இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” தொடங்கி வைத்த எம்.பி கனிமொழி !
“தூத்துக்குடியின் இளைஞர்கள் உயர்ந்த கனவுகளும் இலட்சியமும் கொண்டவர்கள். அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக, “புத்தொழில் களம்” என்ற ஒரு முன்னெடுப்பை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி உள்ளார்.
05/04/2025 தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் “புத்தொழில் களம்” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தில், 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் தொழில் திட்டங்களுடன் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. தேசிய இளைஞர் தினத்தில் தொடங்கிய இந்த முயற்சி மூலம், 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இதில், 10 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து 3 சிறந்த இளம் தொழில் முனைவோர் வெற்றி பெற்றுள்ளனர். கோவில்பட்டியைச் சேர்ந்த ஆர்த்தி, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தானேஷ் கனகராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் காஸ்கேரினோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிதி ஒரு வருட காலத்திற்குள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்படுவதால், அவர்களின் முயற்சிக்கு அதன் தொடக்கத்திலிருந்து தேவையான நிதி உதவி கிடைக்கும்.
இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிகழ்வின் நடுவர் குழுவில், Naturals Beauty Salon India Pvt. Ltd. நிறுவனத்தின் இணை நிறுவனர் சி.கே. குமரவேல், CIEL HR Services Pvt Ltd, Ma Foi Foundation and Groups நிறுவனங்களின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் லதா பாண்டியராஜன், Pearl Shipping Agencies நிறுவனத்தின் நிறுவனர் ஆர். எட்வின் சாமுவேல் ஆகியோர் இடம்பெற்றனர்.
மேலும், இந்நிகழ்வில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
— மணிபாரதி.