பஞ்சலோக சிலைகளைத் திருடிய போலி சாமியார் கைது !
பஞ்சலோக சிலைகளைத் திருடிய போலி சாமியார் கைது
சேலம் தாரமங்கலத்தில் தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் கடந்த வாரத்தில் கொள்ளை போன எட்டு பழங்கால ஐம்பொன் சிலைகளை காவல்துறையினர் கண்டுபிடித்து அவற்றைத் திருடிய போலி சாமியாரைக் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் சாவடி தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் பழங்கால ஐம்பொன் சிலைகளான ஸ்ரீதேவி, பூதேவி,மூலவரான பெருமாள் மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்ளிட்ட எட்டு சிலைகள் கடந்த வாரத்தில் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதனை அடுத்து தாரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,சம்பவ இடத்திற்கு ஓமலூர் துணை கண்காணிப்பாளர் சங்கீதா,ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
தொடர்ந்து கடந்த 21 ம் தேதி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணை நடத்தினர். அப்போது குள்ளானூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(50) என்ற போலி சாமியார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது .
இதனையடுத்து அவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிலைகளை திருடியதை சக்திவேல் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து ஐம்பொன் சிலைகளையும் தாரமங்கலம் காவல்துறையினர் கைப்பற்றினார்கள்.
இதையடுத்து போலி சாமியார் சக்திவேலிடம் தாரமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.அதில், பெருமாள் கோவிலில் உள்ள மடத்தில் போலி சாமியார் சக்திவேல் பல நாட்களாக இரவில் படுத்து தூங்கி உள்ளார் என்பதும் அங்கு பஞ்சலோக சிலைகள் இருப்பதை தெரிந்துகொண்டு அவர் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்துள்ளது .
மேலும் சக்திவேலுவுக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டி பூஜை செய்ய இந்த பஞ்சலோக சிலைகளை திருடியதாக விசாரணையில் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
-சோழன்தேவ்