விருதுநகர் டி.எஸ்.பி. காயத்ரியை தாக்கிய நபர் கைது ! ஆறு பேரிடம் தொடரும் விசாரணை !
விருதுநகர் டி.எஸ்.பி. காயத்ரியை தாக்கிய நபர் கைது ! ஆறு பேரிடம் தொடரும் விசாரணை ! விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை எதிரில் சாலைமறியல் செய்ய முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயன்ற, விருதுநகர் டி.எஸ்.பி. காயத்ரி போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவரை கைது செய்திருப்பதாகவும், ஆறுபேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விருதுநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் காளிகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நோக்கி ராமேஸ்வரம் சாலையில் வரும்பொழுது, கோதநாயக்கன்பட்டி விளக்கு அருகே இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருச்சுழி போலீசார், லெட்சுமணன், அருண்குமார், காளிஸ்வரன், பாலமுருகன் ஆகிய நான்குபேரை உடனடியாக கைது செய்ததோடு, தலைமறைவாகிவிட்ட அய்யாவு என்ற வேல்முருகன், மற்றும் வீரசூரன் ஆகியோரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைமாகிவிட்ட அந்த இருநபர்களையும் கைது செய்தால்தான், காளிக்குமாரின் சடலத்தை வாங்குவோம் என்பதாக அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை எதிரில் சாலைமறியலில் ஈடுபட கும்பலாக அணிதிரண்டு நின்றவர்களிடையே, சமாதானம் பேச முயன்ற டி.எஸ்.பி. காயத்ரியின் தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளிவிட முயற்சித்துள்ளனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களின் பிடியிலிருந்து டி.எஸ்.பி.யை மீட்டு சென்றனர்.
”இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யுமாறு” குறிப்பிட்டு, நடைபெற்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
மிக சமீபத்தில், திருச்சி எஸ்.பி.வருண்குமார் மீது ரவுடிகள் கொம்பன் ஜெகன் ஆதரவாளர்கள், ரவுடி துரையின் ஆதரவாளர்கள் இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக அவரது படத்தை பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். விசாரணையில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆர்வக்கோளாறில் பதிவிட்ட இளஞ்சிறார் ஒருவரின் பெற்றோரை வரவழைத்து புத்திமதிகூறி வழக்குப்பதியாமல் திருப்பியனுப்பியிருந்தால் எஸ்.பி.வருண்குமார்.
ரவுடிகள் தரப்பிலிருந்துதான் இத்தகைய மிரட்டல் என்ற நிலையில், நடந்த முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் 8% வாக்குகளுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அடையாளம் காணப்படும் நாம் தமிழர் கட்சியினரின் ஆபாச வசவுகளுக்கும் ஆளான கொடுமையும் இதே தமிழகத்தில்தான் அரங்கேறியிருக்கிறது.
குறிப்பாக, எஸ்.பி.வருண்குமாரின் மனைவியும் புதுக்கோட்டை எஸ்.பி.யுமான வந்திதாபாண்டே குறித்தும் அவர்களது பிள்ளைகள் குறித்தும் தரம்தாழ்ந்த ஆபாசமான விமர்சனங்களுக்கு பெரிய அளவிலான எதிர்வினை எதுவும் நடைபெற்றிராத நிலையில்தான், அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி.யின் தலைமுடியைப் பிடிக்கும் அவலத்தில் வந்து நிற்கிறது.
– மாரீஸ்வரன்