தன்னாட்சி கல்லூரிகளின் கருத்துகள் கேட்டு தீர்வு காணப்படும் விளக்கம் கொடுத்த அமைச்சர்!
தன்னாட்சி கல்லூரிகளின் கருத்துகள் கேட்டு தீர்வு காணப்படும் விளக்கம் கொடுத்த அமைச்சர்!
“பல்கலைகழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமையை தமிழ்நாடு அரசு மதித்து அங்கீகரிக்கிறது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும். தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் தேவைக் கேற்ப தாங்கள் விரும்பும் பாடங்களைப் பாடத்திட்டமாக வைத்துக் கொள்ளலாம்.
பாடங்களுக்கிடையே இணைத்தன்மை இருப்பதற்காகவே இப்பாடத் திட்டத்தில் பகுதி 3 இல் உள்ள முக்கிய பாடங்கள் 75 சதவீதம் மட்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கருத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.
* பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
* ஆசிரியர்களின் பணிநிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக் கப்பட்டுள்ளது.
* முக்கியப் பாடங்களையும் விருப்பப் பாடங்களையும் செய்முறை பயிற்சிகளையும் பருவங்களுக்கிடையே மாற்றிக் கொள்ளலாம்.
* பல்கலைக்கழகங்களும், தன்னாட்சி கல்லூரிகளும், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதிப்பீடுகளில் மாற்றங்கள் செய்து கொள்ள உரிமை உண்டு. அவர்களின் தன்னாட்சி உரிமைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது.
மாதிரி பாடத்திட்டம் தொடர்பாக, அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் 02.08.2023 அன்று மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாமல் அவர்களின் கருத்துகள் கேட்டு தீர்வு காணப்படும்.” என உயர்கல்வித்துறை சார்பில் அத்துறையின் அமைச்சர் பொன்முடி அறிக்கை வாயிலாக விளக்கமளித்திருக்கிறார்.