காந்திய வழி பள்ளியில் பிஞ்சு குழந்தைகள் மீது பாலியல் வக்கிரம்!

தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவுமிருந்து அந்த பாலகர்களை அரவணைத்து கல்விப்பணி வழங்க வேண்டிய உன்னத மான இடத்தில் இருக்கும் குடில் நிர்வாகிகளே கூட்டு சேர்ந்து கொண்டு பிஞ்சு பிள்ளைகளை தங்களது வக்கிரம் பிடித்த பாலியல் வேட்கைக்கு இரையாக்கியிருப்பது நம் நெஞ்சங்களை உலுக்கியெடுக்கிறது.

0

காந்திய வழி பள்ளியில் பிஞ்சு குழந்தைகள் மீது பாலியல் வக்கிரம்!

பள்ளிக்கூட பிள்ளைகளை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் ஒன்றும் மேற்பட்டவர்கள் இந்த வக்கிரத்தில் ஈடுபட்டு இளம் பிஞ்சுகளை சிதைத்திருக்கிறார்கள். வக்கிரத்தை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அதைக்காட்டியே மீண்டும் மீண்டும் பணிய வைத்திருக்கிறார்கள்” என்ற செய்தி ஒன்று சமீபத்தில் வாட்சப் வழியே கசிந்து அதிர்ச்சிக் குள்ளாக்கியது.குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது, சாதாரண பள்ளியோ, நிறுவனமோ அல்ல; பாரம்பரிய பெருமைமிக்க, கல்விச் சேவையில் பொதுசேவையில் 75 ஆண்டுகாலம் இயங்கிவரும், திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடில். முற்றும் துறந்தவர் என்ற போர்வையில் இருந்த இராமகிருஷ்ணா குடிலின் தலைமை நிர்வாகி கருப்பையா என்பவரின் தலைமையில்தான் இந்த வக்கிரமும் நிகழ்ந்திருக்கிறது.

2 dhanalakshmi joseph
இராமகிருஷ்ணா குடிலின் தலைமை நிர்வாகி கருப்பையா
இராமகிருஷ்ணா குடிலின் தலைமை நிர்வாகி கருப்பையா

இராமகிருஷ்ணா குடில் தவத்திரு பிரம்மச்சாரி ராமசாமி அடிகளார் என்பவரால் 1944ல் தொடங்கப்பட்டது. தாய், தந்தை இருவரையும் இழந்து ஆதரவற்ற பிள்ளை களுக்கு அடைக்கலம் தந்து அவர்களுக்கு மூன்று வேளை உணவும் தங்க இடமும் கொடுத்து கூடவே பத்தாம் வகுப்பு வரையில் அவர்களுக்கு கல்வியையும் போதிக்கும் சேவை மனப்பான்மையுடன் இயங்கும் நிறுவனம்தான் இராமகிருஷ்ணா குடில். கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து தாய்- தந்தை இருவரையும் இழந்தவர்கள் என்ற விதியில் திருத்தம் செய்து, தாய் அல்லது தந்தை இருவரில் யாரேனும் ஒருவரை இழந்திருந்தாலும் அந்தப்பிள்ளைகளும் குடிலில் சேர்ந்துகொள்ளலாம் என மாற்றியமைத் திருக்கிறார்கள். இதன்படி, தற்போது 200 பேர் வரை இராமகிருஷ்ணா குடிலில் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள்.

- Advertisement -

- Advertisement -

சுயமாக தன்னை பராமரித்துக்கொள்வது, சுற்றத்தை பராமரிப்பது, தோட்டத்தை பராமரிப் பது என ஒரு காந்திய வழியில், வாழ்வியல் நெறி முறைகளை கற்றுத்தரும் நிறுவனமாக இது அமைந்திருக்கிறது. இந்த குடிலில் தங்கிப்பயிலும் 200 மாணவர்களுமே, அதிகபட்சம் 15 வயதிற்கும் கீழானவர்கள். தாய் & தந்தை இருவரையும் அல்லது இருவருள் ஏதேனும் ஒருவரை இழந்து ஆதரவின்றி கைவிடப்பட்டவர்கள். சொந்தம் பந்தம் என்ற எந்தஒரு உறவும் அற்று குடில்தான் எல்லாமும் என்று ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள்.

தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவுமிருந்து அந்த பாலகர்களை அரவணைத்து கல்விப்பணி வழங்க வேண்டிய உன்னத மான இடத்தில் இருக்கும் குடில் நிர்வாகிகளே கூட்டு சேர்ந்து கொண்டு பிஞ்சு பிள்ளைகளை தங்களது வக்கிரம் பிடித்த பாலியல் வேட்கைக்கு இரையாக்கியிருப்பது நம் நெஞ்சங்களை உலுக்கியெடுக்கிறது. சொந்தம் பந்தம் எதுவுமற்றவர்கள்; வெளி உலகு தொடர்பு அற்றவர்கள்; மிரட்டி பணிய வைத்துவிடவும் முடியும்; எதிர்ப்புகள் எதுவுமின்றி எளிதில் அணுகவும் முடியும் என்ற இந்த பிஞ்சுகளின் அவலத்தை சாதமாக்கிக் கொண்டு, அதிலும் குறிப்பாக சிறுவர்கள் என்பதைவிட, பாதிக்கப்பட்டாலும் அவனுக்கு ஆதரவாக சொந்தம் என்று சொல்லிக்கொண்டு எவனும் வந்துவிட மாட்டான் என்ற துணிச்சலில் இந்த வக்கிரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்பிஞ்சுகளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிதைத்திருக்கிறார்கள்.

4 bismi svs

பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் என பலரும் இந்த குடிலுக்கு வருகை புரிந்திருக்கிறார்கள். இராமகிருஷ்ணா குடிலின் கல்வி சேவைக்கு தங்களால் ஆன பங்களிப்புகளை செய்து கொடுத்திருக்கிறார்கள். இத்தகைய பழம் பெருமையை காட்டித்தான், பல ஆண்டுகளாகவே கேள்வி கேட்பாறின்றி தொடர்ந்து வரும் பாலியல் வக்கிரங்கள் மூடி மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போதும், உள்ளே நடந்த சங்கதிகள் வெளியில் கசிந்துவிடாமல் இருக்க பல்வேறு வகைகளில் மெனக்கெட்டு வருகிறார்கள். வெளி உலக தொடர்புகள் இல்லாத நிலையில், தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பாலியல் வன்முறைகளை முறையிட வழி தெரியாமல் தவித்துள்ளனர். அரசல் புரசலாக விசயம் வெளியான நிலையில், முதலில், உள்ளூர் போலீசாரை வைத்து பாரம்பரிய நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடும் என்று இரக்கப்படும் விதமாக பேசி கமுக்கமாக முடிக்க நினைத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்கள் எப்படியோ மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

அதன்பின்னரே, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் களத்தில் இறங்கிய மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நித்யா விசாரணை மேற்கொண்டிருக்கிறார். அவரது விசாரணையில் மாணவர்களின் குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் வருண்குமாரும் கண்டிப்பு காட்ட, டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமை யிலான போலீசார் நடவடிக்கையை துரிதப் படுத்தியுள்ளனர். தற்போது, மாணவர்களின் குற்றச்சாட்டு மற்றும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நித்யா ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில், போக்சோ வழக்கின் கீழ் முதல் தகவல் அறிக்கை 7/2023 பதிவு செய்து, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடிலின் தலைமை நிர்வாகி (முற்றும் துறந்த?!!) சந்நியாசி கருப்பையா, ஊழியர்கள் சிவகிரி, பார்த்திபன், ஏசுராஜ் மற்றும் தனசேகர் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.

மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வக்கிரப் புத்திக்காரர்களின் சித்திரவதைக்குள்ளான 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்து கல்வி பயில்வதற்காக குடிலுக்கு சென்று வருகிறார்கள். தற்போது, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளான நித்யா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர்தான் குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்து அவர்களை தேற்றும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். வழக்கின் தற்போதைய நிலை குறித்தும், முதல் தகவல் அறிக்கையை காண இயலாதவாறு முடக்கப்பட்டிருப்பது குறித்தும் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா அவர்களிடம் பேசினோம்.

“குழந்தைகள் தொடர்பான வழக்கு, அதுவும் போக்சோ சட்டத்தின் கீழான வழக்கு என்பதால் எஃப்.ஐ.ஆர்.ஐ நீங்கள் இணையப்பக்கத்தில் பார்க்க முடியாது. அதேசமயம், எந்தவித அழுத்தங்களுக்கும் இடமில்லாத வகையில், முறையான விசார ணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குற்றச் சாட்டுக்கு ஆளானவர்களை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறோம்.” என்றார். ;

வெளியில் சொன்னால் அசிங்கம் என்பதற்காகவோ, பாரம்பரிய நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடும் என்பதற்காகவோ கமுக்கமாக முடிக்க நினைக்காமல், திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடில் மட்டுமல்லாது, இவைபோன்று இயங்கும் குறிப்பாக ஆதரவற்றவர்களுக்காக இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அங்கே தங்கிப்பயிலும் மாணவர்கள் சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும் சூழலை ஏற்படுத்தி விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்; இதுபோன்ற வக்கிரங்கள் இனியும் தொடராதிருக்க இவை போன்ற கல்வி நிறுவனங்களின் மீது தொடர்ச்சியான அரசின் கண்காணிப்பை உத்திரவாதப்படுத்தும் வகையிலான செயல்திட்டங்களை வகுத்து நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

வீடியோ லிங்

–  ஆதிரன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.