புகுந்து விளையாடும் அரசியல் சாணக்யத்தனம் !

பிராமணர்களை வேறொரு சாதிக்காரர், தன்னை விட உயர்வாக நடத்தினால் அதைப் பிராமணர்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்வார்கள், அதிகாரத்தினாலோ, பதவி யாலோ, பணம் உள்ளிட்ட பிற செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னை விடத் தாழ்வாக நடத்தினால், அவர்களிடம் பணிந்து கூடப் போய்விடுவார்கள், ஆனால் நீயும், நானும் சமம்தான் என்று தனக்கிணையாக நடத்துவதை மட்டும் எந்த ஒரு பிராமணனாலும் தாங்கிக் கொள்ளவே முடியாது,

1

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

புகுந்து விளையாடும் அரசியல் சாணக்யத்தனம்!

தமிழ்நாட்டில் வசிக்கும் பிராமணர்களில் பெரும் பகுதியினர் திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரானவர்கள் அல்லது குறைந்தபட்சம் திராவிடக் கட்சிகள் தங்களை ‘மற்றவர்களாக, எதிரிகளாக’ கட்டமைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை மனதுக்குள் வரித்துக்கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பிறகு, அவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். அதாவது அப்போது காங்கிரஸை தேசியவாதம் பேசும் கட்சியாகவும், திராவிடக் கட்சிகளை பிரிவினைவாதம் பேசும், பிராமணர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட கட்சிகளாகவும் அவர்கள் உருவகப்படுத்திக்கொண்டார்கள். நடைமுறையில் இதிலெல்லாம் எந்த அளவுக்கு உண்மையும் உண்டு, கற்பனைகளும் உண்டு என்பது அரசியலைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தமிழ்நாட்டளவில் காங்கிரஸ் தன் தனித் தன்மையை இழந்த பிறகு, அதாவது காங்கிரஸ் திமுக, அதிமுக என இரு திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறிப் பயணிக்க ஆரம்பித்த பிறகு, அவர்கள் பலமிழந்த காங்கிரஸுக்கும், சித்தாந்த எதிரியான திமுகவுக்கும் மாற்றாக அதிமுகவை ஆதரிப்பவர்களாக மாறிப்போனார்கள். எம்ஜிஆர் காலத்தில் இந்த மனநிலை ஆரம்பித்திருந்தாலும், ஜெயலலிதா பிராமணர் என்பதால், அவரது தலைமையை ஏற்றுக் கொள்வதில், அல்லது ஜெயலலிதா என்கிற பிராமணரது தலைமையிலான அதிமுக என்பது பிராமணர்களின் இயல்பான தேர்வாக இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களில் கூட மத்திய அரசியல் என்று வரும்போது அவர்களுக்கு காங்கிரஸை விட்டால் வேறு தேர்வுகள் இல்லாத நிலைதான் இருந்தது.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இந்த நிலை, வாஜ்பாயி தலைமையில் பாஜக முதல்முறை ஆட்சி அமைக்கும் வரை நீடித்தது. வாஜ்பாயி அரசில் திமுக அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டில் இன்றைக்கு இருக்கும் அளவுக்கு பாஜகவுக்கு பிராமணர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. வாஜ்பாயி தலைமையிலான பாஜகவுக்கு ஆதரவு என்பதை விட, தமிழ்நாட்டு அளவில் ஜெயலலிதாவின் அதிமுக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். ஆனால் அதன் பிறகான நிலைமை வேறு.

3
ஜெ.ஜெயலலிதா

மன்மோகன் சிங் தலைமையிலான, திமுக அங்கம் வகித்த கூட்டணி மத்தியில் பத்து வருடங்கள் தொடர்ந்து பதவியில் இருந்தபோது, தமிழ்நாடு மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும், பாஜகவின் செல்வாக்கோ, பாஜக வுக்கு தமிழ்நாட்டு பிராமணர்களின் ஆதரவு என்பதோ குறிப்பிட்டுச் சொல்லும் படியான ஒன்றாக இல்லை. பிராமணர்களின் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் ஒரு சின்ன உடைப்பை ஏற்படுத்தியது நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியமைத்த சம்பவம்தான்.

4

வீடியோ லிங்:

அந்த நிகழ்வுதான் தமிழ்நாட்டில் முதல் முறையாகப் பல பிராமணர்கள் வெளிப்படையாகத் தங்களை பாஜக ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்ட முக்கியத் தருணம் எனலாம். நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் ஆரம்ப காலத்தில் அவர் ‘ஊழலுக்கு எதிரானவர்’ என்கிற மாயையை அகில இந்திய அளவில் சாதாரணப் பொதுமக்களிலிருந்து, அறிவுத்தளத்தில் இயங்குபவர்கள் வரை ஏற்படுத்தியிருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இன்று பாஜகவையும், மோடியையும் பற்றிய எதிர்கருத்துநிலைக்கு வந்து சேர்ந்திருக்கும் பல பிரபலங்களும் கூட, பணமதிப்பு நடவடிக்கையின் போது அதை ஆதரித்தவர்கள்தான்.

பிறகு, தமிழ்நாட்டு பிராமணர்களின் அரசியல் பார்வையில் மிக முக்கியமான திருப்பம் என்பது கடும் விமர்சனங்களுக்கிடையே மோடி, பாஜக இரண்டாவது முறையாக, முதல் முறையை விட அதிகப் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்ததும், முன்னெப்போதும் இல்லாத வகையில், அசுர பலத்துடன், விமர்சனங்களுக்குக் கொஞ்சமும் காது கொடுக்காத சர்வாதிகாரத் தன்மையுடன் இந்துத்துவ கொள்கைகளை அது செயல்படுத்த ஆரம்பித்ததும், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென நிகழ்ந்த ஜெயலலிதாவின் மரணமுமேயாகும்.

அமிர்ஷா - எடப்பாடி
அமிர்ஷா – எடப்பாடி

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் அதிமுக அரசதிகாரத்தில் இருந்த காலம்தான், ஒரு கட்சியாக அதன் தேய்வு காலமும் ஆரம்பித்தது. ஜெயலலிதா அப்பல்லோவுக்குள் நுழைந்த முதல் தினத்திலிருந்து இது ஆரம்பிக்கிறது. உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன என்பதன் ரகசியத்தை இன்று வரை காத்து வருவது அதிமுகவின் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்களோ, ஜெயலலிதாவின் அணுக்கத் தோழி சசிகலாவோ அல்ல, பாஜகதான் அதன் பின்னாலிருந்தது என்பது இன்று சாதாரண மக்கள் வரை தெரிந்திருக்கிறது.

அதன் பிறகான எடப்பாடி பழனிச்சாமியின் காலத்தைய ஆட்சி மட்டுமல்ல அதிமுக கட்சியும் மத்தியில் ஆளும் பாஜக என்ன சொல்கிறதோ, அதைச் சிரமேற்கொண்டு செய்யும் ஒரு அமைப்பாக மட்டுமே மாறிவிட்டது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்த வரை பாஜகவுக்கான இடமென்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமில்லை. கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதில் திமுக மட்டுமே தன்னைத் தயாராக வைத்திருந்தது. எந்த விதமான குழப்பமுமின்றி ஸ்டாலின் அதன் இயல்பான தலைவராக மேலெழுந்து வந்தார். அதே நேரம் அதிமுகவில் கடும் குழப்பம் நிலவினாலும், இறுதியில் பாஜகவின் ஆதரவோடு, மோடி, அமித்ஷாவின் ஆசிகளோடு எடப்பாடி பழனிச்சாமி அதன் தலைவராக நீடிக்கிறார். ஓ. பன்னீர்செல்வம் தானாக ஒதுங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதே நேரம், தமிழகக் கட்சிகளில் எதிர்க்கட்சியாக இரண்டாம் இடத்திலிருக்கும் அதிமுக மெல்ல, மெல்ல பாஜகவின் பிடிக்குள் சென்று கொண்டிருப்பது வெளிப்படையான ஒன்றாக மாறிவிட்டது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இந்தச் சூழலில், இன்றைய தேதியில் காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் திமுகவுக்கு மாற்று என்கிற அளவிலேயே இவற்றிற்கு ஆதரவு நிலையெடுத்த பிராமணர்கள் இன்று பாஜகவைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிலையை வந்தடைந்திருக்கிறார்கள். பாஜக அவர்களுக்கு இயல்பான தேர்வாக மாறியிருக்கிறது. மத்தியில் பாஜகவுக்கு எதிரி என்ற வகையில் காங்கிரஸும், மாநிலத்தில் திமுகவும் பிராமணர்களால் மிகக் கடுமையாக எதிர்க்கப்படும் கட்சிகளாக மாறியிருக்கின்றன. அதே நேரம் இத்தனை நாள் மாநில அளவில் அவர்களது தேர்வாக இருந்த அதிமுகவை “இதுவும் திராவிடக் கட்சிதான்” என்கிற அளவில் முழுக்க ஒதுக்கி வைத்துவிட்டு, பாஜகவை முழு வீச்சில் ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுகாலம் வரை, தமிழ்நாட்டின் அரசியல் பேசுபொருள்களில் வெகுசன மனநிலைக்கு எதிரான ஹிந்திக்கு ஆதரவு, கோயில்களிலிருந்து அறநிலையத்துறையை வெளியேற்றுவது, சனாதன ஆதரவு, இந்து மதத்துக்கு ஆபத்து என்கிற கற்பனை வாதம், இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு, சமூக நீதிக்கு எதிர்ப்பு, மதச்சார்பின்மைக்கு மறுப்பு, இந்தியாவை ஹிந்து ராஷ்ட்டிரம் என நிறுவுவது, இஸ்லாமிய வெறுப்பு, நீட் தேர்வுக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் பலவீனமான குரலில் ஒலித்துக்கொண்டிருந்த அவர்களது குரல், இப்போது பாஜகவின் தயவில் சத்தமாக, வீரியமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஆனால், இன்னொருபுறம் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவரான பிறகு அவர் அதிரடியாகச் செயல்பட்டு தமிழ்நாட்டில் பாஜகவைத் தினசரி பேசு பொருளாக வைத்திருந்தாலும், ஒரு தரப்பு பிராமணர்களுக்கு அவரிடம் ஒரு விலக்கம் இருக்கிறது. மத்தியிலிருக்கும் பாஜகவுக்கு முழு வீச்சிலான ஆதரவு என்ற நிலைப்பாடு ஒரு பக்கம் இருந்தாலும், அண்ணாமலை பிராமணர் அல்லாத இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் தமிழ்நாடு பாஜக தலைவரான பிறகு, அதுவரை தமிழ்நாட்டு பாஜகவில் கோலோச்சிக்கொண்டிருந்த பிராமண முகங்களை அவர் திட்டமிட்டு ஓரங்கட்டுகிறார் என்பதும் அவர்களது எண்ணமாக இருக்கிறது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

கட்சியிலிருந்து ஹெச்.ராஜா, எஸ்.வீ.சேகர், கே.டி.ராகவன், காயத்ரி ரகுராம் போன்ற நபர்கள் மெல்ல ஓரங்கட்டப்பட்டதும், எஸ்.வீ.சேகர் உள்ளிட்ட பல்வேறு பிராமணர்கள் பாஜகவை ஆதரித்துக்கொண்டே அண்ணாமலைக்கு எதிராகப் பேசுவதும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக சமூக வலை தளங்களில் இடைநிலைச் சாதியைச் சார்ந்த பாஜக ஆதரவாளர்கள் ஏக மனதாக அண்ணாமலையைத் தங்களது தலைவ ராகக் கருதும் வேளையில் பிராமணர்களில் மிகப் பெரும்பாலோர், ஏன் கட்சி உறுப்பினர்களாகத் தங்களை அறிவித்துக்கொள்பவர்கள் கூட அண்ணாமலையையும், அவரது செயல் பாடுகளையும் விமர்சிப்பவர்களாகவும், அவரிடமிருந்து ஒதுங்கி நிற்பவர்களாகவும் தங்களை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

இது குறித்து நண்பரான பிராமணர் ஒருவரிடம் கேட்டபோது…  அவர் வித்தியாசமான ஒரு கருத்தைக் கூறினார். “பிராமணர்களை வேறொரு சாதிக்காரர், தன்னை விட உயர்வாக நடத்தினால் அதைப் பிராமணர்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்வார்கள், அதிகாரத்தினாலோ, பதவி யாலோ, பணம் உள்ளிட்ட பிற செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னை விடத் தாழ்வாக நடத்தினால், அவர்களிடம் பணிந்து கூடப் போய்விடுவார்கள், ஆனால் நீயும், நானும் சமம்தான் என்று தனக்கிணையாக நடத்துவதை மட்டும் எந்த ஒரு பிராமணனாலும் தாங்கிக் கொள்ளவே முடியாது, இதுவரை, கட்சியின் செயல்பாடுகளில், முடிவெடுக்கும் முன்னிலை யில் பெரும்பாலும் பிராமணர்களே இருந்த நிலையை அண்ணாமலை மாற்றியமைத்திருப்பதுதான் இதற்குக் காரணம்” என்றார்.

முக்குலத்தோர் மற்றும் கொங்கு வேளாளர்களுக்கு அதிமுக, வன்னியர்களுக்கு பாமக, நாயுடு இனத்தவர்களுக்கு தேமுதிக போன்றவற்றுக்கு மாற்றாக, இடைநிலை ஆதிக்க சாதிகளுக்கான கட்சியாக பாஜக தன்னைக் கட்டமைத்துக்கொள்ள முயலும் இவ்வேளையில் இதே காரணத்துக்காக அக்கட்சிகளை எதிர்த்த, தங்களுக்கான கட்சியாக பாஜகவை வரித்துக்கொண்டிருக்கும் தமிழக பிராமணர்களின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

– இளங்கோவன் முத்தையா

 

வீடியோ லிங்:

 

Furry genius pet hospital

1 Comment
  1. சுகுமாரன் says

    பிராமணர்கள் தங்களுக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்டது ஆர்எஸ்எஸ் அவர்கள் மற்றவர்களை வைத்து அவர்களுக்கு ஆதரவாக பேச வைப்பதே அவர்களின் சாணக்கியம்

Leave A Reply

Your email address will not be published.