கே.என்.நேரு அரசியல் ரகசியமும் அவசியமும்….
கடந்த 25வருடங்களுக்கு மேல் திருச்சி அரசியலில் பெரிய ஆளுமையாக வலம்வருபவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. நவம்பர் 9ந்தேதி அவருக்கு பிறந்தநாள்.
அரசியலில் கால்பதிக்க நினைக்கும் திருச்சி அரசியல்வாதிகள் நிச்சயம் நேரு வளர்ந்த கதையை தெரிந்து கொள்வது அவசியம். 10 வருடங்களுக்கு மேல் அமைச்சர், அடுத்து சட்டமன்ற உறுப்பினர், சேர்மேன், மாவட்ட செயலாளர், கட்சியின் முதன்மை செயலாளர் என கடந்துவந்த பாதைகளை புரட்டிபார்ப்போம்.
திருச்சியிலிருந்து 40கிலோமீட்டர் தொலைவில் உள்ள லால்குடி அடுத்த காணக்கிளியநல்லூர்தான் நேருவுக்கு சொந்த ஊர். அப்பா நாராயணசாமி ரெட்டியார், அம்மா தனலெட்சுமி, உடன் பிறந்தவர்கள் ஏழுபேர், அதில் மூத்தவர் நேரு.
தென்னந்தோப்புகள், நெல் விவசாயம், நிலபலம், என பலநூறு ஏக்கர் என பெருநிலக்கிழாரான நாராயணசாமி, ஒரு காங்கிரஸ்காரர். அந்த விசுவாசத்தால் 1960ம் ஆண்டு பிறந்த மூத்தமகனுக்கு நேரு என்றும், மகளுக்கு காந்தி என பெயரிட்டார். அவரின் மருமகனுக்கு ‘ஜனநாயகம்’ என பெயர் வைத்தார். அந்த அளவுக்கு அரசியல் மீது அக்கறையுள்ள குடும்பம். 1960ம் ஆண்டு தமிழகத்தில் திமுக செல்வாக்கு பெற துவங்கிய காலகட்டம். மாற்று அரசியல் தேடி நாராயணசாமி காங்கிரசிலிருந்து திமுகவுக்கு சென்றார். பல முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் திமுக நோக்கி நகர்ந்தார்கள்.
அந்தக் குடும்பத்தில் வாரிசான நேரு, அரசியலில் ஆர்வம் உள்ள இளைஞராகவும், அந்த ஊர் கிராம மக்களுக்கு உதவும் இளைஞராக வளர்ந்தவர், ஊருக்குப் பிரச்சினை என்றால் நேருவிடம்தான் ஓடுவார்கள். இப்போதும் புல்லட்டில் வலம்வரும் “நேரு அப்போதே, போக்குவரத்து வசதிகள் குறைவான அந்த காலத்தில் மண் ரோட்டில் நடந்துவருபவர்களுக்கு வாங்க வந்து ஏறிக்கோங்க என ‘லிப்ட்’ கொடுப்பார். ஒரேநேரத்தில் 5 பேரைக்கூட ஏற்றிப் போவார் நேரு. இப்போதும் ஊருக்குப் போனால் காரை ஓரமாக வைத்துவிட்டு புல்லட்டில் வலம்வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
“ஒருமுறை ராஜிவ்காந்தி நடைபயணமாக லால்குடிக்கு வந்திருந்தார். அப்போது,மக்கள் கூட்டத்தில் இருந்த இளைஞர் ‘குடிநீர் தொட்டியை’ திறந்துவைக்க தைரியமாக முறையிட்டார். அடுத்து ராஜிவிடம் “உங்கள் தாத்தா பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள்” என்று சொல்லி, பிரதமரின் கவனத்தைக் கவர்ந்து, தன் யூனியனுக்குப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்துகொண்டார். அதனால், அந்தப் பகுதியில் செல்வாக்கு உயர்ந்தது. காங்கிரஸ்காரர்களே பயந்திருந்த வேளையில் துணிச்சலாக முறையிட்ட இளைஞர்தான் நேரு.
1978ல் தீவிர அரசியலில் இறங்கினார் நேரு. பி.யூ.சி., வரை படித்த நேரு, அரிய நல்லூரில் மிளகாய் மண்டி வைத்தார். பிறகு, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி. கையில் பணமும் சுற்றுவட்டாரத்தில் கொஞ்சம் அறிமுகமும் கிடைத்ததும் அரசியலில் இறங்கினார்.
அன்பில் தர்மலிங்கம் ஆசியுடன் புள்ளம்பாடி யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தேர்தலில் நின்றார். தேர்தல் நடத்திய எம்.ஜி.ஆர். முழுமையாகத் தோற்று, அதுவரை தொடர் தோல்வியில் இருந்த தி.மு.க. மொத்தமாக வெற்றிபெற்ற தேர்தல் அது. அன்று ஆரம்பித்த அரசியல் பயணம், தற்போது வரை தொடர்கிறது. 1989ல் நேருவுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. முதல் வாய்ப்பிலேயே வெற்றிபெற்ற நேரு, அமைச்சரானார். நேருவுக்கான பொன்வாய்ப்பு உருவானது,
அப்போது திருச்சி மாவட்டத்தில் செல்வாக்காக விளங்கிய செல்வராஜ், முசிறியில் தோற்கிறார். அவருக்கு அடுத்த மலர்மன்னனுக்கு கிடைக்க வேண்டிய மந்திரி பதவி, நேருவுக்குப்போனது. மின் துறை அமைச்சரானார்.
வைகோ பிரியும்போது செல்வராஜும் மலர்மன்னனும் பிரிந்தார்கள். அடுத்து அன்பில் பொய்யாமொழியின் அகால மரணம், இவருக்கு வழிவிட அடுத்து 1989-91வரை தமிழக மின்சாரதுறை அமைச்சர், பால்வளம், செய்தித் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,1996-2001ல் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர், கடந்த 2006-2011 வரை போக்குவரத்து துறை அமைச்சர் என பலமிக்க பதவிகளில் இருந்தவர், இப்போது திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏவாகவும் உள்ளார்.
1992ல் திமுக பெரும் பிளவைச் சந்தித்தது. கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த வைகோ, திமுக தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கட்சியில் செல்வாக்கு பெறுவதையும், வளர்ச்சியடைவதையும் எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறினார் . அவரோடு சேர்ந்து சில மாவட்டச் செயலாளர்களும் வெளியேறினர். அதில் அன்றைய திருச்சி மாவட்டச் செயலாளரும் ஒருவர். எனவே, மாவட்டத்தில் கட்சிக்கான அடுத்த முகத்தை தெரிவு செய்யவேண்டிய நிலை வந்தது. அப்போது கட்சித் தலைமையின் தேர்வாக இருந்தவர் கே.என்.நேரு !
அப்போது, “கிராமங்கள்தோறும் பயணித்து கட்சியின் கட்டுமானத்தை வலிமைப்படுத்தி, கட்சியை நிலைநிறுத்தினார்” அதுதான் இன்றுவரை கட்சியின் கவனத்தை நிலை நாட்டியுள்ளது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் என போகும் இடங்களில் இப்போதும் செல்வாக்காக உள்ளார்.
அரசியலை கடந்து நேருவின் முதல் தேர்வும் விவசாயம்தான். இப்போதும் அதிகாலையிலேயே எழுந்து, தன் நிலங்களை சுற்றி, பார்த்துவிட்டுதான் அடுத்த வேலை ! காணக்கிளியநல்லூரைச் சுற்றி கொய்யா தோப்புகளும், சப்போட்டா தோப்புகளில் சில இப்போது குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அதோடு ஶ்ரீ நாராயணசாமி ரைஸ் மில் எனும் நவீன தொழில் நுட்ப மில்லை இங்கு கடந்த 2008லிருந்து நடத்திவருகிறார். நேருவின் சொந்த வீட்டிற்கு அருகில் இரண்டு கட்டிடங்கள் உள்ளது. ஒன்று பழங்குடியின மாணவர்கள் விடுதி, இன்னொன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி.
அவரது தொகுதிக்குட்பட்ட சொலோமா சேரிப்பகுதி, தலீத் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 7 லட்ச ரூபாய் செலவுசெய்து ஜிம் கட்டியுள்ளார்.
திருச்சியில் சுமார் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். லால்குடி எனும் பின்தங்கிய பகுதியில் இருந்து வந்த ஒருவர், தொடர்ந்து தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டு வருகின்றார்.
இப்போதும் தன் அலுவலகத்திற்கு பார்க்க வருபவர்கள், இல்ல திருமணங்களுக்கு பத்திரிக்கை வைப்பவர்கள், கல்யாண வீடு என எது நடந்தாலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தராளாமாக எடுத்து நீட்டுவார். அதுதான் அவருக்கான பிளஸ்.
1980ல் வட்டிக்கடை வைத்திருந்ததால், கடையின் வாசலில் அமர்ந்திருக்கும் நேரு, தன்னைப் பார்க்க வருகிறவர்களுக்கு 5,10 எனக் கொடுப்பார். ‘சும்மா செலவுக்கு வச்சுக்கங்க’ என்பார் அந்தப் பழக்கம்தான் இப்போது தொடர்கிறது.
முன்பெல்லாம் முன்கோபத்தால் கை நீட்டிவிடும் அவர், அடுத்த சில நேரங்களில் கோபம் தணிந்து திட்டியவரை அழைத்து சப்பாடு போடுவார். 2006-2011 வரை போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அவர் அரசு அதிகாரிகளிடம் நடந்துகொண்ட விதம் இப்போதும் மக்களை பேச வைத்துள்ளது அது அவர்களுக்கான மிகப்பெரிய மைனஸ்.
2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும்,நில மோசடி வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட திமுக தலைவர்களில் நேருவும் ஒருவர். அடுத்து 2011 தேர்தலில் நேரு, அதிமுகவின் மரியம் பிச்சையிடம் தோல்வி. நேருவின் அரசியல் படியில் பெரும் சறுக்கலாகவே பார்க்கப்பட்டது. அதைகடந்து தற்போது எம்.எல்.ஏவாக வலம்வருகின்றார்.
பிட்ஸ்: நேரு என்றால் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் தனிப் பிரியம். அதை அதிகப்படுத்திக் காட்ட நேரு எடுத்த முயற்சிதான் திருச்சியில் திறக்கப்பட்ட ‘கலைஞர் அறிவாலயம். அடுத்து கொட்டப்பட்டு, பிராட்டியூர் என பல மாநாடுகள் நடத்தி தலைமையின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
தம்பி இறந்தபிறகு சுத்தமாக சைவத்துக்கு மாறிவிட்டார்.
2012ம் ஆண்டு கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். ஜீரணிக்க முடியாத வகையிலான அந்தக் கொடூர கொலை வழக்கில், இதுவரை யார் குற்றவாளி என்று கண்டறியப்படவில்லை. ராமஜெயத்தின் மரணம் கே.என்.நேருவை வெகுவாக பாதித்துள்ளது. அவரை அந்த மரணத்தின் பாதிப்பிலிருந்து ஆற்றுப்படுத்தவோ, அவரால் அதன் பாதிப்பிலிருந்து இப்போதும் அவர் குடும்பம் மீள முடியவில்லை.
நேருவின் பலம் என்பது அவரது குடும்பம்தான். அவரது தம்பிகள் இப்போதும் நேரு, முன்னால் அதிர்ந்துகூடப் பேச மாட்டார்கள். ராமஜெயம் உயிரோடு இருக்கும்வரை என்னதான் அதிகார மையத்தில் பலமிக்க நபராக இருந்தாலும், அண்ணன் நேரு முன் நின்று கொண்டுதான் பேசுவார். இப்போது அவரது தம்பிகள் மணிவண்ணன்,ரவியும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்.
அடிக்கிற கை தான் அணைக்கும்
அவர் அமைச்சராக இருந்த காலத்தில் தனக்கு பணியாற்றிய பணியாளர்கள் அனைவரையும் அவர்களின் வயது முதிர்ந்த காலத்திலும் பண உதவி பராமரித்து வருகிறார்..
நேருவின் நையாண்டி, நக்கல், ஏதார்த்த பேச்சுக்களை தமிழகத்தின் அனைத்து முன்னணி கட்சி தலைவர்களுக்கு ரசித்து கேட்பார்கள். அவர் பேசுகின்ற பேச்சை வேறு யார் பேசினாலும் அது கோபத்தை தூண்டுவதாக தான் அமையுவதும்.
யார் விசுவாசிகள் ?
நேரு திருச்சியின் அரசியல் சதுரங்கத்தில் எதிரிகளின் பலத்தை குறைப்பதற்கு அவர் எடுக்கும் ஆயுதங்கள் அனைத்தும் எதிரியின் ஆதரவாளர்களை தன்னுடைய ஆதவாளர்களாக மாறுவதும் அவர்களுக்கு கட்சி பதவிகளை வாங்கி கொடுப்பார். இப்படி எதிர் அரசியல் செய்வதாலே இவருடைய ஆதரவாளர்கள் பலர் இனத்தின் பெயரால் பல சமயங்களில் முதுகில் குத்திய போதும் தன்னை சுற்றி தான் திருச்சி அரசியலை மாற்றியிருப்பதும் தான் அவருடைய அரசியல் முதிர்ச்சி.
அங்குசம் செய்தி குழு..