2024 மார்ச் 02 : திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியா போறீங்களா? போக்குவரத்து வழித்தட மாற்றம் பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

1

மார்ச் 02 : திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியா போறீங்களா? போக்குவரத்து வழித்தட மாற்றம் பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க ! “தேசம் காப்போம் – தமிழை வளர்ப்போம்” என்ற தலைப்பில் மார்ச்-02 அன்று திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடு நடைபெறவிருப்பதை முன்னிட்டு, மாநாடு நடைபெறும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்களை செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள், திருச்சி மாவட்ட போலீசார்.
மார்ச்-02 அன்று காலை 7.00 முதல் அமல்படுத்தப்படவிருக்கும் போக்குவரத்து வழித்தட மாற்றம் தொடர்பாக, திருச்சி மாவட்ட போலீசார் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

IJK News
IJK News

A. அனைத்து கனரக வாகனங்கள்
> சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாக செல்லவேண்டும்.
> சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி வழியாக செல்லவேண்டும்.
மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், விராலிமலை வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
> சென்னையிலிருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் சென்று வரவேண்டும்.
> கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.
> சேலத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மேய்க்கல்நாயக்கன்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.
> சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைாபாஸ் ரோடு வழியாக குன்னம், அரியலூர், கீழப்பழூர், புள்ளம்பாடி, கொள்ளிடம் ”Y” ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி ரிங்க் ரோடு, கும்பக்குடி ஜங்சன், கீரனூர் வழியாக சென்று வரவேண்டும்.
தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, வளநாடு கைகாட்டி, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும்.
> தஞ்சாவூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, மணப்பாறை ரோடு, மணப்பாறை அரசுமருத்துவமனை, வையம்பட்டி வழியாக சென்று வரவேண்டும்.

B. அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள்
> சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளூர், கொள்ளிடம் ‘”Y” ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும்.
> சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளூர், கொள்ளிடம் ”Y” ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும்.
> மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் ”Y” ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
> திண்டுக்கலிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் ”Y” ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும். “ என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

4 bismi svs

குக்கிராமங்களை முற்றுகையிட்ட வாகனங்கள் !
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடும் இதே சிறுகனூரில்தான் நடைபெற்றது. அப்போதும், இதேபோன்ற வழித்தட மாற்றத்தைத்தான் அமல்படுத்தியிருந்தார்கள். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு முனையில் டோல்கேட் பகுதியிலும் மறு முனையில் பாடாலூர் பகுதியிலும் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இவ்விரண்டு முனைகளுக்கும் இடையிலான பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மட்டும், நெடுங்கூர், பி.கே.அகரம், சிறுகனூர், கொணலை, இருங்களூர், சமயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வீடு திரும்புவதில் பெரும் சிக்கலை சந்திக்க நேர்ந்தது. இவற்றையெல்லாம்விட, நெடுஞ்சாலை பகுதியிலிருந்து பிரிந்து செல்லும் உள் கிராமங்களையும் சேர்த்து கணக்கிட்டால் இந்த அவஸ்தையின் எல்லை சற்று விரிவானது.

மிக முக்கியமாக, குறுக்கு வழிகளைத் தேடி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் உட் கிராமங்களுக்குச் செல்லும் வழித்தடங்களில் கார்களும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களும் படையெடுத்தன. இதன் விளைவாக, குக்கிராமங்களில்கூட பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எதிர்வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல், இன்ச் – பை – இன்ச்சாக ஆமை வேகத்தில் நகர்ந்தன வாகனங்கள்.
குறிப்பாக, பாடாலூரிலிருந்து தச்சங்குறிச்சி, பூவாளூர், கொள்ளிடம் ‘”Y” ரோடு வழியாக திருச்சியை சென்றடைவதற்குப் பதிலாக, பாடாலூரிலிருந்து எதிர் திசையில் திரும்பி மணியாங்குறிச்சி, நெடுங்கூர், சனமங்கலம், எம்.ஆர்.பாளையம், திருப்பட்டூர் வழியாக நுழைய முயற்சித்தனர். இதன் காரணமாக, நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பிவிடப்பட்ட பெரம்பலூர் மார்க்க பேருந்துகளும் இருசக்கர வாகனங்களும் நடுக்காட்டில் போக்குவரத்து நெரிசலில் பல மணிநேரம் சிக்கித் தவிக்க நேரிட்டது.
தேசிய – சென்னை நெடுஞ்சாலையில் மட்டுமின்றி, அதனையொட்டிய குக்கிராமங்களுக்கு செல்லும் தார்ச்சாலைகளிலும் போதுமான போலீசாரை நிறுத்தி எதிர்திசையில் பயணிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க முடியும்.

மாநாடு இடத்தை மாற்றலாமே … !

இவற்றையெல்லாம்விட, மாநாடு நடைபெறும் இடமே சிக்கலுக்குரியது என்கிறார்கள். இதற்கு முன்பு திமுக மாநாடு நடத்திய இடத்தில் மாநாட்டை நடத்தினால், இவ்வளவு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள். கட்சிகளின் விருப்பம் இந்த இடமாக இருக்கிறது, இதில் போலீசார் தலையிட முடியாது. போலீசாரின் ஆலோசனைகளையும் கேட்டு மாநாட்டுக்கான இடங்களை தேர்வு செய்தால் பொதுமக்களின் அசௌகரியத்தை தவிர்க்கலாம் என்கிறார்கள் போலீசு வட்டாரத்தில்.
அரசியல் கட்சிகளும், மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கூட்டாக இணைந்து இதற்கோர் தீர்வு கண்டால் நலமே என்கிறார்கள், ஏரியாவாசிகள்.

– ஆதிரன்.

5 national kavi
1 Comment
  1. இராமநாதன் says

    ஏன் மாநாட்டு இடத்தை மாற்ற முடியாது? போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுக்க போலீசுக்கு பவர் உண்டு. ஒவ்வொரு பிஜேபி மாநாட்டுக்கும் அதை இதே போலீஸ் செய்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா வந்த மாநாட்டுக்கு கூட 3 இடங்களை மறுத்து நாலாவது இடத்தை போலீசார் அனுமதித்தார்கள். மக்கள் மேல் அக்கறை இருந்தால் செய்வார்கள், இங்கே அரசியல் கட்சிகள் மேல் அக்கறை அவ்வளவு தான்.

Leave A Reply

Your email address will not be published.