ஊராட்சித் தலைவரும் செயலரும் கூட்டு சேர்ந்த அடித்த கொள்ளை கசிந்த ஆடியோவால் ஆடிப்போன ஆரணி !
ஊராட்சித் தலைவரும் செயலரும் கூட்டு சேர்ந்த அடித்த கொள்ளை … கசிந்த ஆடியோவால் ஆடிப்போன ஆரணி – திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்திற்குட்பட்ட பனையூர் ஊராட்சி மன்றத் தலைவியாக அஞ்சலியும் துணைத்தலைவராக வசந்தியும் பதவியில் இருந்து வருகிறார்கள். இங்கு ஊராட்சி செயலாளராக இருந்த சுரேசும், தலைவர் அஞ்சலியும் சேர்ந்து பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததால் ஊராட்சி செயலாளர் சுரேஷ் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தான் ஏற்கெனவே பணியாற்றிவந்த பனையூர் ஊராட்சிக்கே திரும்பி வந்துவிட வேண்டுமென்ற நோக்கில், துணைத்தலைவர் வசந்தியிடம் பேசுவதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊராட்சிமன்றத் தலைவி சொல்படி கேட்காதே என்பது தொடங்கி, எந்த பில்லையும் பாஸ் பன்ன விடாதே என்று உத்தரவு போடுவது வரையில் நீள்கிறது அந்த ஆடியோ. குறிப்பாக, ஊராட்சிமன்ற செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ள மக்களை அணிதிரட்டி சாலைமறியல் செய்யுமாறும், கோரிக்கை விடுக்கிறார் ஊராட்சி செயலர் சுரேஷ். அதற்கு கைம்மாறாக, ஊராட்சியில் 10 இலட்சம் இருப்பில் இருக்கிறது. அதில் இருந்து எப்படியும் சம்பாதித்து 1 இலட்சம் உனக்கு கொடுக்கிறேன் என்பதாகவும் பேரம் பேசியிருக்கிறார் சுரேஷ்.
”ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் அமைத்ததில் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்து வழங்கவில்லை. 100 நாள் வேலைக்கு அட்டை தருவதற்கு 500 வசூல் செய்துள்ளதாக பொது மக்கள் என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், என்னிடம் கேட்காதீங்க கடைசி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அங்கு வந்து கேளுங்கனு சொல்லிட்டேன். அதற்கு அவர்கள் மறியல் செய்யபோவதாக சொல்லுறாங்க.” என்கிறார், துணைத்தலைவி வசந்தி.
அதற்கு செயலர் சுரேஷ், “ அதுக்கென்ன ? சாலைமறியல் செய்ய சொல்லு. நாளைக்கு, உன் தலைமையில் மறியல் பண்ணிடு. இந்த மாதிரி பண்றாங்கன்னு சொல்லி பேர கெடுத்தால்தான், அடுத்த 3 மாதத்தில் காலி செய்ய முடியும். ‘பண்டு’ எப்படி எடுக்கணும்கிறததான் நான் பார்த்துக்கிட்டே இருக்கேன்.
அதனால் நீ கரக்டா இருக்கனும். நான் வந்து பாத்துக்கிறேன்.” என்கிறார். அதற்கு, “அதான். நான் கரெக்ட்டா இருக்கிறேன். எதிலுமே கையெழுத்து போடமாட் டேன். சம்பளத்தோடு சரி. ” என்கிறார், வசந்தி. “அவ்வளவுதான் காயை நகர்த்து பார்த்துக்கலாம். நீ கூட்டத்திற்கு போகாமல், சாலை மறியலில் உட்காரு. உன் மீது கேஸ் போட்டாலும் ஒன்னும் பண்ண முடியாதுமா, நீ வடக்கு மேட்டுலயே உட்காருமா, அப்போ அதிகாரிங்க ஜீப் எடுத்துக்கிட்டு வந்து பேசுவாங்க, தலைவர் மீது நாளைக்கே நடவடிக்கை எடுப்பானுங்க” என்கிறார் சுரேஷ்.
நிறைவாக, “நான் உன்னை கேட்காமல் ஏதுவும் செய்யமாட்டேன். எனக்கு 10 பைசா வேணாம். நான் OTP , சொல்ல மாட்டேன். பதவிய விட்டு தூக்கினாலும் கவலை இல்லை. ” என்பதாக மிகவும் சுவாரஸ்யமாக நீள்கிறது அந்த உரையாடல்.
ஊராட்சியில் நடைபெறும் கூட்டுக்கொள்ளை குறித்தும், குறிப்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருவதும் இந்த ஆடியோ வழியே அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
இந்த ஆடியோ குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியனிடம் பேசினோம். “ விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். விசாரணையின் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை அமையும்” என்பதாக பதிலளித்திருக்கிறார்.
என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள், என்று பொருத்திருந்துதான் பார்ப்போமே!
– மணிகண்டன்