போகலாம் … ரைட் … கண்டக்டர் – டிரைவர் டபுள் டியூட்டி பார்த்த திமுக எம்எல்ஏ !
சம்பிரதாயமான கொடியசைத்து வைப்பதோடு செல்லாமல் தொகுதி எம்.எல்.ஏ. கண்டக்டராகவும் ஓட்டுநராகவும் மாறி பேருந்து சேவையைத் தொடங்கிவைத்த நிகழ்வு ...
போகலாம் … ரைட் … கண்டக்டர் – டிரைவர் டபுள் டியூட்டி பார்த்த திமுக எம்எல்ஏ !
டிக்கெட் … டிக்கெட் … இந்தாம்மா டிக்கெட். வேறு யாருக்கு வேணும் டிக்கெட் இது கட்டணமில்லா பேருந்துங்க. இலவச டிக்கெட் வாங்கிக்கங்க என பேருந்தில் பயணம் செய்த பெண்களை தேடித் தேடி மகளிர் கட்டணமில்லா பேருந்து சீட்டை கொடுத்து கண்டக்டராகவே மாறிய எம்எல்ஏ.
தமிழகத்தில் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயக்கப்படும் மகளிருக்கான இலவச பேருந்து சேவை மலை பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு சமீபத்தில் நீலகிரி மலையில் கட்டணமில்லா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை 14 பெரிய கிராமங்கள் உள்ளடக்கிய ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இம்மலையில் இருந்து மருத்துவம், மற்றும் அரசு அலுவலகம் என அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக மலைவாழ் பெண்கள் திருப்பத்தூர் நகர பகுதிக்கு சென்று வருவது வழக்கம். இம்மக்கள் சென்று வர, 3 அரசுப் பேருந்துகள் இயங்கி வருகிறது. எங்களுக்கும் கட்டணமில்லா பேருந்து வசதி வேண்டும் என்பது ஏலகிரி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், ஏலகிரிமலை அத்தனாவூரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பத்தூர் வரை மகளிருக்கான இலவச பேருந்து சேவை மார்ச் 14 அன்று துவங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலந்து கொண்டு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கட்டணமில்லா பேருந்தில் பெண் பயணிகள் நிறைந்திருந்தனர். இதை பார்த்த எம்எல்ஏ தேவராஜ் அசைத்து வைத்த கொடியை அப்படியே போட்டுவிட்டு, பயணிகளோடு பயணியாக பேருந்தில் ஏறினார். கூடவே, நடத்துனரிடமிருந்து டிக்கெட்டுகளையும் பணப்பையையும் வம்படியாக பிடுங்கியவர் கண்டக்டராகவே மாறி பயணிகளுக்கு டிக்கெட் விநியோகிக்கத் தொடங்கினார். அதோடு நில்லாமல், நேராக ஓட்டுநரிடம் சென்றவர், பேருந்தையும் சிறிது தூரம் இயக்கிவிட்டுதான் கீழே இறங்கினார்.
தங்களது நீண்டகால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியோடு, சம்பிரதாயமான கொடியசைத்து வைப்பதோடு செல்லாமல் தொகுதி எம்.எல்.ஏ. கண்டக்டராகவும் ஓட்டுநராகவும் மாறி பேருந்து சேவையைத் தொடங்கிவைத்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மணிகண்டன்