தமிழக சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த வழக்கை தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

0

தமிழக சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த வழக்கை தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாத்து மேய்ப்பதற்காக 5 சிறுமிகளைப் பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு நிலையில், தற்போது மேலும் இரண்டு நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் 16 வயதுடைய சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இவ்வழக்கை விசாரிக்கத் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாகத் தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் சிறுமிகள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த வழக்கு விசாரணை குறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்ஷா கோதரா மற்றும் இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.


இதுகுறித்து தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறுகையில், “இந்த வழக்கைப் பொறுத்தவரை நாடு முழுவதும் ஒரு கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகவே இந்த வழக்கைத் தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் தாமாகவே நேரடியாக முன்வந்து விசாரணை செய்கிறது. இதில், முதற்கட்டமாகக் காவல் துறையினர் இதுவரையில் எந்த அளவிற்கு இந்த வழக்கை விசாரணை செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்ததாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பும், பராமரிப்பும் கொடுக்க வேண்டும். இறுதியாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்கலாம் என இந்த மூன்று பணிகளையும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்த வழக்கை விசாரித்ததில், வந்தவாசியிலிருந்து வந்த இந்த குழந்தைகளை வேலைக்காக ரூபாய் 3000க்கு விற்றுள்ளனர். இதையடுத்து இதனைப் புதுச்சேரி குழந்தைகள் நலக் குழு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், இந்த குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்,” என்றார்‌ அவர்.

“தற்போது இந்த குழந்தைகள் அனைவரும் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றனர். காவல் துறை விசாரணைப்படி இந்த வழக்கு நல்ல படியாகச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள். பொதுவாக உத்திர பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடந்தால் தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற வழிமுறைகளை, புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்ஷா கோதரா அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அந்த வழிமுறைகள் 100 சதவீதம் வெற்றியைக் கொடுக்கும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

 

இந்த வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையத் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூன்று விதமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான நிதி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது,” எனக் தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பாண்டிச்சேரியில் தமிழக சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த காமகொடூரர்கள்:

-ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.