அங்குசம் பார்வையில் ‘J.பேபி’ படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘J.பேபி’ தயாரிப்பு: ‘நீலம் புரொடக்ஷன்ஸ், நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டா மீடியாஸ். பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், செளரவ் குப்தா, அதிதி ஆனந்த், அஷ்வினி செளத்ரி. தமிழ்நாடு ரிலீஸ்: சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன். டைரக்ஷன்: சுரேஷ் மாரி. நடிகர்—நடிகைகள்: ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயா ஸ்ரீ. ஒளிப்பதிவு: ஜெயந்த் சேதுமாதவன், இசை: டோனி பிரிட்டோ, எடிட்டிங்: சண்முகம் வேலுச்சாமி, ஆர்ட் டைரக்டர்: ராமு தங்கராஜ். பி.ஆர்.ஓ.குணா
இரண்டு பெண், மூன்று ஆண் பிள்ளைகளுக்குத் தாய் ஜே.பேபி என்ற ஊர்வசி. கணவரின் திடீர் மரணத்தால் ரொம்பவே மனம் உடைந்து போய், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்படுகிறார். ஒவ்வொரு பிள்ளை வீட்டிற்கும் போய் சாப்பிட்டு காலம் கடத்துகிறார். ஆனால் அவரது நடவடிக்கைகளில் வினோதமான விபரீதமான காரியங்கள் அடிக்கடி நடப்பதால், அவர் பெற்ற பிள்ளைகளுக்கு பெரிதும் தர்மசங்கடமான நிலை வருகிறது. இதனால் அவரை பெண்களுக்கான மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர் பிள்ளைகள். திடீரென ஒரு நாள் அந்தக் காப்பகத்தில் இருந்து காணாமல் போகிறார் பேபி.
கொல்கத்தாவில் உள்ள அரசு காப்பகத்தில் இருப்பதாக, இங்கே உள்ள போலீசுக்குத் தகவல் வர, பேபியின் மகன்களான செந்தில் ( மாறன்), சங்கர்(தினேஷ்) ஆகியோர் கொல்கத்தா செல்கின்றனர். அங்கே ராணுவத்தில் பணிபுரியும் தமிழரான மூர்த்தி என்பவர் அவர்களுக்கு உதவுகிறார். தாய் பேபியை மகன்கள் கண்டு பிடித்தார்களா? பேபியின் மனநலம் சீரானதா? என்பதற்கு விடை தான், டைரக்டர் சுரேஷ் மாரியின் இந்த ஜே.பேபி.
இதுவரை முக்கால்வாசி சந்தானம் படங்களில் காமெடியில் கலக்கி வந்த மாறனுக்கு இதில் அசத்தும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கி எடுக்கும் லக்கி சான்ஸ் கிடைத்திருக்கிறது . ஊர்வசியின் மூத்த மகன் செந்திலாக படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். அப்பப்ப டைமிங் காமெடியிலும் வெளுத்துக்கட்டுகிறார். இளைய மகன் சங்கராக, ஏழை வர்க்கத்தின் பரிதாப நிலையை முகபாவனையிலேயே வெளிப்படுத்தி ஜொலிக்கிறார்.
பெண் கதாபாத்திரங்களில் முன்னனியில் இருப்பவர், பேபியின் இளையமகள் செல்வியாக வரும் மெலடி டார்கஸ் தான். மாறனுக்குத் தங்கை, தினேஷுக்கு இளைய அக்கா. மனநலகாப்பத்தின் மருத்துவரிடம் தனது தாயின் நிலையைப் பற்றிச் சொல்லி, “நாங்க எல்லாருமே கூலி வேலை தான் டாக்டர். எங்க வயித்துப்பாட்டுக்கே வழியில்லாம தான் இங்க கூட்டி வந்தோம்” என மனதில் உள்ளதைக் கொட்டி, கதறியழும் காட்சியிலும், காப்பகத்தில் இருந்து ஊர்வசி தீபாவளி நாளில் வெளியேறி ரோட்டில் போகும் போது, “அம்மா…அம்மா.. நில்லும்மா” என கண்ணீருடன் கதறி பின்னாலேயே ஓடி வரும் காட்சியிலும் நம்மை ரொம்பவே நெகிழச் செய்துவிட்டார் மெலடி. அந்தக் காட்சியில், அம்மாவுக்காக ஆசையாக செய்து எடுத்து வந்த தீபாவளி பாயாசமும் வடையும் ரோட்டில் சிதறிக்கிடப்பதைக் காட்டி நம் மனம் கணக்க வைத்துவிட்டார் டைரக்டர் சுரேஷ்மாரி.
படத்தில் மற்றொரு முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய கேரக்டர் என்றால் கொல்கத்தா தமிழராக வரும் மூர்த்தி தான். தமிழனுக்கே உரிய தயாள குணம், ஈகை குணம், இரக்க குணம் இவற்றின் சாட்சியாக மூர்த்தியின் கேரக்டர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது. “ஏப்பா வார்த்தைக்கு வார்த்தை என்னை சாமி சாமின்னு கூப்பிடுவாங்கப்பா உங்க அம்மா. அவுங்களை இப்படி விடுறதுக்கு உங்களுக்கு எப்படிப்பா மனசு வந்துச்சு?” எனச் சொல்லி அழும் காட்சி, க்ளைமாக்சில் கொல்கத்தாவை விட்டுக்கிளம்பும் போது, மூர்த்தியை ஆரத்தழுவி, “சாமி நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும் சாமி” என ஊர்வசி நெகிழும் காட்சியில் நம்மை கண் கலங்க வைத்துவிட்டார் மூர்த்தி. கொல்கத்தா பேரக்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பெண்காவலராக இருக்கும் கர்ப்பிணிப் பெண்ணின் கேரக்டரைக் கூட மனதில் பதியவைத்திருக்கிறார் டைரக்டர்.
படத்தின் தலைப்புக்கு பெரிதும் நியாயம் சேர்த்திருக்கிறார், தனது நடிப்பு உழைப்பால் பெரும்பங்காற்றியிருக்கிறார் நம்ம ஊர்வசி. “நைனா நைனா.” என மகன்களை அழைப்பதாகட்டும், வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து தெருவோர ஏழைகளுக்கு கொடுப்பதாகட்டும், ”என்னைய விட்டுட்டுப் போய்ட்டாங்களா” என இங்கே உள்ள காப்பகத்தில் இருக்கும் போது, மனம் வெதும்புவதாகட்டும், கேள்வி கேட்கும் டாக்டரிடம் சீறுவதாகட்டும், கொல்கத்தாவின் காப்பகத்திற்கு மகன்கள் வந்திருப்பதைப் பார்த்து மாடிப்படியில் இருந்து இறங்கி வரும் போது வயது முதிர்வு தளர் நடையாகட்டும், ரோந்து போலீசிடம் ”நான் யார் தெரியுமா?” ஸ்டாலின் பி.ஏ.” என தெனாவெட்டு காட்டுவதாகட்டும், கொல்கத்தா நீதிமன்றத்தில் “இவன் என்ன பெரிய மயிரு நீதிபதி” என சீறுவதாகட்டும், படம் முழுக்க ஊர்வசியின் நடிப்பு தான் கொடிகட்டிப் பறக்கிறது. எத்தனை பெரிய உயரிய விருதுகள் கொடுத்தாலும் ஊர்வசிக்குத் தகும்.
கேமராமேன் ஜெயந்த் சேதுமாதவனும் மியூசிக் டைரக்டர் டோனி பிரிட்டோவும் பேபியின் உயிர் மூச்சு என்றால் அது மிகையில்லை.
இதில் நடித்தவர்கள் அத்தனை பேரும் நம் நிறத்தவர்களாக, நம் இனத்தவர்களாக நம் குணத்தவர்களாக நமது உறவுகளாக காட்டியிருப்பது தான் படத்தின் வெற்றிக்குச் சாட்சியாக நிற்கிறது, நிற்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. பா.இரஞ்சித் சினிமாக்கள் என்றாலே அதில் ஒரு அரசியல் இருக்கும். ஆனால் இந்த ஜே.பேபியில் தாயின் அருமையும் பெருமையும் தியாகமும் மட்டுமே இருக்கிறது.
-மதுரை மாறன்