புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியையும் தானம் செய்த திருச்சி கல்லூரி மாணவி !
புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியையும் தானம் செய்யலாம் !
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுநோயாளிகளுக்காக தலை முடியையும் தானம் செய்யலாம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி தென்னூர் விஸ்வநாதபுரத்தில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் வரவேற்றார்.திருச்சிராப்பள்ளி ராயல் லயன் சங்கம் சாசன தலைவர் முஹம்மது ஷபி தலைமை வகித்தார். பொருளாளர் ரங்கராஜன் நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் இயக்குனர்கள் குமார் பாஸ்கரன் அடக்குநர் முகமது உமர் கத்தாப் தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன், செயல்திட்ட தலைவர் கணேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியையும் தானம் செய்யலாம் தலைப்பில் கீர்த்தனா பேசுகையில், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையின்போது தலைமுடியை இழப்பவர்களுக்கு உதவுவதற்காக எனது கூந்தலை தானமாக வழங்கியுள்ளேன்.
புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சையின்போது தலைமுடி உதிர்வது தவிர்க்க முடியாத பிரச்சினை. இதனால் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக எனது கூந்தலை தானமாக வழங்கியுள்ளேன்.
என்னை போல பலரும் புற்றுநோயாளிகளுக்காக கூந்தலை தானமாக வழங்க முடியும்.கூந்தலை தானமாக வழங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. தலைமுடியை சரியாக கத்தரித்து வழங்காவிட்டால் தானமாக வழங்கும் முடி பயனற்று போய்விடும். தானம் செய்யக்கூடிய முடி குறைந்தபட்சம் 8 முதல் 14 அங்குலம் வரை நீளம் இருக்க வேண்டும். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடியை விக் வடிவில் தயாரித்து வழங்கும் தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. அவர்கள் முடியின் நீளம், அடர்த்தி போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான கூந்தலை மட்டுமே தானமாக பெறுகின்றனர்.
சில தொண்டு நிறுவனங்கள் வண்ணங்கள் பூசப்பட்ட முடிகளை நிராகரித்து விடுகின்றன. ரசாயன சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும் அத்தகைய முடிகளை பெற்றுக் கொள்வதில்லை. தானமாக கொடுக்கப்போகும் கூந்தலை இயற்கையான முறையில் பராமரித்து உலர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். கூந்தலை எந்த பகுதியில் இருந்து வெட்ட போகிறீர்களோ அங்கு இறுக்கமாக ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். கூந்தலின் நுனிப்பகுதி வரை முழுவதுமாக வெட்டிவிடக்கூடாது. இத்தனை விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே நாம் செய்ய நினைக்கும் சேவை உரியவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நிறைவாக பள்ளி ஆசிரியர் உமா நன்றி கூறினார்.
