அங்குசம் பார்வையில் ‘ரணம்’ – அறம் தவறேல் படம் எப்படி இருக்கு ! .
அங்குசம் பார்வையில் ‘ரணம்’ –அறம் தவறேல். தயாரிப்பு: ‘மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் ‘ மது நாகராஜன். எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: உதயகுமார் பாலாஜி. டைரக்டர்: ஷெரீஃப். ஆர்ட்டிஸ்ட்ஸ்: வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சுரேஷ் சக்கரவர்த்தி, சரஸ் மேனன், பிரனதி, டார்லிங் மதன். டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: பாலாஜி கே.ராஜா, இசை: அரோல் கரோலி, ஆர்ட் டைரக்டர்: மணிமொழியன் ராமதுரை, எடிட்டிங்: முனிஷ். ஸ்டண்ட் : பில்லா ஜெகன், ஓம் பிரகாஷ், பிஆர்ஓ: சதிஷ் குமார்.
சென்னையில் சில இளம் பெண்கள், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ஆங்காங்கே வீசப்படுகிறார்கள்.முகம் சிதைந்த நிலையில் இருக்கும் அந்த சடலத்தை அடையாளம் காண முடியாமல் போலீஸ் திண்டாடும் போது, சிதைந்த முகத்தை வைத்து அச்சு அசலாக ஒரிஜினல் முகத்தை வரையும் திறமை கொண்ட ‘ரீ கன்ஸ்ட்ரக்ஷன்’ ஓவியராக இருக்கும் வைபவ் உதவியை நாடுகிறது போலீஸ். அந்த கேஸ் சம்பந்தமான க்ரைம் டைரியும் எழுதிக் கொடுக்கிறார் வைபவ்.
இவரின் ஓவியத்தை வைத்து குற்றவாளியை போலீஸ் நெருங்குகிறது. ஆனால்….? இதற்கு விடை தான் இந்த ‘ரணம்’. அசாத்திய ஆற்றல் மிக்க ஓவியர் சிவாவாக ஹீரோ வைபவ் படத்தின் முதல் பாதி முழுக்க சரக்கும் தம்முமாக இருக்கிறார். அவரின் புத்திசாலித்தனமான செயல்கள் இன்ஸ்பெக்டர் தான்யா ஹோப்புக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது. ஏங்க எல்லா சீன்லயும் முகம் ரொம்ப ‘டல்’ லடிக்குது. என்ன ஒண்ணு படத்தின் இடைவேளை வரை எல்லா போலீசும் ” சிவாவைக் கூப்டு, சிவாவை வரச்சொல்” என சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
இல்லேன்னா ” இளம் பெண் மர்ம மரணம். கொலையாளி யார்? வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் திடீர் மாயம்” என டிவியில் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டே இருப்பது நமக்கு ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்பதை இடைவேளைக்குப் பிறகு நந்திதா ஸ்வேதாவின் செண்டிமெண்ட் ஃப்ளாஷ் பேக் வைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக்கி சமாளித்திருக்கும் டைரக்டர் ஷெரீஃப்பை பாராட்டலாம்.
இதுவரை காமெடி ஜானரில் மட்டுமே ஜமாய்த்த வைபவ்விற்கு இந்த க்ரைம் ஜானர் ஓரளவு ஓர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தில் வைபவ் ஜோடியாக வருபவருக்கு அவ்வளவாக வேலை இல்லை, சீன்களும் இல்லை. நந்திதா ஸ்வேதாவும் அவரது மகள் ஆதினியாக வரும் பெண்ணும் தான் மனதில் நிற்கிறார்கள். கதையின் ட்விஸ்ட் கான்ஸ்டபிளாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி தான். இந்த க்ரைம் த்ரில்லர் திரைக்கதையை மேலும் த்ரில்லிங்காக காட்டுவதற்கு நன்றாகவே ஒர்க் பண்ணியிருக்கிறார்கள் இசையமைப்பாளர் அரோல் கரோலியும் கேமரா மேன் பாலாஜியும். –மதுரை மாறன்.