அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறார் ! சூடு பறக்கும் தமிழ்நாடு அரசியல் களம் !
கடந்த வாரத்தில் டெல்லி சென்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,“இந்தியா முழுமையும் உள்ள எல்லா மாநிலத் தலைவர்களையும் மாற்றம் செய்ய அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முடிவு செய்துள்ளார். அந்தமான் நிக்கேபார் தீவுகளுக்கான மாநிலத் தலைவரைத் தேர்வு செய்ய மேலிடப் பார்வையாளராக நான் செல்ல இருக்கிறேன். தற்போது டெல்லி சென்று ஜே.பி.நட்டாவைச் சந்தித்து மாநில நிலவரங்களை எடுத்துக்கூற இருக்கிறேன்” என்று கூறினார்.
05.01.2025ஆம் நாள் மாலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் “தமிழ்நாடு பாஜகவிற்கு இன்னும் இரண்டு நாள்களில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு பாஜகவிற்குப் புதிய தலைவர்கள் பட்டியலில் தமிழிசை, வானதிசீனிவாசன், நயினார் நகேந்திரன், பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. தமிழ்நாடு பாஜகவிற்குப் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவதன் பின்னணியில், முறிந்துபோன பாஜக – அதிமுக கூட்டணியை மீண்டும் துளிர்க்கச் செய்வதுதான் முதன்மை நோக்கம் என்று கூறப்படுகின்றது.
தலைமை மாற்றம் ஏற்பட்டு, அதிமுகவோடு பாஜக 2026இல் கூட்டணி அமைக்கப்படுமா? என்று தற்போதைய பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியளார்கள் கேட்டபோது,“பாஜக-அதிமுக இடையே கூட்டணி அமைய நான் எப்போதும் தடையாக இருந்ததில்லையே. தேசிய தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் மட்டும் அல்ல, யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும். நான் தலைவராக இருப்பதால்தான் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்படவில்லை என்பதை ஏற்கமுடியாது” என்று நீண்ட விளக்கம் தந்தார்.
அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம் ஊடக விவாதம் ஒன்றில் பேசும்போது,“அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையின் பொறுப்பற்ற பேச்சுகளும், அண்ணா, ஜெயலலிதா குறித்த தேவையற்ற விமர்சனங்களும்தான் அடிப்படைக் காரணம். கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக இதுவரை தேசிய தலைமையையே, ஒன்றிய அரசையோ கடுமையாக விமர்சனம் செய்தது, கண்டனம் தெரிவித்தது என்று இதுவரை செய்திகள் இல்லை. அதிமுகவுக்கு அண்ணாமலையின் தலைமையின் மீதுமட்டுமே கோபம். அண்ணாமலையை நீக்கிவிட்டால் அதிமுக-பாஜக கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அதிமுக மேல்மட்டத் தலைவர்களில் சிலர் பாஜகவோடு கூட்டணியில் இருந்தால் கௌரவமான இடங்களைச் சட்டமன்றத் தேர்தலில் பெறலாம். இல்லையென்றால் மிகமோசமான படுதோல்வியை அதிமுக சந்திக்கும் என்று வெளிப்படையாகவே பேசிவருகிறார்கள். நிலைமை இப்படியிருக்க, பாஜக மாநிலத் தலைமை பொறுப்பிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டால் அவர் புதிய கட்சியைத் தொடங்குவார். நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க முயற்சிகளை மேற்கொள்வார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்ட திருச்சி சூர்யா, சமூக ஊடகங்களில் பேசும்போது, “அண்ணாமலை கோடிகோடியாய் பணத்தைக் குவித்து வைத்துள்ளார். அந்தப் பணம் எப்படி அவருக்கு வந்தது என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன். கோடிகோடியாய் குவித்து வைத்துள்ள பணம் இருப்பதால் அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி விரைவில் புதிய கட்சியைத் தொடங்குவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை தரப்பிலிருந்து தராசு ஷ்யாம் மற்றும் திருச்சி சூர்யா கருத்தை மறுத்து இதுவரை எந்த மறுப்பு செய்தியை வெளியிடவில்லை. மாறாக அண்ணாமலை தரப்பு அமைதி காக்கின்றது. இதற்கிடையில், அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டால், அவர் டில்லியில் உள்ள தலைமையில் அவருக்குக் கட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. மோடியிடம் அண்ணாமலை ஒன்றிய அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பு கேட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சியான தகவல்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அண்ணாமலை மாநிலத் தலைமையிலிருந்து நீக்கம் செய்யப்படுவாரா? நீக்கம் செய்யப்பட்டால் புதிய மாநில கட்சியைத் தொடங்குவாரா? என்பதற்கான பதில் கிடைக்க கொஞ்சம் காலதாமதம் ஏற்படலாம். அதுவரைப் பொறுத்திருப்போம்.
— ஆதவன்.