நாங்க தான் கரூர்க்கு ராஜா ! எங்கள எதுவும் பண்ண முடியாது ! ”கந்துவட்டி” கரூரின் அடையாளமா? அவமானமா?

0

நாங்க தான் கரூர்க்கு ராஜா ! எங்கள எதுவும் பண்ண முடியாது ! அடுத்தடுத்து காவு வாங்கும் கந்துவட்டி ! 

”ஆபிஸ்ல எட்டு ஆம்பள பயலுங்க இருந்தாங்க. ஆளாளுக்கு ஒரு வார்த்தை பேசுனாங்க. அவ்ளோ கேவலமா பேசினாங்க. ஏன் நம்ம கூப்பிட்டாலும் வரும்டானு சொல்லி தப்பா நடக்க ஆரம்பிச்சாங்க. அவனுக்கு மட்டும் வாங்கிக் கொடுத்தியா? உனக்கு எத்தனை புருஷன் இருக்கான். உனக்கு பார்க்குறவன்லா புருஷன்தான்னு அசிங்கமா பேசினாங்க. ரொம்ப மன உளைச்சலாயிருச்சு…” கந்துவட்டிக் கும்பல் தொடுத்த உளவியல் தொந்தரவுகளை சகிக்க முடியாமல், எலிபேஸ்ட்டை விழுங்கி உயிருக்குப் போராடிய நிலையில் 36 வயதான பாத்திமா பீவி கொடுத்த மரண வாக்குமூலம் இவை.

புகார் கடிதம்
புகார் கடிதம்

ஏழாம் வகுப்பு படிக்கும் மகள்; ஒன்பதாம் வகுப்பு பயிலும் மகன்; பேக்கரி ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்யும் கணவர் ஜெய்லானி ஆகியோரை தவிக்கவிட்டு பரிதாபமாக இறந்துபோனார், பாத்திமா பீவி. மகனும் மகளும் விடுதியில் தங்கிப்பயில, கணவர் ஜெய்லானியும் நாமக்கல்லில் தங்கியிருந்து வேலை செய்ய, கரூரில் தனியாளாக டெக்ஸ் வேலைக்குச் சென்ற குடும்பப் பெண்மணிதான் பாத்திமா பீவி.

- Advertisement -

- Advertisement -

பூர்வீகம் திருச்சி என்றாலும், பிழைக்கச் சென்ற இடத்தில் குடும்ப நண்பர்களாகப் பழகிய ஷாகுல் தம்பதியினரின் மீது இரக்கப்பட்டு, அவர்களுக்காக இவர்களது ஆதார் அடையாள அட்டையைக் காட்டி தனியார் பைனான்ஸில் கடன் பெற்று கலர் டி.வி. வாங்கிக் கொடுத்ததற்காக, அநியாயமாக ஓர் உயிர் பறிபோனதுதான் மிச்சம்.

முதல் மூன்று தவணைகளை முறையாகக் கட்டிய ஷாகுல், தொடர்ந்து தவணையைக் கட்டாததோடு, மனைவியுடனும் சேர்ந்துவாழாமல் சென்றுவிட, கடனைக் கட்ட வேண்டிய பொறுப்பு பாத்திமா பீவி குடும்பத்தின் மீது விழுகிறது.
புருசன் – பொண்டாட்டி இருவரின் வருமாணமும் பத்தாமல், இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் நிலையில், பாத்திமா பீவிக்கு நிச்சயம் இது பெரும்சுமைதான். ஆனாலும், முடிந்தவரை எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமாக கட்டி கடனைத் தீர்த்துவிடுகிறோம் என்றேதான் கெஞ்சியிருக்கிறார்கள், கந்துவட்டிக் காரர்களிடம்.

மரண வாக்குமூலம் – வீடியோ லிங்

புது புது எண்களிலிருந்து தொடர்ச்சியான தொலைபேசி தொந்தரவுகள், குடியிருக்கும் பகுதிக்கே நேரில் வந்து பலர் பார்க்க அசிங்கமாகவும் அடாவடியாகவும் பேசுவது என கந்துவட்டிக்கும்பலின் தொல்லை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில்தான், பக்கத்துவீட்டுக்காரர் செந்தில் என்பவரின் உதவியோடு அவருக்குத் தெரிந்த பைனான்ஸ் நிறுவனம் ஒன்றிலிருந்து புதிதாக கடன் வாங்கி, டார்ச்சராக மாறியிருக்கும் பழைய கடனை அடைக்க முடிவெடுத்திருக்கிறார், பாத்திமா பீவி.

கடன் வாங்க சென்ற இடத்தில், ”இவளும் இவ புருஷனும் சரியான பிராடு. ஏற்கெனவே, டி.வி. வாங்க லோன் வாங்கிட்டு ஒழுங்கா கட்டாத நாயி, எங்களை ஏமாத்தி புதுசா கடன் வாங்க வந்திருக்கிறியா?”னு பாத்திமா பீவியை சுற்றி வளைத்திருக்கின்றனர், அலுவலகத்தில் இருந்த அடியாட்கள் கணக்கிலான வட்டி வசூலிக்கும் எட்டு பணியாளர்கள்.

கடைசி வரை நின்று போராடியவர்கள்
கடைசி வரை நின்று போராடியவர்கள்

தட்டிக்கேட்ட செந்திலை, “நீ என்ன இவளை வச்சிருக்கியா?”னு அசிங்கமாகப் பேசி அங்கிருந்து விரட்டியடித்திருக்கின்றனர். ஜனவரி-11 அன்று மாலை 4 மணி முதலாக இரவு 9 மணி வரையில், பைனான்ஸ் உரிமையாளர் உள்ளிட்டு எட்டு பேர் கொண்ட கந்துவட்டிக் கும்பல் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு அசிங்கமான வார்த்தைகளால் பாத்திமா பீவியை திட்டியிருக்கின்றனர். அவமானப்படுத்தியிருக்கின்றனர். அவரை அலுவலகத்தில் வைத்துக்கொண்டே, அவரது வீட்டிற்கு ஆட்களை அனுப்பி டி.வி.யை திருடிச்சென்றிருக்கின்றனர்.

“ஷாகுலுக்கு டி.வி வாங்குறதுக்காக கடன் கொடுத்தது கந்தன் பைனான்ஸ். கடன் வாங்கித் தருகிறேன் என்று செந்தில் கூட்டிச் சென்றது, மயில் தோகை பைனான்ஸ்-சுக்கு. இது ரெண்டுக்கும் ஓனர் ஒருத்தவங்கதான். ரொம்ப அசிங்கமா பேசிட்டாங்க. வீடு புகுந்து டி.வி.யை தூக்கிக்கிட்டாங்க. பொங்கலுக்கு கவர்மெண்டு கொடுத்த ஆயிரம் ரூபாயையும் புடுங்கிட்டு போயிட்டாங்க. ரொம்ப மன உளைச்சலா இருக்குனு எனக்கு போன் பண்ணி புலம்பினா. நானும் தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி அன்னைக்கு நைட்டே டவுன்ஸ்டேஷன்ல புகார் கொடுக்க சொன்னேன்.

அவங்க போனப்போ ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர் இல்லாததால, காலையில வர சொல்லிட்டாங்க. மறுநாள் காலையில என் பொண்டாட்டி போலீஸ் ஸ்டேஷன் போகலை. திரும்ம 12-ந்தேதி நைட்டு போனப்ப, கம்ப்ளயிண்ட் காப்பிய மட்டும் வாங்கிட்டு பைனான்ஸ் கம்பெனி காரனுக்கு போலீசு போன் பன்னியிருக்காங்க. அவங்க போன எடுக்கலனு சொல்லி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. சரி திரும்ப பிரச்சினை பன்னினா பாத்துக்கலானு என் பொண்டாட்டியும் வந்துட்டா. அப்புறம் பொங்கல் லீவுனு ஒரு வாரம் போச்சு. பொங்கல் முடிஞ்சு நானும் வேலைக்கு வந்துட்டேன். திரும்பவும் வீட்டுக்கே வந்து பிரச்சினை பண்ணியிருக்காங்க. தகாத வார்த்தையெல்லாம் பேசியிருக்காங்க. அவங்க பேசின பேச்சை பொறுக்க முடியாமத்தான் இப்படி செஞ்சிக்கிட்டா” என உடைந்து அழுகிறார், கணவர் ஜெய்லானி.

கணவர் ஜெய்லானி.
கணவர் ஜெய்லானி.

”கந்தன் பைனான்ஸ், மஹா பைனான்ஸ், மயில் தோகை பைனான்ஸ் இந்த மூனு பைனான்ஸுக்கும் ஒரே ஓனர்தான். இவங்க கொஞ்சம் அடாவடியாகத்தான் நடந்துப்பாங்க. வசூலுக்கு வர்றவங்கள பார்த்தாலே தெரியும் அக்யூஸ்டு மாதிரிதான் இருப்பாங்க.” என்கிறார், உடன் இருந்த நண்பர் ஒருவர்.

”கரூர்ல கந்துவட்டி பிரச்சினைங்கிறது ரொம்ப காலமா இருக்கிற ஒன்னு. ஒரு பொண்ணு கம்ப்ளையிண்டோட ஸ்டேஷனுக்கு வந்த அன்னைக்கே முறையா விசாரிச்சி அந்த பைனான்ஸ் கம்பெனி ஆளுங்கள எச்சரிச்சிருந்தா, இந்நேரம் இந்த உயிர் போயிருக்காது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலை. இப்பவும் நாங்கெல்லாம் சேர்ந்து பிரேதத்தை வாங்க மாட்டோம்னு போராடின பிறகுதான் போலீசார் நடவடிக்கையே எடுக்கிறாங்க. பாத்திமா பீவிக்கு ஏற்பட்டது போல அடுத்து இன்னொரு பெண்ணுக்கு இந்த கொடுமை நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் போராடுகிறோம்.” என்கிறார், உங்கள் தோழன் அறக்கட்டளையைச் சேர்ந்த அப்துல் ரஹீம்.

தோழன் அறக்கட்டளையைச் சேர்ந்த அப்துல் ரஹீம்.
தோழன் அறக்கட்டளையைச் சேர்ந்த அப்துல் ரஹீம்.

பாத்திமாபீவி விவகாரத்தில் கரூர் போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி. மனோகர் அவர்களிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “நாங்கள் சட்டப்படியான நடவடிக்கைகளை எந்தவித பாரபட்சமுமின்றி மேற்கொண்டு வருகிறோம். இதுவரை மூன்று குற்றவாளிகளை கைது செய்திருக்கிறோம். கூடுதல் விவரங்களை இன்ஸ்பெக்டரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.” என்றார்.

“ஜன-11 அன்னைக்கு ஸ்டேஷனுக்கு வந்துட்டு போயிருக்காங்க. புகார் எதுவும் கொடுக்கல. அப்படியும், அவங்க சொன்னத வச்சி ஸ்டேஷனுக்கு கூப்பிட்டதுக்கு, அவங்க வரலை. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, பைனான்ஸ் நிறுவன உரிமையாளர், மேனேஜர், பணியாளர் ஆகிய மூவரை கைது செய்திருக்கிறோம். தலைமறைவானவர்களை தேடி வருகிறோம். நாங்கள் எங்களது பணியை சட்டப்படி செய்து வருகிறோம்.” என்கிறார், கரூர் டவுன்ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெகன்னாதன்.“கரூர்ல கந்துவட்டி அட்டூழியங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடிட்டுதான் இருக்கிறோம். போலீசு உரிய நடவடிக்கை எடுத்தா இந்த பிரச்சினையே இல்லை. விக்ரமன்னு ஒரு எஸ்.பி. வந்தாரு. கரூர்ல இருக்க எல்லா பைனான்ஸ் கம்பெனி காரங்களையும் கூப்பிட்டு கூட்டம் போட்டாரு. லைசன்ஸ் வாங்கி பைனான்ஸ் பன்றதுனா பன்னுங்க. இல்லீகலா பைனான்ஸ் விட்டா, கடுமையாக நடவடிக்கை எடுப்பேனு ஓப்பனா சொன்னாரு. வெறும் 80 நாள்கூட அவர டியூட்டி பார்க்க விடலை. டிரான்ஸ்பர்ல அனுப்பி வச்சிட்டாங்க.

4 bismi svs

கரூர்ல குறைஞ்சது குறைஞ்சது ஆயிரம் பைனான்ஸ் கம்பெனியாவது இருக்கும். எல்லாமே இதுமாதிரிதான். பலபேரு உயிருக்குப்பயந்துகிட்டு வெளிய சொல்றது இல்லை. இவங்க டார்ச்சர் தாங்காம போலீஸ்ல கம்ப்ளையிண்ட் கொடுத்தாலும் போலீசார் முறையா விசாரிக்கறதும் இல்லை. பத்தாயிரம் ரூபா வாங்கினா, பத்து நாளைக்கு வட்டி மட்டுமே ஆயிரம் கட்டனும். 2019-இல் 10,000 வாங்கினவன் இன்னைக்கு வரைக்கும் மாசம் 3000 வட்டி கட்டிகிட்டி இருக்கான்.

பாத்திமா பீவி - மகன்
பாத்திமா பீவி – மகன்

கந்தன் பைனான்ஸ், மயில் தோகை பைனான்ஸ் ரெண்டுக்கும் ஓனர் சரவணமூர்த்தி, சசிக்குமார். பெரும்பாலும் சொந்தக் காரங்களா இருப்பாங்க. இல்லைன்னாலும் ஒரு பைனான்ஸ் நடத்துறவங்க இன்னொரு பைனான்ஸ்ல பார்ட்னரா இருப்பாங்க. பாத்திமா பீவியை மிரட்டின விவகாரத்துல சம்பந்தப்பட்ட சசிக்குமார் தலைமறைவாகிவிட்டார். இப்போ அவரோட அப்பாவை அரெஸ்ட் காட்டியிருக்காங்க.

கந்துவட்டி காரன் பார்க்கிற வேலையை, இப்போ கரூரில் மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகளும் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. தெருவில இருக்கிற பொம்பளைங்க பத்து பேர வச்சி இவங்களே குழுனு உருவாக்கி கடனும் கொடுத்திடுறாங்க. அதுல ஒரு ஆள் கட்டலைன்னாலும், மிச்சம் இருக்க 9 பேருகிட்ட மிரட்டி வசூலிச்சிடுறாங்க. பதிவு செய்யப்பட்ட பைனான்ஸ்-னா அதிகபட்சம் 2.10 பைசாதான் வட்டி வசூலிக்கனும். வரவு – செலவு பேங்க் டிரான்ஸ்சேக்சனா இருக்கனும். மகளிர் சுய உதவிக்குழுனு சொல்லிட்டி 10 வட்டி, 12 வட்டி வரைக்கும்கூட வசூலிச்சிட்டு இருக்காங்க.

தவணை பணம் ஒழுங்கா கட்டலைனா, விடியகாலை 5 மணிக்கே அவன் தூங்கி எழுந்திருக்கிறதுக்கு முன்னாடியே வந்து ஆள தூக்கிட்டு போயி மிரட்டுறாங்க. இதுமாதிரி விவகாரங்களில் கந்துவட்டி தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதும் கிடையாது. குறைந்தபட்சம், கம்ப்ளையிண்ட் கொடுத்தா சி.எஸ்.ஆர்.கூட கொடுக்க மாட்றாங்க. அதுக்கே மூனு, நாளு நாள் அலைய வேண்டியிருக்கு. போலீசார்தான் இதுல நடவடிக்கை எடுக்கனும்.” என்கிறார், கந்துவட்டிக்கு எதிரான கூட்டமைப்பைச் சேர்ந்த சண்முகம்.

”கந்துவட்டி” கரூரின் அடையாளமா அவமானமா
”கந்துவட்டி” கரூரின் அடையாளமா அவமானமா

“சரியா ஒரு மாசத்துக்கு முன்னதான், தாலிப்பட்டினு ஒரு ஊர்ல புருஷன் வாங்குன கடனுக்கு ரோட்ல போயிட்டிருந்த அவரோட மனைவியை இழுத்திட்டு போயிருக்காங்க. பைனான்ஸ் ஆபீஸ்ல வச்சி அசிங்கமா பேசியிருக்காங்க. சுத்தி பத்து ஆம்பிளைங்களா நின்னுகிட்டு பேண்ட்டை கழட்டுனு சொல்லி ரொம்ப அருவெறுக்கத்தக்க வகையில் அந்தப் பெண்ணை நடத்தியிருக்காங்க. அதுல ஒருத்தர் அந்த பொண்ணு மேல இரக்கப்பட்டு தப்பி ஓடிவிடுமாறு துரத்திவிட்டிருக்கிறார். உடல் அளவிலும் மனரீதியிலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், மருத்துவமனையில் அட்மிட்டாகி எஸ்.பி. ஆபிசிலும் புகார் கொடுத்திருக்கிறார்.

இதுபோன்று கரூரில் நிறைய சம்பவங்களை சொல்லலாம். இது போலீசின் ஆதரவோடு நடப்பதால், போராடும் இயக்கங்களும் மக்களும் இணைந்தால் மட்டுமே நீதி கிடைக்கும். கொட்டம் அடங்கும்.” என கொதிக்கிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் கரூர்  மாவட்ட செயலர் சக்திவேல். ”ஹெச்.டி.எஃப்.சி., பஜாஜ் பின்சர்வ் மாதிரி பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக, கரூரில் லோக்கல் பைனான்ஸ் நிறுவனங்களும் தவணை முறையில் ஹோம் அப்ளையன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவதற்கும் பைனான்ஸ் செய்ய துவங்கிவிட்டார்கள்” என்கிறார், கரூரைச் சேர்ந்த மோகன்.

“டி.வி.யோ, ஃபோனோ எடுக்க போனோம்னா. பஜாஜ் பைனான்ஸ்-ஆ லோக்கல் பைனான்ஸானுதான் முதல்ல கேட்பாங்க. போதுமான சிபில் ஸ்கோர், டாகுமெண்ட் எல்லாம் சரியா இல்லைனு தெரிஞ்சா லோக்கல் பைனான்ஸுக்கும் அவங்களே அரேஞ்ச் பண்ணுவாங்க.

மரண - வாக்குமூலம்
மரண – வாக்குமூலம்

அவங்களுக்குனு தனியா வாட்சப் குரூப் இருக்கு. அதுல, நம்ம போட்டோ, ஆதார் கார்ட போட்டு விடுவாங்க. இந்த ஆதார் கார்ட வச்சி வேற எங்கேயும் பைனான்ஸ் வாங்கியிருக்கானா? ஒழுங்கா கட்டியிருக்கானானு செக் பண்ணுவாங்க. வேற எங்கேயும் வாங்கல. இல்லை, ஏற்கெனவே கடன் வாங்கியிருந்தாலும் ஒழுங்கா கட்டியிருக்கானு கன்பார்ம் பன்னிட்டுதான் பைனான்ஸ் கொடுப்பாங்க.
மாசம் இவ்ளோ கட்டனும்னு சொல்லுவாங்க. மாசம் மாசம் ஷோரூம்-க்கே போயிட்டு சரியா கட்டிட்டா பிரச்சினை இல்லை. மூனு மாசம் பார்ப்பாங்க. ஒழுங்கா கட்டலைன்னா, கடன் கொடுத்த லோக்கல் பைனான்ஸ் ஆளுங்க வீடு தேடி வருவாங்க.
சில பைனான்ஸ் காரங்க, எந்த பொருளை எடுக்கிறோமோ, அந்த பொருளுக்குரிய பணத்தை அவங்களே கொடுத்து செட்டில் செய்திடுவாங்க. வட்டியோட சேர்த்து மாசா மாசம் நேரடியா அந்த பைனான்ஸ்காரங்க கிட்டேயே கட்டனும்.

கரூர்ல, ஒரு பைனான்ஸ்க்கு தெரியாம இன்னொரு பைனான்ஸ்ல கடன் வாங்கிட முடியாது. போனமாசம் எனக்குத் தெரிஞ்சு ஒரு அண்ணன் புதுசா கடன் வாங்க போயிருக்காரு. கடன்லாம் தாரேனு சொல்லி ஆபிஸ்க்கு வர சொல்லியிருக்காங்க. அங்க போனா, அவர் ஏற்கெனவே கடன் வாங்கி திரும்ப கட்டாத பைனான்ஸ் கம்பெனி ஆளுங்க பத்து பேரு ஒன்னா இருந்திருக்காங்க. அவரை அங்கேயே உக்கார வச்சி. அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லி. பணத்தை ரெடி பண்ணி கட்ட வச்சிட்டுதான் ஆள அனுப்பி விட்டிருக்காங்க.

பொதுவா, மாசம் மாசம் வட்டியோ, தவணையோ ஒழுங்கா கட்டிட்டா எதுவுமே சொல்ல மாட்டாங்க. ஒருநாள் தவறினாக்கூட, பிரஸ்ஸர் கொடுக்க ஆரம்பிச்சிருவாங்க. புது புது நெம்பர்ல இருந்து பேசுவாங்க. வீட்டுக்கு வருவேன்னு சொல்லுவாங்க. வேலை செய்ற இடத்துக்கு வந்து நிப்பாங்க. அவங்க கொடுக்கிற பிரஸ்ஸர்லயே, வேற ஒரு இடத்தில வாங்கியாச்சும் இவனுக்கு காச கொடுத்திடனும்ங்கிற மனநிலைக்கு கொண்டு போயிடுவாங்க.

கரூர் கந்து வட்டி கைதானவர்கள்
கரூர் கந்து வட்டி கைதானவர்கள்

முக்கியமாக, காசு வாங்கும்போதே குறைஞ்சது பத்து கையெழுத்தாவது வாங்கிடுவாங்க. வெற்று பேப்பர்ல, ப்ரோ நோட்டுல, ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டுன பேப்பர்லனு ஒரு செட்டா வச்சிருப்பாங்க. அதுல எதுலயும் என்ன தேதியில வாங்குனோம், எவ்வளவு வாங்குனோம்னு எந்த விவரமும் இருக்காது. வாங்கிறவன் பேரக்கூட எழுத மாட்டாங்க. கூடவே, ஜாமீனுக்கு ஒரு ஆளு, நம்ம போட்டோவையும் வாங்கி ஒட்டி வச்சிப்பாங்க. இது ஒன்னுக்குத்தான் பயப்பட மாதிரி ஆகும்.

முரண்டா பேசிட்டா, அவங்க இஷ்டத்துக்கு நீ இவ்ளோ கட்டணும்னு சொல்லிட்டா என்ன பன்றதுன்னு பயத்துலேயே, அவங்க என்ன பேசினாலும் கேட்டுத்தான் ஆகனும்னு போயிடுறாங்க. நம்ம வயித்து வலிக்கு காச வாங்கிட்டோம் எப்படியாது கட்டித் தொலைவோம்னுதான் ஒதுங்கி போயிடுறாங்க” என்கிறார், இதே கந்துவட்டிக் கும்பலின் பிடியிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத மோகன்.

”கரூர் ல நாங்கதான் ராஜா. நீ எந்த ஸ்டேஷன் வேனாலும் போ. இப்பவேகூட போ. எங்களை யாராலயும் எதுவும் பண்ண முடியாது”-னு தெருவில் நின்று கந்துவட்டிக்கும்பல் சவால் விட்டுச் சென்ற சற்று நேரத்தில்தான், எலிபேஸ்ட்-டை விழுங்கியிருக்கிறார் பாத்திமா பீவி! ”கந்துவட்டி” கரூரின் அடையாளமா? அவமானமா?

வீடியோ லிங்

– அங்குசம் புலனாய்வு குழு

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.