2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் !

பாஜகவுக்கு எதிராகச் சுமார் 400 இடங்களில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒன்றை வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்படுவார்கள் என்றும் காங்கிரஸ்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் தலைவர்

– முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நடந்து முடிந்த கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத தோல்வியைப் பாஜக பெற்றது. காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சியை அமைத்தது. இதற்குக் காரணம், பாஜக ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இராகுல்காந்தி நடத்திய பாரத் ஜோடா என்னும் நடைப்பயணம் ஆகும். பாஜகவின் தோல்வியால் உற்சாகம் அடைந்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகள் ஆளும் முதல்வர்களையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து வருகிறார்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

ராகுல்காந்தி
ராகுல்காந்தி
3

இதன் தொடர்ச்சியாக வரும் ஜூன் 23ஆம் நாள் பீகார் தலைநகர் பட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்குக் கட்சிகளின் தலைவர் மட்டுமே பங்குபெறவேண்டும் என்றும் பிரதிநிதிகளை அனுப்பக்கூடாது என்று நிதிஷ் கண்டிப்புடன் கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பட்னாவில் ஜூன் 23ஆம் நாள் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, இராகுல் திமுகவின் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் லாலு மகன் தேஜஸ்வி, காஷ்மீர் மாநாடு கட்சியின் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் மம்தா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.இராஜா, இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தராம் யெச்சூரி, சிவசேனாவின் உத்வ்தாக்ரே, தேசியவாதக் காங்கிரஸ் சரத்பவார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டின் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

வடகிழக்கு 7 மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

4

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத எதிர்க்கட்சிகள் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதாதளம், ஆந்திராவின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன், தெலுங்குதேசம் சந்திரபாபு நாயுடு, தெலுங்கனா ராஷ்ட்ரியச் சமிதியின் சந்திரசேகரராவ், தமிழ்நாட்டில் அதிமுக, ஒரிசா நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி மற்றும் தற்போதைய பாஜகவின் கூட்டணி கட்சிகளும் இதில் அடங்கும். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கனா ராஷ்ட்ரியச் சமிதியின் சந்திரசேகரராவ் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.  அவர்களும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு வருவதாக ஒப்புதலும் அளித்திருந்த நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் சந்திரசேகரராவ் இருவரையும் டெல்லிக்கு அழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதனால் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் பாஜகவை ஆதரிக்கமுடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நடந்து முடிந்த கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளம் 13% வாக்குவங்கியைத் தக்கவைத்துள்ளது. இந்தக் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டால் கர்நாடகத்தில் கணிசமான தொகுதிகளைப் பெறலாம் என்று பாஜக கணக்கு போடுகின்றது. ஒரிசாவின் நவீன் பட்நாயக் பாஜக கூட்டணியில் இல்லை. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கட்சிகளின் பட்டியலிலும் இல்லாமல் நடுநிலை வகிக்கின்றார். அதைப்போலவே மாயாவதியும் நடுநிலை வகிக்கின்றார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி உருவானால் அதற்கும் சிக்கல் இருக்கின்றன. இந்தச் சிக்கல்களை மனதில்கொண்டுதான் திரிணமூல் காங்கிரஸ் தலைவர், மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா,“மாநில கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் வலுவுடன் இருக்கும் இடங்களில் தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளை ஆதரிக்கவேண்டும். தேசியக் கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் ஆதரிக்கவேண்டும்” என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார். மம்தாவின் இந்த நிலைப்பாட்டிற்குக் காங்கிரஸ் கட்சி முழுஆதரவு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் பாஜகவுக்கு எதிராகச் சுமார் 400 இடங்களில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒன்றை வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்குச் சிக்கல் மிகுந்த மாநிலமாக மேற்கு வங்கமும், கேரளாவும் இருக்கும். காரணம் மேற்கு வங்கத்தில் மாநிலத்தில் மம்தா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு இருக்கவேண்டிய நிலை ஏற்படும். கேரளத்தில் கம்யூனிஸ்ட் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திருக்கவேண்டும் என்ற நிலை ஏற்படும். மகாராஷ்டிரத்தில் தேசியவாதக் காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் சமபலத்தில் உள்ளன. இங்கே பாஜகவுக்கு எதிராக இவை ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இப்படி இடியாப்பச் சிக்கல் நிறைந்த சூழ்நிலையில்தான் பாஜக தனக்கான கூட்டணியை உறுதி செய்ய எதிர்க்கட்சிகளிலிருந்து ஆதரவைப் பெற முயன்று கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சிகள் பாஜகவின் எதிர்ப்பில் உறுதியாக நின்று கூட்டணியைக் கட்டமைக்க எதிர்க்கட்சிகள் முயன்று கொண்டிருக்கின்றது. ஜூன் 23ஆம் நாள் பட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணிக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. காரணம் காங்கிரஸ் கட்சியைக் கொள்கை அடிப்படையில் விமர்சித்து வரும் மம்தா, அரவிந்த் கேஜ்ரிவால், கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குக் காங்கிரஸ் கட்சியை விடவும் ஒரு மாற்றுத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

மோடி - அமித்ஷா
மோடி – அமித்ஷா

இந்த நிலையில் இந்தியாவை ஆளும் பாஜகவுக்கும் தலைமை அமைச்சர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிவரும் கட்சி திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் என்பது மிகையில்லா உண்மையாகும். அதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்கவேண்டிய நிலையே ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் உள்ள நிதிஷ்குமார், “தான் தலைவராகவோ, பிரதமர் வேட்பாளராகவோ முன்னிறுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றும் பாஜகவைத் தோற்கடிக்கும் களப்பணியில் மட்டும் என்னை ஈடுபடுத்திக்கொள்வேன்” என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

பாஜக எதிர்ப்பில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நோக்கிக் கூட்டணித் தலைமை பொறுப்பு தேடி வரும் வாய்ப்பு உள்ளது. இந்தக் கூட்டணி தலைமையை ஏற்று, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து, மு.க.ஸ்டாலின் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா? காலம் பதில் சொல்லும்.

பெட்டி செய்தி

2024 நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களில் போட்டியிடும் எதிர்க்கட்சிளும் மாநிலங்களும்

தமிழ்நாடு – திமுக,
கேரளா – கம்யூனிஸ்ட்டு,
கர்நாடகம் – காங்கிரஸ்,
ஆந்திரா – காங்கிரஸ் (சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்தால்)
தெலுங்கனா – காங்கிரஸ் (சந்திரசேகரராவ் பாஜக கூட்டணியில் இருந்தால்)
புதுச்சேரி – காங்கிரஸ்,
கோவா – காங்கிரஸ்,
குஜராத் – காங்கிரஸ்+ஆம் ஆத்மி,
மகாராஷ்ரா – காங்கிரஸ்+தேசியவாத காங்கிரஸ்+சிவசேனா,
இராஜஸ்தான் – காங்கிரஸ்,
பஞ்சாப் – ஆம் ஆத்மி,
உத்தரபிரதேசம் – சமஜ்வாதி,
பீகார் – ஐக்கிய ஜனதா தளம்+ராஷ்ரிய ஜனதா தளம்,
ஹரியாணா – காங்கிரஸ்,
ஹிமாச்சல் பிரதேசம் – காங்கிரஸ்,
மத்திய பிரதேசம் – காங்கிரஸ்,
டில்லி – ஆம் ஆத்மி,
ஜம்மு-காஷ்மீர் – காங்கிரஸ்+தேசிய மாநாடு,
சத்தீஷ்கர் – காங்கிரஸ்,
ஜார்கண்ட் – முக்திமோச்சார்,
உத்தர்காண்ட் – காங்கிரஸ்,
மேற்கு வங்காளம் – திரிணமூல் காங்கிரஸ்,
வடகிழக்கு மாநிலங்கள் – காங்கிரஸ்,
யூனியன் பிரதேசங்கள் – காங்கிரஸ்,

 -ஆதவன் 

அங்குசம் இதழின்

பொறுப்பாசியர் 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.