தமிழ்நாடு சட்டமன்றம் புதிய கூட்டத்தொடரில் இசைக்கப்படாத தேசியகீதம் ! ஆளுநர் வெளிநடப்பு !
2025 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர், அமைச்சர்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வருகை தந்து இருந்தனர்.
காலை 9.15 மணிக்கு சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றார். கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த அதிமுகவினர் யார் அந்த சார்? என்ற பேட்ச் அணிந்து முழக்கமிட்டபடி வருகை தந்து இருந்தனர்.
காலை 9.30 மணிக்கு அவை தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பிறகு ஆளுநர் உரை நிகழ்த்த இருந்த நிலையில் அரசின் உரையை நிகழ்த்தாமலே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையை விட்டு வெளியேறினார். இதற்கிடையில் ஆளுநருக்கு எதிராக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். சட்டப்பேரவையின் உள் ஆளுநரை சூழ்ந்துகொண்டு கோஷம் எழுப்பிய நிலையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி வெளியேறியதையடுத்து அவைக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதன் பேரில் அதிமுகவினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
தேசிய கீதம் இசைக்காததால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது. அதில், “அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. சட்டப்பேரவையில் நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபு ஆகும். எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கடந்த முறையும் ஆளுநர் ரவி, அரசியல் விவகாரமாக ஆக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் வெளிநடப்பு செய்தபின்னர் பேரவைத் தலைவர் திரு.அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை 30 நிமிடத்தில் படித்து முடித்தார். பின்னர் அவை முன்னவர் துரைமுருகன், “ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் அரசின் உரையை வாசிப்பது என்பது மரபு. இந்த மரபை மீறி, உரை நிகழ்த்தாமல் சென்றிருப்பது தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதிக்கும் செயலாகும்” என்ற கண்டன தீர்மனம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,“ஆளுநர் அரசின் உரையை வாசிக்காமல் சென்றதன் மூலம் திராவிட மாடல் அரசின் சாதனைகளைச் சொல்லிவிடக்கூடாது என்றே வெளிநடப்பு செய்துள்ளார். இது சட்டப்பேரவையை அவமதிக்கும் இச்செயலுக்கு ஆளுநர் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று கூறினார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிசீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆளுநர் சட்டப்பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தியும் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது அரசியல் சாசனத்தை தமிழ்நாடு அரசு மீறிவிட்டது. தேசிய கீதம் இசைப்பது என்பது செய்யக்கூடாத செயலா?” என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவை மரபின்படி சட்டமன்ற நிகழ்வின் இறுதியில் தேசியகீதம் இசைக்கப்பட்டுள்ளதே” என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வானதிசீனிவாசன் நழுவி சென்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது அரசியல் சாசனத்தை மீறிய செயல் என்று ஆளுநர் தரப்பு தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடியைத் தரமுயல்கிறதா? இது குறித்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இதுவரை விளக்கங்கள் வெளியிடப்படவில்லை. ஒன்றிய அரசு எடுக்கும் நிலைபாட்டிற்குத் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பது விரைவில் தெரிந்துவிடும்.
— ஆதவன்.