ஈகிள் சதீஷ் சிட் பண்ட் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி செய்த 3 பேர் தலைமறைவு !
ஈகிள் சதீஷ் சிட் பண்ட் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி செய்த 3 பேர் தலைமறைவு !
இப்படி ஒரு வாய்ப்பு இல்லையென்றால் பல நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு தீபாவளி என்பது கொண்டாடப்படும் பண்டிகையாக இல்லாமல் பணம் படைத்தவர்கள் கொண்டாடுவதை வேடிக்கை பார்க்கும் பண்டிகையாகவே இருந்திருக்கும்.
மாதாமாதம் ஐநூறோ, ஆயிரமோ கட்ட வேண்டும். 12ம் மாதம் முடிவில் கட்டிய பணத்துடன், கூடுதலாக பணமாகவோ, பரிசுப் பொருட்களாகவோ தருவர். இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்கி 12ம் மாத முடிவில் நிறைவுறும். இது பல கோடி புரளும் வியாபாரமாகும்.! திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை தீபாவளி பண்டு வசூலிக்கும் நபர்கள் நூற்றுக்கானோர் உண்டு.
ஒருவர் 100, 200, 500 என மாத சீட்டுதாரரை (தீபாவளி பண்டு கட்டுபவர்.!) வைத்திருப்பார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுதாரரை வைத்திருப்போரும் உண்டு. மகளிர் சுயஉதவிக் குழு கட்டமைப்பில் உள்ளவர்களில் ஒரு சிலர் 10, 20 பேரிடம் வசூலித்து தரும் பணியில் ஈடுபடுவர். அவருக்கு சீட்டு நடத்துபவர்கள் சிறப்பு போனஸ் தரும் நடைமுறையும் உண்டு.
ஒருவரிடம் ஆயிரம் என வசூலித்தால் ஆயிரம் பேரிடம் ஒரு மாதத்தில் வசூலிக்கும் தொகை மட்டுமே பத்து லட்சமாகும். இந்த பத்து லட்சம் பணத்தை அவர் பிறருக்கு வட்டிக்கு கொடுத்து முறையாக வசூலித்து லாபம் பார்த்து 12ம் மாத இறுதியில் தனது சீட்டுதாரர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தர வேண்டும். ஒருவருக்கு 12ம் மாத இறுதியில் பனிரெண்டாயிரம் மற்றும் கூடுதலாக இரண்டாயிரம் பணமாகவோ அல்லது ஸ்வீட் பாக்ஸ், வெடி பாக்ஸ், குடம், புடவை, தங்க காசு என தருவார்கள். ஒருவருக்கு 12ம் மாத இறுதியில் சுமார் பதினாலாயிரம் தருகிறார் என்றால் ஆயிரம் பேருக்கு ஒரு கோடியே நாற்பது லட்சமாகும். இப்போது புரிந்திருக்கும் இது பல கோடி புரளும் வியாபாரம் என்று சொன்னதன் காரணம்.
இந்த மாதிரியா ஏழை நடுத்தரமக்களின் வரமா இருந்த தீபாவளி பண்டு தற்போது குறுக்குவழியில் சம்மாதிக்கும் எண்ணம் கொண்ட வட்டி தொழில் செய்யும் பலர் இந்த இறங்கி இதை மோசடி தொழிலாக மாற்றிவிட்டது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மோசடிகு ம்பல் தமிழகம் முழுவதும் பரவி பெண்கள் முன் ஆயுதமாக வைத்து சீட்டு பிடிக்கிறேன் என்று வீட்டிற்கே சென்று மாதம் மாதம் வாங்குவதால் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் ஏமாற்றி வருகின்றனர்.
திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி கீழ ஆண்டார் தெரு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர்கள் சதீஷ், ஆயிஷா பர்வீனா, வினோத் ஆகிய 3 பேர் ஈகிள் சதீஷ் என்ற பெயரில் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர்.
இதில் நான் உள்பட பலர் ரூ. 70 லட்சம் வரை தீபாவளி சீட்டு பணம் கட்டினோம். இவர் திருச்சி மாநகர் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டோரிடம் வாரம் தோறும் 100 முதல் 1000 ரூபாய் வரை வசூல் செய்து தீபாவளி சீட்டு பிடித்துள்ளார். குறிப்பாக உறையூர் பகுதியில் ஒரு பெண் மட்டும் 300 பேருக்கு மேல் சீட்டுக்கு ஆட்களை பிடித்து உள்ளதாக சொல்கிறார்கள்.
ஆனால் சீட்டு முதிர்வாகியும், அதற்கான பணத்தை திரும்பதரவில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, பின்னர் தருவதாக கூறினர். பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லை. மேலும் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது தீபாவளி நெருங்கும் நிலையில் தாங்கள் ஏமாற்றப்படுவதாக நினைத்து பொதுமக்கள் அவரை உடனே கண்டுபிடித்து தங்களை தங்களின் பணத்தை மீட்டு தர வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி கோட்டை காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்த நிலையில் அவர்கள் ரூ.70 லட்சத்தை தராமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் கட்டிய தீபாவளி சீட்டு பணத்தை மீட்டு தர வேண்டும். என்றனர். புகார் கொடுத்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், ஆயிஷா பர்வீனா, வினோத் ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர்.
மோசடி வழக்கு குறித்து அங்குசம் இதழுக்காக ( angusam.com ) கோட்டை க்ரைம் எஸ்.ஐ. கோபால் என்பவரிடம் பேசினோம்… சதீஷ், ஆயிஷா பர்வீனா, வினோத் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளனர். இதனால் எங்களால் உடனே நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார். அவர்கள் அலுவலகம் வீடுகள் எல்லாம் சோதனை செய்ய நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.