அங்குசம் பார்வையில் ‘இறைவன்’ – படம் எப்படி இருக்கு ?
அங்குசம் பார்வையில் ‘இறைவன்’ படம் எப்படி இருக்கு… !
தயாரிப்பு: பேஸன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & ஜி.ஜெயராம். டைரக்டர்:ஐ.அகமது, ஆர்ட்டிஸ்ட்: ஜெயம் ரவி, நயன் தாரா, நரேன், விஜயலட்சுமி, ராகுல் போஸ், அழகம் பெருமாள், சார்லி, ஆசிஷ் வித்யார்த்தி, வினோத் கிஷன். டெக்னீஷியன்கள்: இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: ஹரி கே.வேதாந்தம், எடிட்டர்: மணிகண்ட பாலாஜி, ஸ்டண்ட்: டான் அசோக். பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & ரேகா டி ஒன்.

டீன் ஏஜ் பெண்களைக் கடத்திக் கொண்டு போய் அறுத்து ஆறு கூறு போட்டு சாக்கடையிலோ முட்புதரிலோ வீசிவிட்டுப் போகிறார் சைக்கோ கில்லர் ராகுல் போஸ். ஆனால் டைரக்டர் அகமதுவோ இந்த கொலைகாரனுக்கு ‘ஸ்மைலி கில்லர் ‘ என்று புதுப்பேரு வச்சிருக்கார். சரி, அவன் ஏன் இப்படி ஆனான் என்பதற்கு கரெக்டாக காரணத்தை கனெக்ட் பண்ணுவார்னு பார்த்தா பொட்டுன்னு போட்டுத் தள்ளிருது போலீஸ். அதுக்கப்புறம் செமி மெண்டல் கொலைகாரனாக வினோத் கிஷன் எண்ட்ரியாகி, அவரும் சில பெண்களை அறுத்து கூறு போடுகிறார்.
சரிங்க, படத்துல அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் ஹீரோ ஜெயம் ரவி என்ன தான் பண்றாருன்னு பார்த்தா… ஒண்ணுமே பண்ணலங்க. க்ளைமாக்ஸ்ல வினோத் கிஷன் கழுத்தில் கத்தியை வீசுறாரு. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போய் அங்க வச்சு கதையை முடிக்கிறாரு. அவ்வளவு தான். அப்பா, அண்ணன் என சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்புத்திறனால் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டவர் ஜெயம் ரவி.

அவர் ஏன் இப்படிப்பட்ட மோசமான கதை, மிகவும் மோசமான திரைக்கதையை உள்ளடக்கிய ‘இறைவன்’ படத்தை செலக்ட் பண்ணினார் என்பது தான் நமக்குப் புரியாத புதிராக உள்ளது. அடுத்த படங்களாவது ஜெயம் ரவிக்கு சிறப்பாக இருக்க, அவர் நம்பும் கடவுளும் கும்பிடும் இறைவனும் துணை இருக்கட்டும்.