அங்குசம் பார்வையில் ‘போர்’ படம் எப்படி இருக்கு ..
அங்குசம் பார்வையில் ‘போர்’ படம் எப்படி இருக்கு .. தயாரிப்பு: டி சீரிஸ், கேட்வே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா. பிஜாய் நம்பியார், பிரபு ஆண்டனி, மது அலெக்ஸாண்டர். டைரக்ஷன்: பிஜாய் நம்பியார். ஆர்ட்டிஸ்ட்ஸ்: அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா ஸ்ரீனிவாசன், மெர்வின் ரொஸாரியோ. டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: ஜிம்ஸி காலித் & ப்ரஸ்லி ஆஸ்கர் டி சோசா, எடிட்டிங்: பிரியங்க் பிரேம்குமார், ஆர்ட் டைரக்டர்: மணிமொழியன் ராமதுரை, ஸ்டண்ட் : ரியாஸ் & ஹபீப், மியூசிக் டைரக்டர்ஸ்: சஞ்சித் ஹெக்டே, கெளரவ், துருவ் விஸ்வந்த், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: லக்ஷய் குமார், பி.ஆர்.ஓ.சதிஷ் குமார்.
பள்ளியில் படிக்கும் போது நண்பர்களாக இருக்கிறார்கள் காளிதாஸ் ஜெயராமும் அர்ஜுன் தாஸும். சக மாணவர்கள் தன்னை அடிக்கும் போது, அர்ஜுன் தாஸ் காப்பாற்றவில்லை என்ற கோபம், காளிதாஸுக்கு. அந்தக் கோபம் வன்மமாக மாறுகிறது. அர்ஜுன் தாஸ் படிக்கும் அதே கல்லூரியில் படிக்க வருகிறார் காளிதாஸ். இன்னும் அதிகமாக கொளுந்துவிட்டு எரிகிறது வன்மம். இந்த இருவருக்கிடையில் நடக்கும் மல்லுக்கட்டு தான் இந்த ‘போர்’.
மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்ததாலோ என்னவோ ‘அக்னி நட்சத்திரம்’, ‘ஆயுத எழுத்து’ இரண்டையும் மிக்ஸ் பண்ணி, மணிரத்னம் ஸ்டைலிலேயே சீன்களை வடிவமைத்திருக்கிறார் டைரக்டர் பிஜாய் நம்பியார். படத்தின் முதல் ஒரு மணி நேரம் காலேஜ் ஸ்டூடண்ட் அம்புட்டுப் பேரும் சரக்கு, தம், கஞ்சா என போதையிலேயே இருக்கிறார்கள். ஏம்ப்பா இப்படி..? நடுநடுவே மானே தேனே போட்டுக்கிற மாதிரி, மாணவர் பேரவைத் தேர்தல், அரசியல்வாதி மகள், சாதிப்பாகுபாடு, ரவுடியிஸம் என கலந்து கட்டி நம்மை சுத்தலில் விடுகிறார் டைரக்டர்.
அர்ஜுன் தாஸுக்கும் காளிதாஸ் ஜெயராமுக்கும் கதையில் சரிபாதி பங்கு பிரித்திருக்கிறார் டைரக்டர். இதில் அர்ஜுன் தாஸ் கரகர குரலில் பேசி கவனம் ஈர்க்கிறார் என்றால், கலகலப்பு, ஜாலி, ஆக்ரோஷம் இவற்றில் ஸ்கோர் பண்ணுகிறார் காளிதாஸ் ஜெயராம். ஹீரோயின்களில் சஞ்சனா நடராஜன் தான் டாப்.
பல காட்சிகளில் லேசாக தொய்வு ஏற்படும் போது, லைட் எனெர்ஜியை ஃபில் பண்ணியிருக்கிறார்கள் மியூசிக் டைரக்டர்கள். எடிட்டர் தான் கொஞ்சம் கண் அசந்துட்டார் போல. இருபது நிமிட சீன்களை வெட்டி எறியாம விட்டுட்டாரு.
இந்த ‘போர்’ மிரள வைக்கவில்லை.
-மதுரை மாறன்