சொகுசுக்காக குடும்ப பெண்களை மயக்கும் கேடி கில்லாடி கார்த்திக் ராஜா !

0

சொகுசுக்காக குடும்ப பெண்களை மயக்கும் கேடி கில்லாடி கார்த்திக் ராஜா !

விவாகரத்து பெற்ற இளம்பெண்களை குறி வைத்து அவர்களுடன் நட்பாக பழகி நகைகளை ஆட்டைய போட்ட ஆசாமியை மதுரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். இது முதல்முறையல்ல; கடந்த மூன்றாண்டுகளாக இதேபோல தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு பெண்களிடம் கைவரிசையைக் காட்டியிருக்கிறான்.

https://businesstrichy.com/the-royal-mahal/

குறிப்பாக, கடந்த 2022 இல் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் அளித்த புகாரில் சிறைக்கும் சென்று வந்திருக்கிறான். ஒருவருட இடைவெளியில் விருதுநகரைச் சேர்ந்த 35 வயது பெண் அளித்த புகாரில் தற்போது மதுரை கே.புதூர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

கார்த்திக் ராஜா
கார்த்திக் ராஜா

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவன் கார்த்திக்ராஜ் (எ) கார்த்திக் ஆரோக்யராஜ். இவனது தந்தை கப்பற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வெறும் 26 வயதேயான கார்த்திக்ராஜ் பி.இ. பட்டதாரியும் கூட. முதலில் ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்த கார்த்திக்ராஜ், அவரை விவாகரத்து செய்துவிட்டு யோகலெட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறான். தற்போது, அந்த பெண்ணிடமிருந்தும் பிரிந்திருக்கிறான்.

பெங்களூருவில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சேல்ஸ் பிரிவில் பணியாற்றியவன் பின்பு அங்கிருந்து திருவண்ணாமலை ஆக்சிஸ் வங்கிக்கு மாறியிருக்கிறான். வங்கி நிர்ணயிக்கும் டார்கெட்டை முடிக்கமுடியவில்லை என்பதற்காக வங்கி வேலையே வேண்டாம் என வெறுத்தவன் வேலைக்கே போகாமல் எப்படி சொகுசாக வாழ்வது என்று யோசித்திருப்பான் போல. மற்றவர்கள் நிர்ணயிக்கும் டார்கெட்ஐ முடிக்க ஏன் நாம் ஓட வேண்டும். நாமே டார்கெட் நிர்ணயிப்போம் என தீர்மானித்து, முதலில் வயதான பெண்களை டார்கெட் செய்திருக்கிறான் கார்த்திக்ராஜ்.

கண்களை உறுத்தும் வகையில் கழுத்தில், காதில் நகைகளை மாட்டிவரும் வயதான பெண்களை முதலில் குறிவைத்திருக்கிறான். அதிலும், கைச்சுமையுடன் நடக்க சிரமப்படும் மூதாட்டிகள்தான் முதல் தேர்வு. அவர்களிடம் அனுசரணையாக பேசி தனது பைக்கில் ஏற்றிவிடுவானாம். பாட்டியை பின்புறம் ஏற்றிவிட்டு, அவர்கள் கொண்டுவரும் லக்கேஜை முன்புறம் வைத்துக்கொள்வானாம்.

கூடவே, “திருட்டுபசங்க ஜாஸ்தி ஆயிட்டானுங்க. பைக்ல போறப்ப செயின அறுத்திட்டு போயிடுவானுங்க. பத்திரமாக கழட்டி பர்ஸ்ல வச்சிக்கோங்கனு..” அட்வைஸ் செய்வானாம். ஆண்டவனே பார்த்து அனுப்பிவச்ச மகராசன்னு மனசார பாராட்டி கழட்டிய நகையை பையில் வைக்கச் சொல்லி அவனிடமே கொடுத்துவிடுவார்களாம். பாட்டியை வீட்டு வாசலில் பத்திரமாக இறக்கிவிடும் கார்த்திக்ராஜ், பைக்கில் முன்பக்கம் வைத்திருந்த லக்கேஜோடு ஜூட் விட்டுடுவானாம்.

அதிலும், சாமர்த்தியமான பாட்டிகள் பையை நம்பி கொடுக்காமல் கையிலே வைத்து பயணித்தாலும், வீடு வரை சென்று குடிக்க தண்ணீர் கேட்பானாம். அவர்கள் தண்ணீருடன் திரும்புவதற்குள், நகையோடு இவன் கம்பியை நீட்டிவிடுவானாம். கோயம்புத்தூரில் இதே பாணியில் அடுத்தடுத்து இவன் கைவரிசையை காட்ட, காட்டூர் போலீஸ் ஸ்டேசனில் நாலு கேசு, சாய்பாபா காலனியில் ரெண்டு கேசுனு பதிவாக, ஜெயிலுக்கு சென்றிருக்கிறான்.

ஜெயிலுக்கு சென்று பெயிலில் திரும்பியவன், இந்தமுறை டார்கெட் செய்தது விவாகரத்தாகி இரண்டாவது திருமணத்தை எதிர்பார்த்திருப்பவர்களை. இதற்கென உள்ள மேட்ரிமோனியில், இவனும் ஒரு உறுப்பினராக பதிவு செய்து வைத்துக்கொண்டு, தொடர்பு எண்களை பெற்று பேச ஆரம்பித்திருக்கிறான்.

குறைந்தது ஒரு மாசம் ரொம்ப நல்ல பிள்ளை போல பேசிப்பழகுவது. அந்த நல்ல உள்ளத்தை நேரில் சந்திக்கும் அந்த பொன்னாள் எந்நாள் என்று அந்த பெண்களே ஏங்கும் அளவுக்கு கம்பி கட்டும் கதையெல்லாம் கட்டி முடித்துவிடுவானாம் அந்த முப்பது – நாற்பது நாட்களுக்குள். அடுத்ததாக, நேரில் சந்திப்பது. இந்த சந்திப்புகள் எல்லாம் பெரும்பாலும் காஸ்ட்லி ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் அல்லது பிரபலமான துணிக்கடைகளில்தான்.

முதலில், அவர்களுக்கு பிடித்தமான விதம்விதமான உணவுப்பொருட்களை வாங்கிக்கொடுத்து, மூக்கைப்பிடிக்க நல்ல சோற்றை போட்டுவிடுவானாம். பின்னர், சந்திக்கும் இடம், சூழல், அந்த குறிப்பான பெண்களின் மனநிலையை பொறுத்து ”உனக்காகவே இந்த டாலரை கொண்டு வந்திருக்கிறேன். உனது செயினை கொடு மாற்றித் தருகிறேன்.

தல்லாகுளம் இன்ஸ் பாலமுருகன்.
தல்லாகுளம் இன்ஸ் பாலமுருகன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

” என்று சொல்லியோ, ”உனது செயின் அழகாக இருக்கிறது. நான் ஒருமுறை போட்டு பார்த்து தருகிறேன்” என்று சொல்லியோ சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசி செயினை லவட்டிக் கொண்டு கிளம்பிவிடுவானாம். இன்னும் சிலருக்கு அவர்களுக்கு பிடித்த டிரஸ் எடுத்துக் கொடுத்து, அதை அவர்கள் ட்ரையல் ரூமில் போட்டு பார்த்து திரும்புவதற்குள் நகையோடு இவன் எஸ்கேப் ஆகிவிடுவானாம்.

இதில் கூத்து என்னவெனில், இந்த சந்திப்புகள் எல்லாம் பெரும்பாலும் மதுரை மாநகருக்குள்ளேதான் நடந்திருக்கின்றன. காலையில் ஒன்னு, மதியம் ஒன்னு, சாயங்காலம் ஒன்னு, நைட்டுக்கு ஒன்னுனு வேற வேற லொக்கேஷன்களுக்கு வரவழைத்து ஒரே நாளில் நாலு பெண்களை ஏமாற்றியிருக்கிறான், இந்த கார்த்திக்ராஜ். பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசிடம் சென்று விடக்கூடாதென்பதற்காகவே, அப்பெண்களை சந்திக்கும்பொழுதே அவர்களது போனை வாங்கி பார்ப்பது போல பார்த்து, தனது எண் மற்றும் வாட்சப் ஹிஸ்டரிகளை அழித்துவிட்டு திருப்பிக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறான்.

இதுபோல, சுருட்டிய நகைகளை விற்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான். ஆனால், ஒன்னு. இதுபோல பல பெண்களை ஏமாற்றி நகையைப் பறித்திருந்தாலும், தப்பித்தவறிக்கூட அந்தப் பெண்களின் மீது கை வைத்ததில்லையாம். முழுக்க முழுக்க நகையைப் பறிக்க வேண்டுமென்ற நோக்கத்திலேயே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டிருக்கிறான் என்கிறார்கள் போலீசு வட்டாரத்தில்.

வத்திராயிருப்பைச் சேர்ந்த பெண்ணிடம் 2 பவுன்; விருதுநகர் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த பெண்ணிடம் 8.5 பவுன்; சாத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் 3 பவுன் என தொடர்ந்து கைவரிசையைக் காட்டியவன், கடைசியாக 2022 டிசம்பரில் சிக்கி சிறைக்கு சென்றிருக்கிறான். 2023 ஜூன் மாதம் பெயிலில் வெளி வந்தவன், இராமநாதபுரம் வன்னிவயலைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசியிருக்கிறான்.

மதுரை விஷால் மாலுக்கு வரவைத்து அவரிடமிருந்து 3 பவுனை ஆட்டையப் போட்டிருக்கிறான். மதுரை முல்லைநகரைச் சேர்ந்த பெண்ணிடம் பேசி அதே மாலுக்கு வரவழைத்தவன், நல்ல டிசைனில் கவரிங் தோடு வாங்கித்தருவதாக சொல்லி, கிடைத்த கேப்பில் நகையோடு எஸ்கேப் ஆகியிருக்கிறான்.

”இதுபோன்ற புகார்கள் தொடர்ச்சியாக எங்களது கவனத்திற்கு வந்துகொண்டேயிருந்தது. விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலிருந்து விசாரணையை முடுக்கிவிட்டோம். மதுரை காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மற்றும் எனது தலைமையில் தல்லாக்குளம் ஆய்வாளர் பாலமுருகன், அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிரியா மற்றும் போலீசார்கள் போஸ், சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்தோம்.

விருதுநகர், மதுரை, சிவகாசி, ராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இவனை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்தோம். இறுதியாக, மதுரை மாட்டுத்தாவனியில் பொறிவைத்து பிடித்திருக்கிறோம்.” என்கிறார், மதுரை அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் சூரக்குமார்.

உதவி ஆணையர் சூரக்குமார்.
உதவி ஆணையர் சூரக்குமார்.

கார்த்திக்ராஜா மீது இதேபோன்ற புகார்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பதும் ஏற்கெனவே சிறைக்கு சென்று வந்த நிலையிலும் அதே பாணியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கைவரிசையைக் காட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

முதல் மணம், மறுமணம், மாற்றுத்திறனாளிக்கென்று பிரத்யேகமானது என்பதையெல்லாம் தாண்டி, இன்று சாதிக்கொரு மேட்ரிமோனி இணையதளங்கள் வந்துவிட்டன. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் விவாகரத்துகளும் சர்வ சாதாராணமாகிவிட்டன.

ஆசைப்பட்ட வாழ்க்கையை இழந்து, எதிர்காலம் குறித்த அச்சத்தோடு மறுமணத்திற்காக காத்திருக்கும் விவாகாரத்து ஆன பெண்களை பேசி மயக்கி ஆசை வலையில் வீழ்த்துவதும்; அவர்களிடமிருந்து பணத்தையும் நகையையும் ஏமாற்றி பறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்தில் இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுபோன்ற மேட்ரிமோனி இணையதளங்களில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலையை மாற்றியமைக்க வேண்டும். ஆதார் எண் உள்ளிட்ட அடிப்படை ஆதாரங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்றெல்லாம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசும் போலீசும் பரிசீலிக்க வேண்டிய விசயம் இதுவென்றாலும், விரல் நுணியில் மோசடி செய்திகள் வந்து விழும் இந்த காலத்திலும் இதுபோல் ஆசை வலையில் வீழாத வகையில் நாமும் விழிப்போடுத்தான் இருந்தாக வேண்டும்.

– ஷாகுல் – படங்கள்: ஆனந்த் – மதுரை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.