விடுதலைக்கு பிறகும் 8 ஆண்டுகளாக தவிக்கும் ”ஹரே கிருஷ்ணா” – ஜெயில் பரிதாபங்கள் தொடர் – 3

0

விடுதலைக்கு பிறகும் சிறையில் 8 ஆண்டுகள் சிக்கி தவிக்கும் ”ஹரே கிருஷ்ணா” – சிறை பரிதாபங்கள் தொடர் – 3  தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு மாமியார் வீட்டுக்கு வந்து செல்வதைப்போல, சிறை வாழ்க்கையே ஜாலியாக மாற்றிக்கொண்ட கைதிகள் ஒரு ரகம். சந்தர்ப்பவசத்தால் தவறிழைத்து சிறை வாழ்க்கைக்குள் சிக்கி, விடுதலையாகி எப்போது வீடு திரும்புவோம் என்ற ஏக்கத்திலேயே நாட்களை நகர்த்தும் கைதிகளே பெரும்பான்மை.

வெறுமனே ஏக்கம் என்பதைவிட, அதனினும் பல படி கூடுதலான அழுத்தம் கொண்ட தமிழ்ச் சொல் ஒன்றால் விளிக்கப்பட வேண்டிய சிறைக்குள் வாழும் ஒரு ஆத்மா, “ஹரே கிருஷ்ணா”. வயது நாற்பத்தியெட்டு. சிறைக்குள் காலெடுத்து வைத்தபோது, நாற்பது. அப்போதே திருமணம் ஆகாதவர். இனி எப்போதும் ஆகவும் போவதில்லை என்பதால் மட்டுமல்ல; மருத்துவர் ஒருவரின் உளவியல் ஆலோசனையின் பால் ஈர்க்கப்பட்டு, கிருஷ்ணனின் சீடராகவே மாறிப்போனவர், ஹரே கிருஷ்ணா.

https://businesstrichy.com/the-royal-mahal/

திருச்சி சிறை
திருச்சி சிறை

சிறைக்குள் அவர் தங்கிராத இடம் என்று எதுவுமில்லை. அவர் கால்தடம் படாத சிறை வளாகம் எதுவுமில்லை. அவர் எங்கு இருந்தாலும், அவரைச் சுற்றி கிருஷ்ணனின் பெருமை கூறும் நூல்கள் கண்டிப்பாக இருக்கும். கிருஷ்ணனின் சீடராகவே அவரைப் பார்த்து பழகிவிட்டார்கள் சக சிறைவாசிகள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ஹரே கிருஷ்ணா தங்கியிருக்கும் அறையை புனிதமானதாக பாவிக்கிறார்கள். காலணிகளை கழட்டிவிட்டுதான் அவர் அருகிலேயே செல்கிறார்கள். அவரும் ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் பிரார்த்தனை செய்யாமல், இரவை எதிர்கொள்வதில்லை. அவரிடம் சாப்பிடுவதற்கு டீ, காபி, தண்ணீர், சாப்பாடு என எதைக் கொடுத்தாலும் கிருஷ்ணரை வணங்காமல் கையில் வாங்குவதில்லை. அதுவரை மாமிசம் விரும்பி சாப்பிட்டுவந்தவர், சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறியும் விட்டார்.

சிறைக்குள் சிறைவாசிகளால் அன்போடு ஹரே கிருஷ்ணா என்று அவர் அழைக்கப்படுவதற்கு முன்பாக, சதானந்தமாக அறியப்பட்டவர். பி.காம் முடித்து பி.எல். பயின்று வந்தநிலையில் இறுதித் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் எதிர்பாராதவிதமாக சிறைக்குள் வந்து சிக்கிக்கொண்டவர்.

சிறையில் சிக்கி தவிக்கும் ஹரே கிருஷ்ணா
சிறையில் சிக்கி தவிக்கும் ஹரே கிருஷ்ணா

சிறைக்குள் சாந்தமே உருவமாக பவனிவரும் ஹரே கிருஷ்ணா, அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் சதானந்தமாக இருந்த சமயத்தில் அதீத மன அழுத்தத்துக்கு ஆட்பட்டவர். இதற்காக, பத்தாம் வகுப்பு பயிலத் தொடங்கியது முதல் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வந்தவர். இரவுப் பகல் பாராமல் அசராமல் படிக்கக்கூடிய படிப்பாளியும்கூட. உடன்பிறந்த ஒரு அண்ணன், மூன்று அக்கா, ஒரு தங்கை தாய், தந்தையுடன் மகிழ்வோடு வாழ்ந்து வந்தவர்.

அவர் பார்த்த மருத்துவத்துக்கும் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளுக்கும் அதீத மன அழுத்தம் கட்டுப்படவில்லை. அவ்வப்போது, ஆக்ரோஷமான கோபங்களாக வெளிப்படும். இதன் காரணமாகவே, உரிய காலத்தில் திருமணம் முடிக்க முடியாமல் சதானந்தத்தின் குடும்பத்தினர் பெரும்பாடுபட்டனர்.

எப்போதும்போல, அதீத மன அழுத்தம் சதானந்தத்தை ஆட்டுவித்த தருணம் அது. தனது திருமணம் தொடர்பான பேச்சு அடிபடுகிறது. ஆளுக்கொரு கருத்தை முன்வைக்கிறார்கள். அதீத மன அழுத்தம்தான் பெருந்தடையாக இருப்பதாக சொல்லி கவலை கொள்கிறார்கள். கொந்தளிப்பான மனநிலைக்கு ஆட்பட்டிருந்த சதானந்தத்தால், இந்த யதார்த்த சூழலை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவமும் பொறுமையும் கைகூடவில்லை.

பலமுறை வெட்கத்தைவிட்டு, தனக்கு காலா காலத்தில் கல்யாணம் செய்து வையுங்கள் என்று கேட்டும் செய்து முடிக்காமல் காரணங்களை அடுக்குகிறார்களே, தன்னையே குறைகூறுகிறார்களே என்ற கோபம் உச்சிக்கு ஏற, சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த அசம்பாவிதம் அரங்கேறிவிடுகிறது.

Jail_Tricy
Jail_Tricy

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரத்தம் சொட்ட சொட்ட கையில் இருக்கும் அறுவாள்மனையையும், எத்தனை வெட்டுக்கள் என்று எண்ண முடியாத வெட்டுக்காயங்களுடன் உயிர் பிரிந்து சரிந்துக் கிடக்கும் சடலமாக தன் தாயார் கிடத்தப்பட்டிருப்பதையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கிறார், சதானந்தம்.

ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட தாயாரின் உடல் சுடுகாட்டுக்கும்; சதானந்தம் என்ற சரீரம் சிறை வளாகத்திற்கும் வந்து சேர்ந்தது. அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் ஆறே மாதத்தில் வழக்கின் விசாரணையும் முடிந்துபோனது. பத்தாண்டுகளுக்கும் மேலாக, அதீத மன அழுத்தத்த நோய்க்கு ஆட்பட்டிருந்த நிலையில், தன்நிலை அறியாது, மனம் பிறழ்ந்த தருணத்தில்தான் அந்த துர் சம்பவம் நிகழ்ந்தேறியிருக்கிறது என்பதை நீதிமன்றம் உணர்ந்து கொண்டது. சதானந்தத்திற்கு தண்டனை எதுவும் விதிக்காமல், அவரை வழக்கிலிருந்து விடுவிக்கிறது.

சதானந்தம் வழக்கிலிருந்து விடுபட்டாலும், சிறைக்குள் இருந்து விடுபட வழிவகை தெரியாமல் சிக்கித்தவிக்கிறார். ஒரு நாள் இருநாள் அல்ல; சரியாக எட்டு ஆண்டுகள். விசாரணைக் கைதிகள், சாதாரண தண்டனைக் கைதிகள், கொடுங்குற்றங்களுக்கான தண்டனை பெற்ற கைதிகள், ஆயுள் கைதிகள் என சிறையில் அடைபட்டிருக்கும் கைதிகளில் பல வகைப்பாடுகள் இருப்பதை அறிந்திருக்கிறோம்.

ஆனால், விசாரணை முடிந்து, வழக்கு முடிந்து, தண்டனை எதுவும் விதிக்கப்படாமல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் எட்டு வருடங்களாக சிறைக்குள்ளாகவே அடைபட்டுக்கிடக்கும் சதானந்தத்தின் நிலை எவ்வளவு கொடூரமானது? ஒரு கணம் நினைத்தாலே, உடல்கூசுகிறது.

சதானந்தத்தின் இரத்த உறவோ, நெருங்கிய நண்பர்களோ யாரேனும் ஒருவர் உத்திரவாதம் அளித்து உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நீதிமன்றத்தின் ஒற்றை நிபந்தனைதான், இந்த எட்டாண்டு தாமதத்திற்கான காரணம்.
மனம் பிறழ்ந்து பெற்றத் தாயையே கொன்று போட்டவனை, எவர் ஒருவர் சொந்தப் பொறுப்பில் அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவிப்பார்? ஒருமுறை உடன்பிறந்த சகோதரர் முன்வந்தார். அதற்கான சட்ட வழிமுறைகளுக்காக சில மாதங்கள் ஆன நிலையில், அவரும் இப்போது வேண்டாமென்று பின்வாங்கினார். அதற்குப்பிறகு, இதுவரை எவரும் முன்வரவில்லை.

ஒருவேளை ரத்த உறவுகளோ, நண்பர்களோ யாரும் முன்வராத பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் தன் சொந்தப் பொறுப்பில் அவரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவாய் தீர்ப்புரைத்திருந்தது. சிறைவளாகத்தைத் தவிர, சதானந்தத்திற்கு பாதுகாப்பான இடம் வெறெங்கும் இல்லை என்ற நிலையில், கூண்டில் சிக்கிய பட்டாம்பூச்சியாய் பரிதவித்துக் கிடக்கிறார் சதானந்தம்.

தண்டனை கைதிகளுக்குத்தான் சிறைக்குள் மறுவாழ்வுக்கான வாய்ப்புகளும் பயிற்சிகளும் வழங்கப்படும். சதானந்தமோ, சிறைக்குள் இருந்தாலும் சிறைவாசி கிடையாதல்லவா? சிறை”விதி”களின்படி, அவருக்கான அந்த வாய்ப்பும் கிட்டாமல் போனது. ஒருவேளை, சிறையைவிட்டு வெளியே சென்றாலும் என்ன வேலை செய்து பிழைப்பை ஓட்டுவது? என்ற கவலையே சதானந்தத்தை பெருமளவுக்கு ஆட்கொண்டிருக்கும்.

ஆனாலும், அவர் தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்துவிட்டார். இஸ்கான் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏதேனும் ஒரு ஆஸ்ரமத்தில் கிருஷ்ணனின் சீடனாக சேவை செய்வதே தன் வாழ்நாள் இலட்சியம் என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கிறார், சதானந்தம் என்கிற ஹரே கிருஷ்ணா.

85 வயதைக் கடந்து தள்ளாத வயதிலும் தான் பெற்று ஆளாக்கிய மகனிடம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொலைபேசியில் பேசிவருகிறார் தந்தை பெருமாள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒலிக்கும் தந்தையின் குரலும் அவர் அனுப்பி வைக்கும் ஐநூறு ரூபாய் தாளும்தான் சதானந்தத்தின் இப்போதைய பிடிமானம். அந்த ஒற்றை ஆளைத்தவிர வேறு எந்த உறவும் எட்டிக்கூடப் பார்ப்பதுமில்லை.

மனம் பிறழ்ந்தவராக அந்த துயரத்தை நிகழ்த்திய சதானந்தம் … மனம் பிறழ்ந்தவர் என்பதற்காகவே அவரை ஏற்க மறுக்கும் உறவுகள் … ஆனாலும், இவை எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல், “பொய் பேசக்கூடாது; யாருக்கும் மனதளவிலும் தீங்கிழைக்கக்கூடாது; ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்; கோபம் தவிர்த்து அனைவரிடத்தும் அன்போடு அணுகவேண்டும்” என்று சிறைவாசிகளை நல்வழிபடுத்தும் கிருஷ்ணனின் சீடராக பவனி வருகிறார் சதானந்தம்.

அதுமட்டுமா, மனம் பிறழ்ந்த அதீத மன அழுத்தத்துக்கு ஆளான நோயாளிகளான சிறைவாசிகளை மூன்று வேளையும் கண்காணித்து, சிறையிலுள்ள மனநல மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை சிறைவாசிகளிடம் கொண்டு சேர்ப்பிக்கும் பணியை செய்து வருவதும் ஹரே கிருஷ்ணாதான். விசித்திரமாக இருக்கிறதல்லவா? அதுதான் சிறை !

சிறை விசித்திரங்கள் விரியும் …

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.