மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 11
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 11
சொல்வார்கள். தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள். தடத்தினைப் போட்டுக் கொடுப்பவர்கள் மா மனிதர்கள் என்று. அதன் வகையில் பல்கலைக் கழக நிதி நல்கைக் குழுவின் மூலம் முதன் முதலில் நிதியினைப் பெற வழிவகை செய்து தேசியக் கருத்தரங்குகளை நடத்திக் காட்டிய பெருமைக்குரிய முன்னோடி. தான் மட்டும் கற்றறிந்த பேராசியராக விளங்கிடாமல், நான்கு முனைவர் பட்டம், 26 ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்களுக்கு உற்ற வழிகாட்டியாய் இருந்து நெறிப்படுத்திய நெறியாளர். அவர்தான் பெருமைக்குரிய பேராசிரியர் ஆ. கருணாநிதி அவர்கள்.
மூன்று ஆய்வு நூல்கள், எட்டு ஆய்வுக்கட்டுரை நூல்களின் தொகுப்பாசிரியர். 27ஆண்டுகள் உருமு தனலட்சுமி கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும், பாரதிதாசன் பல்கலையில் முதுகலைத் தமிழ்ப் பாடத்திட்டக் குழுத் தலைவராகவும், சிறப்பாகப் பணியாற்றி தற்போது பணி நிறைவில் இருப்பவர்.
முதலில் 1970 முதல்1985வரை திராவிட இயக்கச் செயற்பாட்டாளராக விளங்கியவர், 1986முதல் மார்க்சிய இயக்கங்களின்பால் ஈர்க்கப்பட்டு மார்க்சிய அறிஞராக தன்னைச் செழுமைப்படுத்திக் கொண்டவர். வெறும் ஏட்டளவில், பேச்சளவில் அல்லாது 1986ல் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாது தன் ஒரே மகளுக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தவர்.
ஆழமான சிந்தனைகளுக்கும், அமைதியான உரையாடல்களுக்கும், பழகுதற்கு மிக இனிமையானவருமான பேராசிரியர் அவர்கள் இன்னும் பல ஆய்வுகளை தமிழ் கூறு நல்லுலகிற்குத் தர வேண்டும் என வேண்டுவோம்.
-பாட்டாளி