விருதுநகரில் நகை திருட்டில் ஈடுபட்ட நபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்தவர் ராதகிருஷ்ணன் (65), இவர் சாத்தூர் அரசு பேருந்து பணி மனை அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 67 பவுன் தங்க நகை ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி தப்பி சென்றனர்.
![முத்துராமன்(49)](https://angusam.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-03-at-10.36.25-AM.jpeg)
இது குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த முத்துராமன்(49), ராமன்(43), ராஜீ(48), சம்பத்(48), சீனிவாசன்(50), தேவன்(44), வெங்கட்ராமன் (49), கிருஷ்ணன்(58), வெங்கட்ராமன் (59) ஆகிய 9 நபர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சாத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, வழக்கிலிருந்து ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகள் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தப்பிச் செல்லவே வழக்கு நிலுவையில் இருந்தது,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த வழக்கில் தொடர்புடைய 6 வது எதிரி முத்துராமன் வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நகை கொள்ளை ஈடுபட்டு, தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த போது, சாத்தூர் நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
வழக்கு சாத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி முத்துராமனுக்கு 17 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து சாத்தூர் சப் கோர்ட் நீதிபதி முத்து மகாராஜன் தீர்ப்பு வழங்கினார்.
— மாரீஸ்வரன்.