தொடர் ரேசன் அரிசி கடத்தலுக்கு பின்புலத்தில் அதிர வைக்கும் மர்மம் ! – நடப்பது என்ன ?
கஞ்சா கடத்தலுக்கு இணையாக மார்க்கெட்டில் கிராக்கியான பொருள் ரேஷன் அரிசி ! தமிழகத்தில் கஞ்சா கடத்தலுக்கு இணையாக மார்க்கெட்டில் ரொம்பவே கிராக்கி நிறைந்த ஒரு கடத்தல் பொருள் இருக்கிறதென்றால், அது என்னவாக இருக்கும்? கஞ்சாவை காட்டிலும் போதை மிகுந்த வஸ்துவாக இருக்கும் என்றுதானே, நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.
தமிழகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் விநியோகம் செய்யப்படும் “ரேஷன் அரிசி” தான் அந்த கடத்தல் பொருள். நேற்றுவரை கள்ளச்சாராயத்தையும், கஞ்சாவையும் கடத்தி தொழில் செய்து வந்த ரவுடிகள், இப்போது “ரேஷன் அரிசி” கடத்தலில்தான் கல்லா கட்டி வருகின்றனர் என்பதும் மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மை.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல, சமீபத்தில் திருச்சியில் அடுத்தடுத்தடுத்து அரங்கேறிய “ரேஷன் அரிசி” கடத்தல் சம்பவமே இதற்கோர் துலக்கமான உதாரணமாக அமைந்துவிட்டது.
சம்பவம் – 1
ஆகஸ்டு-14 ஆம் தேதியன்று, திருச்சி – தஞ்சாவூர் நெடுஞ்சாலை பழைய பால்பண்ணை அருகே, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசு ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மூன்று சக்கர வாகனம் ஒன்றில் கடத்தி வரப்பட்ட 1040 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்திருக்கிறார்கள். கடத்தலில் ஈடுபட்ட அரியமங்கலத்தை சேர்ந்த இஸ்மாயில் தலைமறைவாகிவிட, மூன்று சக்கர வாகனத்தின் டிரைவரான வரகனேரியைச் சேர்ந்த உமர்பரூக்கை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.
சம்பவம் – 2
ஆகஸ்டு – 21 ஆம் தேதி, திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர், நேரு தெருவில் ஒரு அரிசி அரவை மில்லில் இருந்து டன் கணக்கில் ரேஷன் அரிசியை கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று மாவட்ட நிர்வாகத்துக்கு கிடைக்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு, திருச்சி கிழக்கு உணவுப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் சத்தியபாமா, திருச்சி கிழக்கு வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் மற்றும் தனிவருவாய் ஆய்வாளர் அறிவழகன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் சம்பந்தபட்ட ஆலையை சோதனையிடுகிறார்கள். கடத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, 40 கிலோ எடை கொண்ட 85 மூட்டைகளிலிருந்து 3400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட மேலகல்கண்டார்கோட்டை சாதிக் என்கிற அன்வர்பாட்சா கைது செய்யப்படுகிறார். இதுபோன்று, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய ரேஷன் அரிசியை யாரேனும் கடத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஊடகங்களின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறார்.
சம்பவம் – 3
ஆகஸ்டு – 25 ஆம் தேதி, திருச்சியில், 21 மூட்டைகளுடன் வாகன ஓட்டுநர் மற்றும் பெண்மணி ஒருவரும் கைதாகிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு கைதான சாதிக் என்கிற அன்வர்பாட்சா என்பவரின் மனைவிதான் அவர். அதே திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர், நேரு தெருவில் உள்ள அரிசி ஆலையின் வாசலில் வைத்துதான் இவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நான்கு நாட்களுக்கு முன்னர் கணவர் கைதாகி சிறையிலடைக்கப்பட்ட நிலையிலும்கூட, எந்தவித அச்சமும் இன்றி அதே தொழிலை அவ்வளவு தைரியமாக அவரது மனைவி தொடர்கிறார் என்பதிலிருந்தே, ரேஷன் அரிசி கடத்தலுக்கு உள்ள மகிமையை விளங்கிக் கொள்ளலாம்.
சட்டம் ஒழுங்கு போலீசாருக்கும், கிரைம் போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும், முக்கியமாக டி.ஆர்.ஓ., கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தினருக்கும் வழக்கமான பணிகளே மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அவர்களது பணிச்சுமையோடு, ரேஷன் அரிசி கடத்தல் கும்பலையும் சேர்த்து கண்காணிப்பது என்பது சாத்தியமற்றது. இந்த தனிச்சிறப்பான சூழல் காரணமாகத்தான், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை என்றொரு தனிப்பிரிவே இயங்கிவருகிறது. இவர்களது முதன்மையான பணியே, ரேஷன் பொருட்கள் கடத்தை கண்காணித்து தடுப்பதுதான்.
ஆனாலும், தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. காரணம் என்னவாக இருக்கும்? திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலத்துக்கு ஒரு எஸ்.பி. தான் இருக்கிறார். அவர் ஒருவர் மட்டும்தான் இத்தனை மாவட்டங்களையும் கண்காணித்து இயக்கியாக வேண்டும். இது, நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய மையமான சிக்கல்.
அடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை (CSCID) யில் பணியாற்றும் கீழ்மட்ட போலீசாரே, இந்த கடத்தல் சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.
திருச்சியில், நடைபெற்றதாக குறிப்பிடப்படும் இம்மூன்று சம்பவங்களுமே CSCID போலீசாரின் புலனாய்வு பணியால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. மாவட்ட ஆட்சியர் மற்றும் டி.ஆர்.ஓ.வுக்கு “கிடைத்த ரகசிய தகவலின்” அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள்.
பொதுஜனங்களுக்கு தெரிந்த “ரகசிய தகவல்”, அந்தத்துறைக்கென்றே இயங்கும் CSCID போலீசாருக்கு தெரியாமல் போனது எப்படி என்பதே இங்கே எழும் மையமான கேள்வி. இவற்றையெல்லாம் விட, ஒரு ”ஸ்பெஷல் ஐட்டமாக” உபரி தகவல் ஒன்று இருக்கிறது.
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், டி.ஆர்.ஓ. மேற்பார்வையில் சிறப்புக்குழுவினர் அதிரடி ஆய்வை நடத்தி, கடத்தல் காரர்களை கையும் களவுமாக பிடித்து, CSCID போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டனர்.
களத்தில் பிடிபட்டது, 50 கிலோ எடை கொண்ட 95 மூட்டைகள் என்கிறார்கள். ஆனால், மறுநாள் பத்திரிகைகளில், 40 கிலோ எடை கொண்ட 85 மூட்டைகள் என்பதாக செய்தி வெளியாகிறது. ஏறத்தாழ ஒரு டன் அரிசியை குறைத்துக் காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. சில வழக்குகளில், சம்பவ இடத்தில் பிடிபடுவது ஒரு நபர், அதனையடுத்து நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவது வேறொரு நபர்.
இதுபோன்ற மோசடிகளும் நடைபெறுவதாக சொல்கிறார்கள், இந்த ரேஷன் கடத்தல் சம்பவம் குறித்த சூட்சுமம் அறிந்தவர்கள். இவையெல்லாம், CSCID போலீசாரும் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறார்களா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
தமிழகத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் 39 மாவட்டங்களில், 318 தாலுக்காகளில், 34796 நியாயவிலைக்கடைகள் இயங்கி வருகின்றன. 22425783 குடும்ப அட்டைகளின் வழியே, 70077261 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
ஒவ்வொரு ரேஷன் கடைகளிலுமே, குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருமே, அவர்களுக்கான அந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டை முழுமையாக வாங்கிவிடுவதில்லை. இவர்களை சரியாக கண்டறிந்து, அவர்கள் முறையாக அவர்களுக்குரிய பொருட்களை பெற்றுக் கொண்டதைப்போல, கணக்கு காட்டி கள்ள மார்க்கெட்டில் ரேஷன் அரிசியை விற்றுவிடுகிறார்கள் என்கிறார்கள்.
விவசாயிகளிடமிருந்து அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் தொடங்கி, அவற்றை அரிசி ஆலைக்கு அனுப்பி வைத்து அரைத்து அரிசியாக மாற்றி உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு அனுப்பிவைப்பது முதல், அவை மீண்டும் பொதுமக்களுக்கான விநியோகத்திற்காக ரேஷன்கடைகளுக்கு அனுப்பி வைப்பது வரையில், பல அதிர்ச்சிகரமான மோசடிகள் அரங்கேறி வருவதை அங்குசம் புலனாய்வுக்குழுவின் கவனத்திற்கு வந்திருக்கிறது. அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்திவிட்டு, உரிய ஆதாரங்களுடன் அடுத்தடுத்த பதிவுகளில் விரிவான செய்தியாக வெளியாகும்.
செய்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருப்பதை போல, லோக்கல் ரவுடிகளின் தலையீடு தொடங்கி, CSCID பிரிவில் கருப்பு ஆடுகளாக செயல்படும் போலீசார் வரையிலான தலையீடு வரையில் அடுத்தடுத்து அம்பலமாக காத்திருக்கின்றன.
– அங்குசம் புலனாய்வுக்குழு