அங்குசம் பார்வையில் ‘லாரா’ திரைப்படம்
தயாரிப்பு : கார்த்திகேசன். டைரக்ஷன் : மணிமூர்த்தி. நடிகர்-நடிகைகள் : அசோக்குமார், கார்த்திகேசன், அனுஸ்ரேயா ராஜன், மேத்யூ வர்கீஸ், வெண்மதி, வர்ஷினி, பாலா, எஸ்.கே.பாபு, திலீப்குமார், இ.எஸ்.பிரதீப். ஒளிப்பதிவு : ஆர்.ஜே.ரவீன், இசை : ரகு ஸ்வரன், பி.ஆர்.ஓ. : சக்தி சரவணன்.
காரைக்காலில் உள்ள ஒரு கோவில் இரவு நேரத் திருவிழாவுடன் படம் ஆரம்பிக்கிறது. அங்கே திருவிழா குதூகுலத்துடன் நடந்து கொண்டிருக்க, கடற்கரையில் ஒரு இளம் பெண்ணை கொலை வெறியுடன் துரத்துகிறது ஒரு கும்பல். விடிந்தால்.. கடற்கரையோரம் ஒரு இளம் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்க, ஸ்பாட்டுக்கு வந்து விசாரணையை ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன் [ தயாரிப்பாளரே தான் ].
அதே ஏரியாவில் இருக்கும் நிரவி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தனது மனைவியைக் காணவில்லை என லாரன்ஸ் என்பவன் புகார் கொடுக்கிறான். இறந்துகிடந்த பெண்ணின் உடலை மார்ச்சுவரியில் போலீஸ் காட்ட, அது தனது மனைவி அல்ல என்கிறான் லாரன்ஸ். ஆனாலும் போலீசுக்கு அவன் மேல் நம்பிக்கையில்லை. இந்த நிலையில் தான், “லாரன்ஸே அவன் பொண்டாட்டியைக் கொலை பண்ணிட்டு, காணாமல் போனதாக நாடகமாடுகிறான். அதை நீங்களும் நம்புறீங்க” என ஒரு பெண் குரல், செல்போனில் போலீசிடம் தகவல் சொல்லி கட் பண்ணிவிடுகிறது.
இதனால் உஷாரான போலீஸ், அவனைக் கண்காணிக்கிறது. இதற்கிடையே கடற்கரையில் இருக்கும் சிசிடிவி ஃபுட்டேஜ்ஜைப் பார்த்து இரண்டு இளைஞர்களைத் தூக்கிவந்து விசாரிக்கிறது போலீஸ். அவர்களை விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
அந்த இளம் பெண்ணைக் கொன்றது யார்? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘லாரா’.
படத்தில் ஒரு கொலை தான் முக்கிய கதை என்றாலும், ஹவாலா பணம், ஆயுதக் கடத்தல், தீவிரவாதிகள், எம்.எல்.ஏ.மேத்யூ வர்கீஸ், கவுன்சிலர் ஒருவரின் காம வெறியாட்டம், லாராவாக நடித்திருக்கும் அனுஸ்ரேயா ராஜன் –அசோக்குமார் இவர்களுக்கிடையேயான லவ் எபிசோட், ஆதரவற்றோர் இல்லம் என பல கிளைக் கதைகள் திரைக்கதையில் வந்தாலும் ஒன்றுகொன்று கனெக்ஷனாவதை கரெக்டாக சொல்லியுள்ளார் டைரக்டர் மணிமூர்த்தி. அதே போல் ஒரே டிரஸ்ஸை [ மஞ்சள்-சிவப்பு சுடிதார் } மூன்று பெண்களை அணிய வைத்து, அதையும் கச்சிதமாக ஃப்ளாஷ்பேக்கில் மேட்ச் பண்ணிவிட்டார் டைரக்டர். ஆமா டைரக்டரே… காரைக்கால் பகுதியில் இவ்வளவு அப்பட்டமாவா விபச்சாரம் நடக்குது?
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படம் முழுவதும் வரும் இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன் போலீஸ் உடுப்பில் வாட்டசாட்டமாகத் தான் இருக்கிறார். என்ன ஒண்ணு அவர் நடப்பதும் விசாரிப்பதும் ஸ்லோமோஷன் எஃபெக்ட்டில் எடுத்த மாதிரி இருக்கு. மற்றபடி குறையொன்றும் இல்லை. இடைவேளைக்குப் பின்பு, படம் முடிய அரை மணி நேரம் இருக்கும் போது எண்ட்ரியாகிறார் அசோக்குமார். குறைந்த நேரம் என்றாலும் கவனிக்க வைக்கிறார், க்ளைமாக்ஸ் ட்விஸ்டுக்கு பயன்பட்டிருக்கிறார். அதே போல் வெண்மதி, வர்ஷினி கேரக்டர்களும் கவனிக்க வைக்கின்றன்.
த்ரில்லிங் எஃபெக்ட்டுக்கு தேவையானவற்றை கொடுத்திருக்கிறார்கள் கேமராமேன் ரவீனும் மியூசிக் டைரக்டர் ரகு ஸ்வரனும். ’சின்னப் படம் தானே’ என்ற அவநம்பிக்கையுடன் போனால், ஓரளவு நம்பிக்கை தருகிறது இந்த ‘லாரா’.
–மதுரை மாறன்.