மக்கள் அறியாத ‘மக்கள் கவிஞர்கள் !
மக்கள் அறியாத ‘மக்கள் கவிஞர்கள் ‘. –
தணிகைச்செல்வன் நேற்று (29.10.2024) மறைந்தார். அவரைப் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளை ஆங்காங்கு காணமுடிகிறது. மறைந்துபோகும் போதாவது நினைவுகூரப்படும் ஆறுதல் மக்கள் கவிஞர்கள் நிலை. தமிழ்ஒளி நூற்றாண்டு கொண்டாட தமிழகமெங்கும் போனபோது அந்தப் பெயரையே பெரும்பாலும் யாருமே அறிந்திருக்கவில்லை என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மை தெரிந்தது.
இன்குலாப் தீவிர இடதுசாரி என்று முத்திரை குத்தப்பட்டு பிற இடதுசாரிகளால் கூட கவனிக்கப்படாத கவிஞராக இருந்ததை நாமறிவோம். எனது கவிதை வாசிப்பின் தொடக்க காலங்களில் என்னை மிகவும் ஈர்த்த ஆசான்களில் ஒருவர் தணிகைச்செல்வன். எதுகையுடன் மோனையும் இணைந்து சந்தநயம் மேலோங்கிய அவரது அரங்கக் கவிதைகள் படித்து அத்தனை மதிப்பு அவர்மீது.
காவிரியைக் கடக்க ஓடங்கள் தேவையில்லை ஒட்டகங்கள் போதும் என்று தனது மறுவருகைக் கவிதையில் புதுக்கவிதையும் எழுதுபவராக வெளிவந்த அவர் தமிழ்த்தேசியராக வெளிப்பட்டபோது மார்க்சியர்களால் மறக்கப்பட்ட நிலை வந்தது. அவரும் அவர் போன்றவர்களும் ஜொலித்த அரங்கக் கவிதை வடிவம் மறைந்தபோது அந்த இடத்தைப் பட்டிமன்ற நகைச்சுப் புலிகள் கைப்பற்றிக் கொண்டன.
அவர்களுக்கு இருந்த நேரடி மக்கள் தொடர்பு வெளியும் அற்றுப் போனது. செம்மலர் தாமரை சிகரம் என்று சிலர் மட்டுமே அறிந்த இதழ்களில் எழுதுபவர்களின் பெயரைக்கூட வெளியிலிருப்போர் அறிவதில்லை. களப்பணியும் கவிப்பணியும் ஆற்றி அரசியல் உணர்வோடு அறிவுத்தெளிவோடு போராட்ட வாழ்வை வாழும் மனிதர்கள் மதிக்கப்படாத நிலத்தில் அரைகுறைகள் கொண்டாடப்படுவதும் அவர்களுக்காகவே வாழும் மனிதர்களை மக்கள்திரள் அறியாமல் போவதும் இயல்பாகவே நிகழ்கிறது. சின்னஒரு பெருமூச்சோடு விடைதருகிறேன். செவ்வணக்கம் தோழர்.
(முகநூலில் – கவிஞர் கோ.கலியமூர்த்தி)