ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டிட அனுமதி பெற ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது !
ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டிட அனுமதி பெற ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது !
விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் இலஞ்சப் புகார் தொடர்பாக, மூன்று வழக்குகளை பதிவு செய்திருப்பதோடு, இருவரை கைது செய்து சாட்டையை சுழற்றியிருக்கிறது, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கம்மாள்புரத்தை சேர்ந்த வாசுதேவன் ( 47 ) இவர் தன்னுடைய நிலத்தில் வீடு கட்ட கட்டிட வரைபட அனுமதி பெற ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
அவருடைய விண்ணப்பத்தை அங்கு பணியில் இருந்த நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி, வாசுதேவனிடம் கட்டிட வரைபட அனுமதி வேண்டுமென்றால் லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார்.
கட்டிட அனுமதிக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும், சட்டப்படியான அனுமதியை வழங்குவதற்கு ஏன் லஞ்சம் கேட்கிறார்கள் என கருதிய வாசுதேவன், இலஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத நிலையில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றார்.
பின்னர் வாசுதேவனிடம் லஞ்சப் பணத்தை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்ற அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, இன்று (ஏப்-26) காலை வாசுதேவன், ஜோதிமணியிடம் தொடர்பு கொண்டு, ”மேடம் நீங்க கேட்ட பணத்தை நான் ரெடி பண்ணிட்டேன் எங்க வந்து கொடுக்க வேண்டும்” என்று கேட்டுள்ளார். மறுபுறம் பேசிய ஜோதிமணி என்னுடைய அலுவலகத்தில் நேராகவே வந்து கொடுங்க வாங்கிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பின்னர் அலுவலகத்தின் உள்ளே சென்ற வாசுதேவன் ரசாயனம் தடவப்பட்ட லஞ்ச பணத்தை ஜோதி மணியிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஜோதி மணியை கையும் களவுமாக பிடித்து பணத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
பாதுகாப்பான அரசுப்பணி, மனநிறைவான சம்பளம் பெற்றுவந்த போதிலும், இலஞ்சப் பணத்திற்கு ஆசைப்பட்டு தற்போது வழக்கி சிக்கித் தவிக்கிறார், நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி.
மாரீஸ்வரன்.
லஞ்சம் வாங்குவது அடுதாதவனை கொள்ளையடிப்பதற்கு சமம்.திருடனுக்கு தண்டனை தர வேண்டும்.மக்கள் லஞ்சத்தை மறக்க வேண்டும்.