அப்பாக்களுக்கு தீபாவளி, பொங்கல் வந்தால் சீர் என்கிற பெயரில் சீரழிவதுதான் வேலையா?
இதில் என்ன பெருமை இருக்கிறது? அப்பாக்களுக்கு தீபாவளி, பொங்கல் வந்தால் சீர் என்கிற பெயரில் சீரழிவதுதான் வேலையா?
வேலைக்குப் போய் சம்பாதிக்கும் அளவுக்கு கடன் உடன் வாங்கி கஷ்டப்பட்டு மகள்களை படிக்க வைத்து முன்னேற்றியதை விட அவர் வேறு என்ன ‘சீர்’ திருத்தம் செய்திருக்கவேண்டும்?
ஒவ்வொரு வருடமும் சீர் கொடுக்க வேண்டும் என்கிற தேவையில்லாத நெருக்கடிகளை வயதான பெற்றோருக்கு கொடுக்கும் பேரவலத்தை செய்தி ஆக்கிக் கொண்டாடவேண்டுமா?
அதுவும், 81 வயதில் ஒவ்வொரு வருடமும் அவர் தலையில் சுமந்துகொண்டு சைக்கிளில் மூச்சிறைக்க பயணித்துதான் மகள் மீதான பாசத்தை நிரூபிக்க வேண்டுமா?
கூடவே, செய்தியில் வரவேண்டும் என்கிற விளம்பர நோக்கத்தோடு நாலைந்து பேர் பைக்குகளில் பின் தொடருகிறார்கள். செய்தியாளரும் வீடியோகிராஃபரும் ஒரு வாகனத்தில் தொடர்கிறார்கள். ஒருமுறையாவது இவர்கள் அந்த கரும்புக்கட்டுகளின் சுமையை குறைத்திருக்கலாமே?
ஒவ்வொரு முறையும் அப்பா இப்படி மூச்சிறைக்க சைக்கிளில் கரும்புகளோடு கசப்புகளையும் சுமந்துகொண்டு வருகிறாரே என மகளாவது இனி இப்படி வேண்டாம் என தடுத்திருக்க வேண்டுமல்லவா? மருமகன் என்று சொல்லிக்கொள்பவராது தடுத்திருக்கலாமே?
கல்வியில், வேலையில், சமத்துவத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் சமூகத்தில் மீண்டும் இதுபோன்ற செய்திகள் பெண்களை பின்னோக்கித்தான் கொண்டுசெல்லுமே தவிர, முன்னோக்கி கொண்டு செல்லாது!
-வினிசர்பனா