
நீட் – மதிப்பீட்டு முறையா ? நீட் – 2024 கேள்வித்தாள் முன் வைக்கும் கல்வியியல் சவால்கள் !
நீட் – மதிப்பீட்டு முறையா ? நீட் – 2024 கேள்வித்தாள் முன் வைக்கும் கல்வியியல் சவால்கள் !
“நீட் 2024 கேள்வித் தாள் முன் வைக்கும் கல்வியியல் சவால்கள்” எனும் பொருண்மையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் சார்பில், கடந்த 07.01.2025 அன்று கோயம்புத்தூர், பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல், தமிழ்க் கல்லூரி அரங்கில் கோயம்புத்தூர் கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது.
பேரூர் ஆதினம் மற்றும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல், தமிழ்க் கல்லூரி மேதகு தலைவர், திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் அருளுரையுடன், தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் மற்றும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல், தமிழ்க் கல்லூரி,மாண்புசார் செயலர், முனைவர் சி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல், தமிழ்க் கல்லூரி முதவ்வர் முனைவர் சு. சேதுராசன் அவர்களின் வாழ்த்துரை யுடன் திருமிகு செ. துரைசாமி, புலவர் கா. ச. அப்பாவு, திருமிகு விசய சண்முகம், கவிஞர் இல. மணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கருத்தயங்கினை புலவர் பூ. அ. இரவீந்திரன் அவர்கள் தொகுத்தளித்தார்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் கோயம்புத்தூர் மாவட்டச் செயலாளர் திரு. வீ. தெய்வேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் திரு. ச. சுப்பிரமணியம் அவர்கள் நன்றியுரையாற்றினார். ஸ்டெம் பயிற்றுநர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் முனைவர் கு. இரவிக்குமார் அவர்கள் நீட் 2024 கேள்வித்தாள் முன்வைக்கும் கல்வியியல் சவால்கள் குறித்து கருத்துரையாற்றினார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர், பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார்.

இக்கருத்தரங்கில் நீட் நடைமுறையை ரத்து செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
“நீட்” நடைமுறையை இரத்து செய்ய வேண்டும்; தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிட வேண்டும்:
“நீட்” நடைமுறை மருத்துவக் கல்விக்கும், மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் எந்த பயனும் அளிக்கவில்லை என்பதை கடந்த எட்டாண்டுகளாக நடந்துவரும் “நீட்” அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை நிரூபித்துள்ளது. பன்னாட்டு நிதி மூலதனத்துடன் மிகப் பெரும் வணிகச் சந்தையாக “நீட்” பயிற்சி மையங்கள் உருவெடுத்து உள்ளது. “நீட்” என்பது ஒரு மதிப்பீட்டு முறையே இல்லை என்பதை “நீட் 2024” கேள்வித்தாள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வயது, புரிந்து கொள்ளும் தன்மை, கற்றல் திறன், வெளிப்பாட்டை அறிந்துக் கொள்ளும் தன்மை ஆகியவை குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் “நீட்“ நடைமுறையில் கேட்கப்படும் கேள்விகள் அமைத்துள்ளன. பாட வல்லுநர் என்ற பெயரில் சிலர் கூடி, தேர்வர்களை அச்சுறுத்தும் வகையில் கேள்வித்தாள் தயாரிப்பதன் மூலம் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி, வணிகரீதியாக செயல்படும் பயிற்சிக் கூடங்களை நோக்கி குழந்தைப் பருவ மாணவர்களை தள்ளிவிடும் பணியை “நீட்” நடைமுறை செய்கிறது.
“நீட் 2024” கேள்வித்தாளில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய இயற்பியல் பாடக் கேள்வியானது பல விடைகளில் இருந்து ஒரு விடையை தேர்வு செய்யும் (MCQ) நடைமுறையில் கேட்கக்கூடாத கேள்வி என்பதையும் தாண்டி, இந்த கேள்வியும், இதற்கான விடையாக முடிவு செய்யப்பட்ட பதிலும் அறிவியல் கற்கும் முறையையே பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.
கேள்விக்கான பதில் என்ன என்பதில் மட்டுமே உச்சநீதிமன்றம் கவனம் செலுத்தியது. இந்த கேள்வியை மேல்நிலைப் பள்ளி படிப்பை மட்டுமே முடித்துள்ள மாணவர்களுக்கு கேட்கலாமா? அவர்களின் வயதிற்கேற்ற புரிதல் திறனை கருத்தில் எடுத்து கேள்வி தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்து எந்த கேள்வியையும் உச்ச நீதிமன்றம் எழுப்பவில்லை.
மேல்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கான கேள்வி குறித்த சர்ச்சை என்பதை தில்லி ஐஐடியும் உணர்ந்து பதிலளிக்கவில்லை. கேள்வியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது கூற்று (Second Statement) இரண்டு பரிணாமங்களைக் கொண்டது என்பதால் தில்லி ஐஐடி கூறிய பதிலை ஏற்க இயலாது.
மருத்துவக் கல்விக்கான மாணவர்கள் ஆர்வத்தையோ, அவர்களின் அறிவியல் கற்றல் திறனை வெளிப்படுத்தும் திறனையோ “நீட்” நடைமுறையில் கண்டறிய முடியவில்லை என்பதை எட்டாண்டுகளாக நடக்கும் “நீட்” உணர்த்துகிறது. அறிவியல் கல்வி மற்றும் அறிவியல் அணுகுமுறைக்கு எதிரானதாக “நீட்” நடைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. “நீட்” நடைமுறை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இயற்பியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் துறைகளில் விஞ்ஞானிகள் உருவாக வாய்ப்பில்லாத நிலை உருவாகும்.
“நீட்” போன்ற நடைமுறை இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உகந்தது அல்ல. “நீட்”, “கியூட்” போன்ற நடைமுறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
மேல்நிலைப் பள்ளிப் படிப்பை மதிப்பிடும் வாரியத் தேர்வு (Higher / Senior Secondary Board Exam Scores) மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
ஆய்வுகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஆழமான விவாதங்களின் விளைவாக தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றி அனுப்பிய “தமிழ்நாடு மருத்துவ இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கை சட்டம் 2021” க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மேற்கொண்டு காலதாமதமின்றி ஒன்றிய அரசுப் பெற்றுத் தர வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கோருகிறது.
தீர்மானம் 2:
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் விவாதம் நடத்த தமிழ்நாடு அரசும், சட்டமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும்:
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்டம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கு மசோதா தொடர்புடைய ஒன்றிய அமைச்சகங்கள் தந்த பதில்களை மாநில அரசிற்கு அனுப்பி, மாநில அரசின் பதிலையும் ஒன்றிய அரசு பெற்றுள்ளது.
இவற்றுக்கு பின்னரும் சட்டத்தை உரிய பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலத்தைக் கடத்துவது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசிற்கு இருக்கும் உரிமையை மறுக்கும் செயலாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 246 கீழ் மாநில சட்டமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்திற்கு கூறு 254(2) யின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர அரசமைப்புச் சட்டம் வழிவகுத்துள்ளது. ஒன்றிய அரசு குடியரசுத் தலைவருக்கு சட்டத்தை அனுப்பாமல் முடக்கி வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
தமிழ்நாடு சட்டப் பேரவை இயற்றி அனுப்பிய மாசோதாவின் இன்றைய நிலை என்ன என்பது குறித்த சிறப்பு விவாதத்தை சட்ட மன்றத்தில் அரசு நடத்த முன்வர வேண்டும்.
ஒன்றிய அரசு எழுப்பிய கேள்விகள், அதற்கு ஒன்றிய அரசின் மற்ற அமைச்சகங்கள் தந்த பதில்கள், மாநில அரசிடம் கோரப்பட்ட விளக்கங்கள், மாநில அரசு தந்துள்ள விளக்கங்கள், மாநில அரசின் விளக்கத்தைப் பெற்ற பின்னர் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் ஒன்றிய அரசு எடுக்காத சூழலில், மாநில அரசு மேற்கொள்ள உள்ள தொடர் நடவடிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் விவாதம் நடத்த சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.
வரும் 2025 – 2026 கல்வி ஆண்டில் நடைபெற வேண்டிய இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு இயற்றி அனுப்பியுள்ள சட்டத்தின் அடிப்படையில் நடப்பதை மாநில அரசும், சட்டமன்றமும் உறுதி செய்ய வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கோருகிறது.
தகவல்:
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.
இந்த தேர்வினால் நிறைய ஏழை மாணவர்களுக்கு பயன் உள்ளதே அது பிரின்ஸுக்கு பிடிக்கவில்லையா