பிரபல செல்போன் நிறுவன பிளான் மோசடியும் ! அபராதம் கட்டிய கதையும் ! வீடியோ
எங்களது லீகல் டீம் உங்களிடம் பேசுவார்கள் என்பார்கள். அவ்வளவுதான், எனது புகார் முடித்து வைக்கப்பட்டதாக எனக்கு மெசேஜ் வரும். லீகல் டீமிலிருந்து யாரும்
ஏர்டெல் நிறுவனத்தை அலரவிட்ட வாடிக்கையாளர் அன்புத்தேன் !
ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டிற்கு எதிராக வழக்கு தொடர்த்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கரூரைச் சேர்ந்த அன்புத்தேன்.
கரூரில் பிரண்ட்லைன் டெக்னாலஜி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அன்புத்தேன் அவர்களிடம் பேசினோம். “தனிப்பட்ட பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வந்த எண்ணையே, நிறுவனத் தொடர்புக்காகவும் பயன்படுத்தி வந்தேன். மிஞ்சி போனால், மாசம் 500-க்குள்தான் பில் வரும். அப்பொழுதுதான், காம்போ பேக் ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள் பல்வேறு பலன்கள் அதில் அடங்கியிருக்கிறது என்றார்கள். லாக்டவுன் சமயம் வேறு. இணைய பயன்பாட்டின் தேவையும் இருந்தது. அதனால், சரி என்று பிளான் மாறினேன். கூடவே, அலுவலக பயன்பாட்டுக்கென்று நான்கு பேன்சி எண்களையும் ஆஃபரில் தருவதாக சொன்னார்கள்.
அவர்கள் சொன்னது, 999 பிளான். ஆனால், முதல் மாத பில் தொகையே 5000-க்கு மேல் வந்தது. நேரில் சென்று முறையிட்டேன். தவறுதலாக ஐ.எஸ்.டி. ஆக்டிவேட் ஆகியிருக்கிறது. அதனை ஆஃப் செய்துவிடுகிறோம். ஆனால், நீங்கள் பில் தொகை கட்டித்தான் ஆக வேண்டும் என்றார்கள். விரிவான அறிக்கை கேட்டேன். இந்த எண்களில் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேசியிருக்கிறீர்கள் என்று சில எண்களை காட்டினார்கள்.
வீடியோ லிங்
அந்தக் குறிப்பிட்ட எண்ணை இணையப் பயன்பாட்டுக்கான மோடம் கருவியில் சொருகித்தான் பயன்படுத்தியிருக்கிறேன். அப்படியிருக்கையில் நான் எப்படி வெளிநாட்டு கால் பேசியிருக்க முடியும் என்றும் வாதிட்டேன். பேசிய வாய்ஸ் ரெக்கார்டு கொடுங்கள் என்றும் கேட்டேன். எதற்கும் அவர்கள் பதிலளிப்பதாக இல்லை. பணத்தை கட்டிவிட்டு பேசு என்றே நின்றார்கள். நானும், முழுத்தொகையையும் கட்டிவிட்டேன். திடீரென்று, அவர்கள் வழங்கிய 4 எண்களில் ஒரு எண்ணை செயலிழக்க செய்துவிட்டார்கள்.
காரணம் கேட்டதற்கு, அது பேன்சி நம்பர் தவறுதலாக உங்களுக்கு வழங்கிவிட்டார்கள். அதே எண் வேண்டுமெனில், மேலும் 6000 கட்டுங்கள் என்றார்கள். என்ன இது வழிப்பறி மாதிரி இருக்கிறதென்று வாதிட்டேன். அவர்கள் செயலிழக்க செய்த அந்த எண் தான் எனது நிறுவனத் தொடர்புக்கான எண்ணாக அனைத்து இடங்களிலும் பதிவு செய்திருக்கிறேன். அந்த எண் கண்டிப்பாக பயன்பாட்டுக்கு வேண்டுமென்றேன். முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.
அதன்பிறகே, வழக்கு தொடுக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. எனது தந்தை தமிழ் ராஜேந்திரன் வழக்குரைஞராகத்தான் இருக்கிறார். அவர் உதவியோடு, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தேன். தற்போது செயலிழக்கச் செய்த அந்த எண்ணையும், இழப்பீடாக 33,637 ரூபாயையும் வழங்க வேண்டுமென்று கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் கூடுதல் நீதிபதி ரத்தினசாமி ஆகியோர் தீர்ப்பளித்திருக்கின்றனர்.” என்றார், அவர்.
வீடியோ லிங்
மேலும், “தொடக்கம் முதலாகவே, தொடர்ந்து அலட்சியத்தோடும் திமிராகவும்தான் நடந்து கொண்டார்கள். நானும், டிராய், தொலைதொடர்பு ஆணையம் என எல்லாவற்றிலும் புகார் கொடுத்து பார்த்தேன். புகார் பதிவாகும், அவர்களும் ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்புகொள்வார்கள். புகார் கொடுத்திருக்கிறீர்களா? என்பார்கள். நான் ஆம் என்பேன். சரி, எங்களது லீகல் டீம் உங்களிடம் பேசுவார்கள் என்பார்கள். அவ்வளவுதான், எனது புகார் முடித்து வைக்கப்பட்டதாக எனக்கு மெசேஜ் வரும். லீகல் டீமிலிருந்து யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள். அவர்கள் பேசிய எண்ணிற்கு தொடர்புகொண்டால் கால் போகாது. ஐ.வி.ஆர்.எஸ். தான் பேசும். இவ்வாறு ஐ.வி.ஆர்.எஸ். பின்னால் ஒளிந்துகொண்டுதான் இந்த வழக்கை அவர்கள் எதிர்கொண்டார்கள்.” என்கிறார் காட்டமாக.
”அதோடு மட்டுமில்லை. ஷோரூமின் இடத்தை மாற்றிவிட்டு, நாங்கள் அவர்கள் இல்லை என்றார்கள். வழக்கு தொடர்பான அழைப்பாணைகளே வந்து சேரவில்லை என்றார்கள். கையெழுத்துப்போட்டு வாங்கியிருக்கிறீர்களே, என நீதிபதி கேட்டபிறகே, ஆமாம், தவறுதலாக கவனத்திற்கு வராமல் போய்விட்டதென்றார்கள். கடைசியாக, நீதிமன்றத் தீர்ப்பு வந்தபிறகும்கூட, அலைக்கழித்தார்கள். தீர்ப்பு வந்து ஒன்றரை மாசம் ஆகிவிட்டது.
நீதிமன்றத்தின் கமிஷனர் நியமித்து அலுவலகத்தின் உடமைகளை கைப்பற்றுவதற்கான ஆணை வெளியிடுவதற்காக நீதிபதிகள் ஆயத்தமானபொழுதுதான், இதற்கு மேலும் இழுத்தால் அசிங்கப்பட்டுவிடுவோம் என்றெண்ணி பேச்சுவார்த்தைக்கே வந்தார்கள்.” என்கிறார்.
மேலும், “வழக்கு ரெண்டு வருசத்துக்கு மேல நடந்திட்டிருக்கு. இந்த முப்பத்து மூனாயிரம் பெரிய விசயமில்லை. பணம் கிடைச்சிருச்சினு நான் சந்தோசப்படல. என் முறையீட்டுக்கான நீதி கிடைச்சிருச்சினுதான் நிம்மதியாயிருக்கு. அவங்களும் இனி இதுமாதிரி மத்தவங்ககிட்ட நடந்துக்ககூடாதுனு பயப்படனும். இதப்பார்த்துட்டு, நாலு பேரு தைரியமா வழக்கு தொடுக்கவும் முன்வரனும். அவ்ளோதான்.” என்கிறார், அன்புத்தேன்.
– இளங்கதிர்.
செய்திக்கான வீடியோ லிங்