களின் தற்போதைய கருத்து.
மேலும், தற்போதைய மாவட்ட செயலாளர்களின், நேரம் போதாமையின் காரணமாக நிர்வகிக்க முடியாத காரணத்திற்காகதான் தற்போது புதிய மாவட்டங்களை பிரித்துள்ளீர்கள். எனவே, கழக பணிகள் செழுமையாக நடை பெற புதிய பொறுப்பாளர்களை முதலில் அறிவிப்பதே சால சிறந்த என்றே தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அவர்கள் மாவட்ட நிர்வாகத்தை அமைக்கட்டும் தலைமை பொறுப்பாளர் அனைத்தையும் கண்காணித்து அறிவுறுத்தட்டும்,சரியாக அமைக்கவில்லை என்றால் தலைமை நடவடிக்கை எடுக்கட்டும். ”இப்பவாவது தொண்டர்களின் கருத்தை கேளுங்களேன்” என்றே குரல் எழுப்புகிறார்கள் திமுக தொண்டர்கள்.
– அங்குசம் சிறப்பு செய்திக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.